For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கட்டுவது வேட்டி, உண்பது அரிசி, காப்பது கோதுமையையா?.. ப.சிதம்பரம் மீது ராமதாஸ் தாக்கு

By Chakra
Google Oneindia Tamil News

Ramadoss
சென்னை: அரிசி வேளாண் விளைபொருளே இல்லை என்று கூறி அதன் மீதான சேவை வரியை விதித்துள்ள மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அரிசி, பருத்தி ஆகிய வேளாண் விளைபொருட்கள் மீது சேவை வரி விதித்து மத்திய நிதித்துறை ஆணையிட்டிருக்கிறது. அதன்படி, இனி அரிசி, பருத்தி ஆகியவை பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் கிடங்கு வாடகை, அவற்றை ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கான வாடகை ஆகியவற்றின் மீது 12.36% வரி விதிக்கப்படும் என்று நேரடி வரிகள் ஆணையம் அறிவித்துள்ளது.

வேளாண் விளைபொருட்கள் மிகவும் அத்தியாவசியமானவை என்பதால் அவற்றின் மீது எவ்வித வரியும் விதிக்கப்படுவதில்லை. நூற்றுக்கும் மேற்பட்ட பொருட்கள் குறித்த சேவைகளுக்கு சேவைவரி விதிக்கப்படும் போதிலும், வேளாண் பொருட்களுக்கு அதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு வந்தது.

ஆனால், திடீரென கடந்த டிசம்பர் மாதம் 27 தேதி மத்திய நிதியமைச்சகம் பிறப்பித்த ஆணையில், அரிசி மற்றும் பருத்தியை வேளாண் விளைபொருட்களாக கருத முடியாது என்பதால் அவற்றின் மீதான சேவைகளுக்கு சேவை வரி விதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, இந்த வரி கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் முன் தேதியிட்டு வசூலிக்கப்பட இருக்கிறதாம்.

அரிசியும், பருத்தியும் எப்படி வேளாண் விளைபொருட்கள் இல்லாமல் போகும்? என்று கேட்டால், அதற்கு அதிபுத்திசாலித்தனமான பதில் ஒன்று மத்திய அரசு சார்பில் அளிக்கப்பட்டிருக்கிறது.

அதாவது, நெல்தான் வேளாண் விளைபொருள் என்றும், நெல்லில் இருந்து உமி நீக்கப்பட்ட பிறகுதான் அரிசி கிடைக்கிறது என்பதால் அதை வேளாண் விளைபொருளாக கருத முடியாது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதேபோல், பருத்தியில் இருந்து கொட்டை நீக்கப்படுகிறது என்பதால் அது வேளாண் விளைபொருள் என்ற தகுதியை இழந்துவிடுகிறது என்றும் மத்திய அரசு விளக்கமளித்திருக்கிறது.

இந்த விளக்கத்தை அளித்திருப்பவர் யார் தெரியுமா? வேட்டிக் கட்டிய தமிழர் என்று போற்றப்படும் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம்தான் இந்த வேடிக்கையான பதிலைக் கூறி வெதும்ப வைத்திருக்கிறார்.

இந்திய நிதிச் சட்டத்தின் 65பி (5)வது பிரிவில் வேளாண் விளைபொருள் என்வதற்கான வரையரை அளிக்கப்பட்டிருப்பதாகவும், அந்த வரையறைக்குள் அரிசி வரவில்லை என்பதால்தான் அதற்கு சேவை வரி விதிக்கப்படுவதாகவும் சிதம்பரம் தெரிவித்திருக்கிறார்.

நெல்லில் இருந்து பெறப்படும் அரிசி வேளாண் விளைபொருள் இல்லை என்று ஏதாவது ஒரு சட்டம் கூறுமானால் தவறு அந்த சட்டத்தில்தான் இருக்கிறதே தவிர, அரிசியிடம் இல்லை. இத்தகைய சூழலில் சட்டத்தை திருத்துவதற்குதான் முயற்சி செய்ய வேண்டுமே தவிர, அரிசிக்கு சேவை வரி விதிக்க முயல்வது அறிவார்ந்த செயலல்ல.

அதுவும் அரிசியை முதன்மை உணவு தானியமாகக் கொண்ட தமிழ்நாட்டை சேர்ந்த நிதியமைச்சர் ப.சிதம்பரமே இப்படி ஒரு பாரபட்சமான நடவடிக்கையை எடுத்திருப்பதுதான் அதிர்ச்சியளிக்கிறது.

வட இந்தியர்கள் அதிகம் உண்ணும் கோதுமை மீது இப்படி ஒரு சொத்தைக் காரணத்தைக் கூறி சேவை வரி விதிக்கப்பட்டிருந்தால், அதற்குக் காரணமான மத்திய அரசு இந்நேரம் கவிழ்ந்திருக்கும். ஆனால், தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களோ அல்லது தமிழக அரசோ இதுபற்றி வாய் திறக்கவில்லை என்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

நாடாளுமன்றத்தில் தினமும் அமளி செய்யும் தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட இப்பிரச்னையை எழுப்பாதது வருத்தமளிக்கிறது.

அரிசி மீது சேவை வரி விதிக்கப்பட்டால் அதன் விலை கடுமையாக உயரும். இதனால் பொதுமக்களும், அரிசி வணிகர்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இதேபோல் பருத்தி விலை உயர்வால் பஞ்சாலைகளும், நெசவாளர்களும் கடுமையாக பாதிக்கப்படுவர். எனவே, இதையெல்லாம் கருத்தில் கொண்டு அரிசி, பருத்தி மீதான சேவை வரியை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

English summary
PMK founder Dr. Ramadoss has condemned finance minister P.Chidambaram for levying service tax on Rice.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X