For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கூவம் நதியை சீரமைக்க ரூ.1935 கோடி செலவில் திட்டம்: ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: கூவம் நதியை முழுமையாகச் சீரமைத்திட ஒருங்கிணைந்த கூவம் நதிசுற்றுச் சூழல் சீரமைப்புத் திட்டப் பணிகள் மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்பட உள்ளது.1934 கோடியே 84 லட்சம் ரூபாய் மதிப்பிலான திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

தமிழ்நாடு அரசு, சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள நீர் நிலைகளை சீரமைத்திட அனைத்து சார் துறைகளுடன் ஒருங்கிணைந்து செயலாற்றும் பணியை சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை மூலம் மேற்கொண்டு வருகிறது.

Rs 1935 crore plan: Jayalalitha laid foundation stone clean Kooum

கூவம் நதியை முழுமையாகச் சீரமைத்து மீட்டெடுப்பதற்கான ஒரு பெரும் திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தை, ‘சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை' ஒருங்கிணைப்பு அமைப்பாக இருந்து செயல்படுத்தும் என்று 2014-2015 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது.

அதன்படி கூவம் நதியை முழுமையாகச் சீரமைத்திட ஒருங்கிணைந்த கூவம் நதிசுற்றுச் சூழல் சீரமைப்புத் திட்டப் பணிகள் மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக முதல் 3 ஆண்டுகளில் குறுகிய கால திட்டமாக 60 துணை திட்டங்களும், இரண்டாம் கட்டமாக 4 முதல் 8 ஆண்டுகளில் 7 துணை திட்டங்களும், மூன்றாம் கட்டமாக சீரமைப்புப் பணிகள் முடிவடைந்தவுடன் பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படும். இத்திட்டத்தின் மொத்த மதிப்பு 1934 கோடியே 84 லட்சம் ரூபாய் ஆகும்.

ஒருங்கிணைந்த கூவம் நதிசுற்றுச் சூழல் சீரமைப்புத் திட்டத்தின் முக்கிய நோக்கம், கழிவுநீர் கூவம் நதியில் கலப்பதை தடுக்க மாற்று ஏற்பாடுகள் செய்தல், திடக்கழிவு மேலாண்மை, நதியின் வெள்ளநீர் கொள்ளளவை மேம்படுத்தி பராமரித்தல், கூவம் நதிக்கரையில் வாழும் மக்களுக்கான மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்வுக்கான திட்டமிடல், பல்லுயிர் பெருக்கத்தை மீட்டு சுற்றுச்சூழலை மேம்படுத்தி நகர்ப்புரங்களில் நதியின் கரையோரங்களில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளுதல் ஆகும்.

கூவம் நதியின் சீரமைப்புப் பணிக்காக மூன்று ஆண்டுகளில் குறுகியகால திட்டமான 60 துணை திட்டங்களை செயல்படுத்திட தமிழ்நாடு அரசு 604 கோடியே 77 லட்சம் ரூபாய் நிர்வாக அனுமதி வழங்கியுள்ளது.

சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை மூலம் ஆவடி அருகேயுள்ள பருத்திப்பட்டு அணையிலிருந்து கூவம் முகத்துவாரம் வரையிலான 27.3 கிலோ மீட்டர் நீளமுள்ள கூவம் நதிப் பகுதிகளை சீரமைத்திட 604 கோடியே 77 லட்சம் ரூபாய் செலவிலான ஒருங்கிணைந்த கூவம் நதிசுற்றுச் சூழல் சீரமைப்புத் திட்டத்திற்கு 15.9.2015 அன்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்.

மேலும், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தால் கோயம் பேட்டில் நாளொன்றிற்கு 120 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட 87 கோடியே 35 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்; சென்னை மாநகருடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர கற்றுவாரியத்திற்கு 19 கோடியே 62 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 82 அலுவலகக் கட்டடங்கள்; சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் 58 பணிமனை அலுவலகங்கள் மற்றும் சென்னை மாநகராட்சி 20 கோட்ட அலுவலங்களில் 3 கோடியே 22 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 78 பொது வரிவசூல் மையங்கள்; என மொத்தம் 110 கோடியே 19 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான கட்டடங்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

சென்னை, மீனம்பாக்கத்தில் சுமார் ஐந்தாயிரம் பொது மக்கள் பயனடையும் வகையில் சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தால் 59லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் வழங்கல் திட்டப்பணிகள் மற்றும் 4 கோடியே 11 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை திட்டப்பணிகள்; என மொத்தம் 4 கோடியே 70 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்.

முதல்வர் ஜெயலலிதாவால் அடிக்கல் நாட்டியும், திறந்தும், துவக்கியும் வைத்த திட்டங்களின் மொத்த மதிப்பு 719 கோடியே 67 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் ஆகும். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் வேலுமணி, மேயர் சைதை துரைசாமி, தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், முதன்மைச் செயலாளர் பணீந்திரரெட்டி, மேலாண்மை இயக்குநர் சந்திரமோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

English summary
Chief Minister Jayalalitha laid foundation stone for the Koovam water restoration scheme through Video Conferencing.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X