ஆசிரியர்கள் டிரான்ஸ்பரில் மாபெரும் முறைகேடு... அதிகாரிகள் இடமாற்றம்- அமைச்சர் தலை தப்பியது

Posted By:
Subscribe to Oneindia Tamil
S.Kannappan appoints new school Education Director
சென்னை: ஆசிரியர்கள் பணியிடமாற்றத்தில் முறைகேடு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை அடுத்து பள்ளி கல்வித்துறை இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக ச.கண்ணப்பன் புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நாளை (புதன்கிழமை) பதவி ஏற்கிறார்.

பள்ளிக்கல்வித்துறை இயக்குனராக கடந்த ஒராண்டாக ராமேஸ்வர முருகன் பணியாற்றி வந்தார். ஆசிரியர் பணியிடமாற்றம் தொடர்பாக இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெங்களூர் சிறையில் இருந்த போது பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து தென் மாவட்டங்களில் 3 ஆயிரம் ஆசிரியர்களுக்கு அவசர அவசரமாக பழைய தேதியிட்டு பணியிடமாற்றம் வழங்கப்பட்டது.

இதுகுறித்து, தகவல் அறிந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வீரமணி தகுந்த ஆதாரங்களுடன், நேரடியாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபீதாவிடம் சென்று குற்றம் சுமத்தினார்.

இது தொடர்பாக சபீதா, துறை ரீதியாக விசாரணை நடத்தியதில் 3 ஆயிரம் ஆசிரியர்கள் டிரான்ஸ்பர் விவகாரத்தில் ஊழல் நடந்திருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது.

இதையடுத்து, ஆசிரியர்கள் பணியிட மாற்றத்தை கவனித்து வந்த பள்ளிக்கல்வித்துறையை சேர்ந்த சூப்பிரண்ட்டுகள் ரவி, முரளி உள்பட 5 பேர் வேறு இடங்களுக்கு அதிரடியாக மாற்றப்பட்டனர். அப்போது, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வர முருகனும் அந்த பதவியில் இருந்து விரைவில் டிரான்ஸ்பர் செய்யப்படுவார் என்ற தகவல்கள் பரவியது.

இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன், மாநில ஆசிரியர் பயிற்சி கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அதிரடியாக இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மாநில ஆசிரியர் பயிற்சி கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் கண்ணப்பன், பள்ளிக்கல்வித்துறை இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.

இதற்கான உத்தரவை முதல்வர் பன்னீர்செல்வம் இன்று பிறப்பித்துள்ளார். புதிய இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ள கண்ணப்பன் நாளை பதவியேற்கவுள்ளார்.

டிரான்ஸ்பர் விவகாரத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் தலை உருளும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முறைகேடு செய்தது யார் என்று கண்டுபிடிக்கப்பட்டதால் அமைச்சர் வீரமணியின் தலை தப்பியுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
S.Kannappan will be the new school Education Director. Mr.Rameshwara Murugan was shifted and posted as Director of Tamil Nadu State Council of Educational Research and Training

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற