For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அடிமை அரசியலில் இருந்து விடுபட 'உரிமை அரசியலை' கையில் எடுப்போம்!... உதயகுமாரன் அழைப்பு!

அடிமை அரசியலில் இருந்து விடுபட உரிமை அரசியலை கையில் எடுப்போம் என்று சமூக ஆர்வலரும், அணுஉலை எதிர்ப்பாளருமான சு.ப.உதயகுமாரன் அழைப்பு விடுத்துள்ளார்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

சென்னை: இந்தியத் தேசிய அரசியல், திராவிடத் தேசிய அரசியல், ஆண்டாள் அரசியல், ஆன்மீக அரசியல், கருப்பு-காவி அரசியல் என 'அடிமை அரசியல்' பல வழிகளில், வடிவங்களில் நம்மைத் தாக்குகிறது. நாம் 'உரிமை அரசியல்' எனும் ஆயுதத்தைக் கையிலெடுப்போம், ஒன்று படுவோம் என்று சமூக ஆர்வலர் சு.ப. உதயகுமாரன் அழைப்பு விடுத்துள்ளார்.

அணுஉலை எதிர்ப்பாளர் உதயகுமாரன் இது குறித்து முகநூலில் பதிவிட்டுள்ளதில்: தமிழர்களாகிய நம்மை அடிமைப்படுத்தி, நமது வளங்களைத் திருடி, வாழ்வாதாரங்களை சிதைத்து, நமது வருங்காலத்தை அழித்தொழிக்க பல்வேறு தன்னலவாத தீய சக்திகள் தங்களாலான அனைத்தையும் செய்து வருகின்றனர். பாசிச சக்திகள், ஊழல்வாதிகள், ஊதாரிகள், சினிமா நடிகர்கள் என யார் யாரெல்லாமோ நம்மை அடக்கியாள ஆசைப்படுகின்றனர்.

S.P.Udhayakumaran calls for a change in politics with the promotion of Rights politics

நாமோ சிறு சிறு குழுக்களாக அங்காங்கே உள்ளூர் அளவில் இயங்கிக் கொண்டிருக்கிறோம். உப்புப் பெறாத காரணங்களுக்காக ஒன்று சேர மறக்கிறோம், அல்லது மறுக்கிறோம். இது தீய சக்திகள் தங்கு தடையின்றி இயங்குவதற்கும், எகத்தாளமாய் ஆடுவதற்கும் ஏதுவாக அமைகிறது. நாம் அனைவரும் கைகோர்ப்பது காலத்தின் கட்டாயமாக மாறியிருக்கிறது.

நீங்கள் 5 பேர் கொண்ட குழுவோ, அல்லது 5,000 பேர் கொண்ட பேரியக்கமோ, யாராக இருந்தாலும் "பொது அடிப்படை வேலைத்திட்டம்" (Common Minimum Program) ஒன்றை வகுத்துக் களமாடுவோம். பங்கேற்கும் அனைத்துக் குழுக்களும் தங்கள் கொடி, கொள்கைகள், சின்னம், சிறப்புத் தன்மைகள், பதாகை, பதவிகள், உறுப்பினர் சேர்க்கை, எதிர்காலத் திட்டம் என எதையும் கைவிட வேண்டியதில்லை. உங்களுக்கே உரித்தான அடையாளத்தை, சுதந்திரத்தை, சார்பின்மையை அப்படியே வைத்துக் கொள்ளலாம்.

கீழ்க்காணும் விஷயங்களில் மட்டுமாவது ஒத்தக்கருத்துடைய அரசியல் கட்சிகள் அனைவரும் ஒரே புள்ளியில் கூடுவோம்; ஒரே நிலைப்பாட்டைக் கையிலெடுப்போம், ஒன்றாக சேர்ந்து இயங்குவோம்:
[1] தமிழருக்கெதிரான சாதீய, மதவாத, பாசிச அரசியலை எதிர்ப்பது,
[2] தமிழகத்தின் இயற்கை வளங்கள் மற்றும் இயற்கை வள இறையாண்மையைப் பாதுகாப்பது,
[3] அனைத்துத் தரப்பு மக்களின், குறிப்பாக விவசாயிகள், மீனவர்கள், சிறு வணிகர்கள், நெசவாளர்கள், தொழிலாளர்கள் போன்றோரின் வாழ்வுரிமைகள் மற்றும் வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பது,
[4] தமிழை, தமிழரின் மொழி உரிமையைப் பாதுகாப்பது,
[5] தமிழகத்தில் தமிழக அரசுப்பணிகளில் 100 விழுக்காடு வேலை வாய்ப்புக்களையும், மத்திய அரசின் மற்றும் தனியார் நிறுவனங்களின் 90 விழுக்காடு வேலை வாய்ப்புக்களையும் தமிழருக்கே வழங்குவது.

இப்பிரச்சினைகள் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும், போராட்டங்களையும் சேர்ந்தே நடத்துவோம். தமிழகம் முழுவதும் இயங்கிக்கொண்டிருக்கும் சிறிதும், பெரிதுமான இயக்கங்கள் அனைவரும் இந்தக் கூட்டுமுயற்சியில் இணைந்துகொள்வோம். நம்மிடையே நிலவும் கருத்து வேறுபாடுகள், மனக்கிலேசங்கள், அணுகுமுறை மாறுபாடுகள் ஆகியவற்றின்மீது கவனம் செலுத்தாமல், நாம் நம் மக்களுக்காக எப்படி இணைந்து செயல்பட முடியும் என்பது குறித்து சிந்திப்போம், செயல்படுவோம்.

ஒரு புதிய துவக்கத்துக்காக எட்டு கோடி தமிழ் மக்களையும் அணியமாக்காமல், இங்கே எந்தப் புரட்சியும் நடக்காது, எந்த மறுமலர்ச்சியும் வராது. நம் மக்களை அணியமாக்குவது எப்படி?

[1] மாவட்டங்கள்தோறும் ஊர் ஊராக, தெருத்தெருவாக, வீடு வீடாகச் சென்று நாம் மக்களை சந்தித்தாக வேண்டும். துண்டுப்பிரசுரங்கள், சிறு கையேடுகள் கொடுத்து அவர்களை நேரில் சந்தித்துப் பேசியாக வேண்டும். சுவரொட்டி, முகநூல், டிவிட்டர் போன்றவற்றை மட்டும் நம்ப முடியாது, கூடாது.

[2] மாநகரங்கள், நகரங்கள், கிராமங்களில் எல்லாம் குறிப்பிட்டத் தலைப்புகளில் பொதுவெளியில் விவாத மேடைகள் அமைத்து விவாதங்களை நடத்துவோம். எடுத்துக்காட்டாக, "தமிழகத்தின் வளர்ச்சி, தமிழகத்தில் விவசாயம், தமிழகத்தில் மீன்பிடித்தொழில், தமிழகத்தின் கல்வித்தரம், தமிழர்களின் வேலைவாய்ப்புக்கள்" போன்ற பல்வேறு தலைப்புக்களில் சினிமா செல்லப்பிள்ளைகளையும், அவர்களின் ரசிக சிகாமணிகளையும், பெரிய கட்சிகள் மற்றும் சிறிய கட்சிகளின் அரசியல் தலைவர்களையும் இணைத்துக்கொண்டு விவாதிக்க மேடைகள் அமைப்போம். மக்கள் நம் அனைவரின் நிலைப்பாடுகளையும் புரிந்து, தெரிந்து, தெளிவு பெறட்டும். அப்படிச் செய்தால்தான், போலிகளின் வேடங்களை, நிலைப்பாடுகளை மக்கள் அறிய முடியும். தமிழர்களின் முக்கியமான விடயங்கள் குறித்து மாநிலம் முழுக்க பொது விவாதங்கள் நடக்கும்போது, நம் மக்கள் தெளிவு பெறுவார்கள், நமது குடிமைச் சமூகம் மேம்படும்.

[3] இந்த ஆண்டில் ஒரு மாதத்தை தேர்வு செய்து, நமது கட்சிகள், இயக்கங்கள், ஆதரவாளர்களை இணைத்துக்கொண்டு தமிழகத்தின் 32 மாவட்டங்களுக்கும் ஒரு படையாகச் செல்வோம். அந்த மாதம் முழுவதும் இந்தப் படை நகரம், கிராமம், மேடு, பள்ளம் என அலைந்து திரிந்து, ஆங்காங்கேத் தூங்கி எழுந்து, மக்கள் தருவதை உண்டு, அவர்களோடு உரையாடி ஒரு மாற்றத்துக்கானத் தேவையை எடுத்துரைக்கட்டும். அந்த மாதக் கடைசியில் என்ன செய்திருக்கிறோம், என்ன பலன் கிடைத்திருக்கிறது என்று அனைவருமாய் ஒன்றுகூடி விவாதிப்போம். அடுத்தக் கட்டம் குறித்து அப்போது முடிவுகள் எடுக்கலாம்.

இந்தியத் தேசிய அரசியல், திராவிடத் தேசிய அரசியல், ஆண்டாள் அரசியல், ஆன்மீக அரசியல், கருப்பு-காவி அரசியல் என 'அடிமை அரசியல்' பல வழிகளில், வடிவங்களில் நம்மைத் தாக்குகிறது. நாம் 'உரிமை அரசியல்' எனும் ஆயுதத்தைக் கையிலெடுப்போம், ஒன்று படுவோம். கூட்டுத் தலைமை, கூடி முடிவெடுத்தல், சனநாயக முறை, வெளிப்படைத் தன்மையுடன், உண்மையாக, உறுதியாக, நேர்மையாக செயல்படுவோம். காலம் கடந்துபோய்க் கொண்டிருக்கிறது! இப்போது செய்யவில்லை என்றால், வேறு எப்போது செய்வது? நாம் செய்யவில்லை என்றால் வேறு யார் செய்வார்கள்?

ஒன்றை மட்டும் தெளிவாகப் புரிந்துகொள்வோம். வருமுன்னர் காப்பவன்தான் அறிவாளி, புயல் வந்தபின் காப்பவன் முழு மூடன். இந்த "பொது அடிப்படை வேலைத்திட்டம்" பற்றியும், இந்த செயல்திட்டம் குறித்தும், இவற்றை ஒருங்கிணைப்பது தொடர்பாகவும் தங்கள் எண்ணங்கள், கருத்துக்கள், ஆலோசனைகளைச் சொல்லுங்கள் என்று உதயகுமாரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

English summary
Social activist S.P.Udhayakumaran calls for a change in politics with the promotion of Rights politics, and seeks suggestions from all to him.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X