For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிரானைட் முறைகேடு: சகாயத்தின் கள ஆய்வுகள், சம்மன்கள், விசாரணைகள்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

மதுரை: கொலை மிரட்டல்கள், அதிகாரிகள் ஒத்துழைப்பின்மை, கிரானைட் குவாரி அதிபர்களின் உளவு பார்த்தல்கள் என இடர்பாடுகளுக்கு இடையே ஏழு கட்ட விசாரணையை முடித்துள்ள சகாயம், உயர்நீதிமன்றத்தில் விரைவில் தனது அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மதுரை மாவட்டத்தில் நடைபெற்றுள்ள கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில் குவாரிகளுக்கு நேரடியாகச் சென்று களஆய்வு மேற்கொண்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம், பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் அதிகாரிகளுக்கும், கிரானைட் குவாரி அதிபர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொண்டார்.

பலகட்ட விசாரணைகள் நடத்திய சகாயம், அதில் கண்ட உண்மை நிலவரங்கள், கிரானைட் குவாரிகளினால் பொதுமக்கள், நீர் ஆதாரங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் அதிகாரிகள், குவாரி அதிபர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தினார். இந்த விசாரணைகளின் அடிப்படையில் தயார் செய்யப்படும் அறிக்கையினை மார்ச் 2-ஆவது வாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மதுரை மாவட்டத்தில் விதிகளை மீறியும், அனுமதி இல்லாமலும் செயல்பட்ட கிரானைட் குவாரிகளால் அரசுக்குப் பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் குவாரி வாரியாக ஆய்வு செய்து, இழப்பு ஏற்படுத்தியதன் அடிப்படையில் அபராதம் நிர்ணயித்து அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கிரானைட் முறைகேடு தொடர்பாக தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஐஏஎஸ் அதிகாரி உ. சகாயத்தை கிரானைட் முறைகேடு குறித்து விசாரணை ஆணையராக நியமித்து உத்தரவிட்டது.

போலீஸ் முதல் பொதுமக்கள் வரை

போலீஸ் முதல் பொதுமக்கள் வரை

கடந்த ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி சட்ட ஆணையர் சகாயம் தலைமையிலான குழு இருந்து மதுரையில் தனது விசாரணையைத்

தொடங்கியது. கிரானைட் குவாரிகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி போலீஸ் தொடங்கி பொதுமக்கள் வரை மனு கொடுத்தனர். காவல்துறையினர், பொதுமக்கள், விவசாயிகளிடம் இருந்து இதுவரை 491 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

நரபலி புகார்கள்

நரபலி புகார்கள்

குவாரிகளுக்காக நிலங்கள், நீர்நிலைகள் அபகரிக்கப்பட்டது மட்டுமல்லாது மனித உயிர்களுக்கு நரபலி கொடுக்கப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. சிறுமிகள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், வடஇந்திய தொழிலாளர்கள் என பலரும் கிரானைட் குவாரிகளில் காவு வாங்கப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அழிக்கப்பட்ட சின்னங்கள்

அழிக்கப்பட்ட சின்னங்கள்

கிரானைட் குவாரிகளால் தொல்லியல் சின்னங்கள், விவசாய நிலங்கள், மேய்ச்சல் நிலங்கள், நீர்நிலைகளுக்கு ஏற்படுத்தப்பட்ட பாதிப்புகள் குறித்து நேரடியாக ஆய்வு செய்யப்பட்டு தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

மலைகளை விழுங்கி

மலைகளை விழுங்கி

71 ஏக்கரில் ஒரு கிலோ மீட்டர் வரை நீண்ட பொக்கிஷ மலையை கேக் போல் வெட்டி அதிலிருந்த கிரானைட் கற்களை எடுத்து விற்றுள்ளனர். 1993 முதல் 20 ஆண்டுகளுக்கு பிஆர்பியின் உறவினர் டாமினில் ஒப்பந்தம் செய்து இந்த மலையில் 3.81 லட்சம் கியூபிக் மீட்டருக்கும் மேல் கற்களை வெட்டியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விவசாய நிலங்கள்

விவசாய நிலங்கள்

கிரானைட் அதிபர்களின் அடாவடி மிரட்டலுக்கு பயப்படாத விவசாயிகளின் நிலங்களை கபளீகரம் செய்வதற்காக நீர் ஆதாரங்களை முற்றிலும் அழித்துள்ளனர். நீர் வரத்துக்கால்வாய்களை மூடியதால் விலைநிலங்களை பாலைவனப்பிரதேசமாக மாற்றியுள்ளனர். இதனையடுத்து அடிமாட்டு விலைக்கு விலைபேசியுள்ளனர் குவாரி முதலைகள்

கண்மாய்களை அழித்து

கண்மாய்களை அழித்து

பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 47 ஏக்கர் சிரமாணிக்கம் கண்மாயில் பல்லவா கிரானைட் நிறுவனத்தினர் கழிவுக் கற்களை கொட்டி முற்றிலும் அழித்திருந்தனர். இதனால் பல கண்மாய்களுக்கு 5 ஆண்டுகளாக தண்ணீரே செல்லாமல் பல நூறு ஏக்கர் பாசன நிலம் மேடாகிவிட்டது.

வாக்குமூலம்

வாக்குமூலம்

பாதிக்கப்பட்டவர்கள் அளித்த மனுக்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் நேரில் அழைக்கப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதிகாரிகளிடம் விசாரணை

அதிகாரிகளிடம் விசாரணை

பொதுப்பணித் துறை, கனிமவளம், வேளாண்மை, கால்நடைப் பராமரிப்பு, தொல்லியல், ஊரக வளர்ச்சி, வருவாய்த் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுக்கும் சம்மன் அனுப்பி வரவழைத்து கிரானைட் குவாரிகளால் ஏற்படுத்தப்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

குவாரி அதிபர்களுக்கும் சம்மன்

குவாரி அதிபர்களுக்கும் சம்மன்

7வது கட்ட விசாரணையிள் போது கிரானைட் குவாரி உரிமதாரர்களின் தரப்பின் கருத்தைப் பெறும் வகையில், 17 குவாரி உரிமதாரர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

கடந்த திங்கள் முதல் வியாழன் வரை நடந்த விசாரணையில் மேற்படி குவாரி உரிமதாரர்களின் வழக்கறிஞர்கள் ஆஜராயினர்.

இறுதிக்கட்ட விசாரணை

இறுதிக்கட்ட விசாரணை

பிப்ரவரி 23 ஆம் தேதிக்கு மேல் இறுதிக்கட்ட விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக பாதிக்கப்பட்ட தரப்பிடம் இருந்து கூடுதல் தகவல்கள் கேட்டு சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்ட விசாரணையில், இந்த தகவல்கள் பெறப்பட்டு விசாரணை நிறைவு செய்யப்படும் எனத் தெரிகிறது.

மார்ச் 12ல் அறிக்கை

மார்ச் 12ல் அறிக்கை

கிரானைட் குவாரிகளை ஆய்வு செய்து அறிக்கைத் தாக்கல் செய்ய 8 வாரம் அவகாசம் வழங்கக் கோரி ஐஏஎஸ் அதிகாரி சகாயம் சார்பில் கடந்த டிசம்பர் மாதம் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், கிரானைட் குவாரிகளை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய கூடுதலாக 8 வார கால அவகாசம் வழங்கி கடந்த டிசம்பர் 22ஆம் தேதி தீர்ப்பளித்து மார்ச் 12-ஆம் தேதிக்கு வழக்கை தள்ளிவைத்தனர்.

அறிக்கை தாக்கல்

அறிக்கை தாக்கல்

விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்வதற்காக உயர்நீதிமன்றம் அளித்த அவகாசம் நெருங்கி வருவதையடுத்து, அறிக்கை தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விசாரணைக் குழுவின் உத்தரவின்பேரில் வேளாண் இணை இயக்குநர் ஜெய்சிங் ஞானதுரை, ஓய்வு பெற்ற ஊரக வளர்ச்சித் துறை அதிகாரி ராஜசேகர் ஆகியோர் அறிக்கை தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மார்ச் இரண்டாவது வாரத்தில் விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

நடவடிக்கைகள் என்ன?

நடவடிக்கைகள் என்ன?

சகாயம் குழுவினர் அளிக்க உள்ள அறிக்கையின் அடிப்படையில் உயர்நீதிமன்றத்தின் உத்தரவு அமையும் என்பதால் கிரானைட் குவாரிகளின் பெயரில் இயற்கை வளங்களை சுரண்டி கோடி கோடியாக கொள்ளையடித்து ஏப்பம் விட்ட குவாரி முதலைகள் என்ன வழக்கு எப்போது பாயுமே என்று அச்சமடைந்துள்ளனர்.

English summary
IAS officer U Sagayam, the special Officer appointed by it to probe alleged granite mining irregularities in Madurai district, to file his report soon.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X