For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழர்களை தாக்கும் அடாவடித்தனத்தைக் கண்டித்து பேரணி, ஆர்ப்பாட்டம்... சீமான் அழைப்பு #cauvery

Google Oneindia Tamil News

சென்னை: தமிழர்களைத் தாக்கும் கன்னடர்களின் அடாவடித்தனத்தைக் கண்டித்து பேரணியும், ஆர்ப்பாட்டமும் நடத்தப்படும் என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:

'வான் பொய்ப்பினும், தான் பொய்யாக் காவிரி' என்று நெடுங்காலமாகப் புழக்கத்தில் இருந்துவரும் முதுமொழியே, காவிரி நதியுடன் நமக்கிருக்கும் பந்தத்திற்கான எடுத்துக்காட்டு. இயற்கை வழியில் தமிழர்களின் வாழ்வியலோடு இணைந்திருக்கும் காவிரியை, காலங்காலமாக மறுத்து, தமிழ்ப் பெருநிலத்தின் மாண்பான உழவுத்தொழிலை கேள்விக்குள்ளாக்குவது, தாங்கொணாத் துயரத்தையும், அளவுகடந்த வேதனையையும் அளிக்கிறது.

Seeman calls for rally and agitation against Karnataka violence

காவிரி நதிநீர் உரிமையானது கன்னடர்களுக்கு மட்டுமானது என்ற உளவியலை சித்தரித்த அரசியல் சக்திகள், மாநிலம் முலுவதும் விவசாயிகள் மற்றும் அனைத்து தரப்பினரின் போராட்டத்தை முடுக்கிவிட்டுள்ளது அதன் உச்சகட்டமாகத் தமிழகப் பேருந்துகளைச் சிறைப்பிடித்தல், தமிழக வாகனங்களைத் தாக்குதல், தமிழர்களைத் தாக்குதல் போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளது. கடந்தகாலங்களில் வெள்ளப்பெருக்கின்போது மட்டும் தண்ணீரைத் திறந்துவிடுவதும், மற்ற காலங்களில் திறக்க மறுப்பதுமானப் போக்கை தொடர்ந்து கடைப்பிடித்து வரும் கன்னட அரசுகள், உச்சநீதிமன்ற தீர்ப்பினை துச்சமாக மதிப்பதே வாடிக்கையாக வைத்துள்ளது.

கடந்த 2007ஆம் ஆண்டுக் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை குப்பையில் கிடத்தி, உச்சநீதிமன்ற இடைக்கால ஆணைகளை மதிக்கால் மீறி இப்படியான அடாவடித்தனம் செய்வது மிகவும் கன்டிக்கத்தக்கது. காவிரி நதிநீர் பங்கீட்டில் கர்நாடகாவுக்கு எந்தளவுக்கு உரிமை உள்ளதோ, அதே அளவுக்குத் தமிழகத்திற்கும், புதுவைக்கும், கேரளத்திற்கும் உரிமை இருக்கிறது என்பதே காவிரி நடுவர் மன்றத்தின் நிலைப்பாடு. "எந்த ஒரு நதிக்கும் எவரும் தனி உரிமை கோர முடியாது என்றும், அதன் தோற்றம் தொடங்கி முடியும் இடம்வரை உள்ள அனைவருக்கும் பொதுவானது என்பதுமே உலக ஒப்பந்த (RIPARIAN RIGHTS) விதிகளின் நடைமுறை". மேலும், கீழ்ப்பகுதியிலிருப்பவர்கள் நதியைப் பயன்படுத்தும் உரிமையைத் தலைப்பகுதியிலிருப்பவர்கள் தடுக்கக்கூடாது என்றும் பயன்பாட்டு உரிமையைப் பெரியண்ணன் மனோநிலையில் மறுக்ககூடாது என்றும் வரையறுக்கிறது. அப்படியிருக்கையில், விதிகளையும், சட்டங்களையும் தனது மக்களே மீறி நடக்க, போராடத்தூன்டும் ஒரு அரசை இந்த ஜனநாயக கட்டமைப்பில் எப்படிக் கையாள்வது என்பதே நமக்கு முன்னிருக்கும் கேள்வியாகும்.

'உனக்கு மேலே இருக்கிறேன், நான் போடும் பிச்சைதான் காவிரி நீர்' என்று தான்தோன்றித்தனமாகக் கர்நாடக அரசு செயல்படுவதே அதன் மக்களுக்கு ஊக்கமாகி 'காவிரி நீருக்குப் பதில் மூத்திரம் தருகிறோம்' என்று கேவலமான முழக்கங்களை முன்வைக்க, தமிழர்கள் மீது தாக்குதல் நடத்த காரணமாகிறது. சட்டத்தின் ஆட்சி (Rule of Law) என்று மார்தட்டிக்கொள்ளும் இந்திய பேரரசு அமைதிகாத்து, தமிழர் மீதான தாக்குதலை அவச்சொற்களை அனுமதிப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. இந்நாட்டின் ஒற்றுமையும், ஒருமைப்பாடும், 'தமிழகத்துக்குத் தண்ணீர் தர முடியாது என உச்ச நீதிமன்றத்தில் கூறும்படி கர்நாடக அரசுக்கு ஆலோசனை வழங்கினேன்' என இந்திய பெருநாட்டின் நடுவண் அமைச்சர் அனந்தகுமார் வெளிப்படையாகக் கூறும் அளவுக்குக் கேவல நிலையில் இருக்கிறது.

ஒரு நடுவண் அமைச்சர், காவிரி நதிநீர் சிக்கலை முன்வைத்து வெளியிட்ட இக்கருத்து நடுவண் அரச மரபுகளுக்கு எதிரானது என்ற அடிப்படையில் கண்டிக்காமல் மௌனம் காக்கும் தலைமை அமைச்சரை என்னவென்று சொல்வது. மேலும், காவிரி நதிநீர் உரிமையைப் பெற வேண்டும் என்று தமிழகத்தில் கூறுகிற தேசிய கட்சிகளும், கர்நாடகாவில் நடக்கும் அனைத்துக்கட்சிக் கூட்டத்தில், தண்ணீர் தரக்கூடாது என்று வலியுறுத்துகின்றன. இன்றைய நடுவண் பாஜக அரசும் சரி, முந்தைய காங்கிரஸ் அரசும் சரி தங்களது காவிரி பங்கீட்டு நிலைப்பாட்டில் கர்நாடக அரசின் அனைத்து அடாவடித்தனத்தையும் சகித்துத் துணைநிற்கின்றது. அதேபோல் கம்யூனிஸ்ட்கள் உட்பட தேசிய அடையாளத்தில் இயங்கும் அனைத்து அரசியல் கட்சிகளும், இயக்கங்களும், கன்னடர்களின் இந்தத் தமிழர் எதிர்ப்பு அரசியலை கண்டிக்க வக்கற்று நிற்கின்றன.

'ஏற்கனவே இங்குத் தண்ணீர் பற்றாக்குறை; எப்படித் தமிழகத்துக்குத் தண்ணீர் திறப்பது?' என்பதே தங்களின் அடாவடி அரசியலுக்கு நியாயம் கற்பிக்கக் கர்நாடக அரசு முன்வைக்கும் வாதம். அந்தந்த மாநிலங்களின் வளங்கள் அந்தந்த மாநிலங்களுக்கே என்றால், தமிழகத்தின் நெய்வேலி மின்சாரமும் யாருக்குச் சொந்தம்? பகுத்துண்டு வாழ்வதுத்தானே வாழ்கை? இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் எப்படிக் கர்நாடகவுக்குக் கொடுக்கப்படுகிறது? நெய்வேலி நிலக்கரி எப்படி நாட்டுடைமையானது? நதிகளின் நீர்பங்கீட்டில் தமிழகத்தைச் சுற்றியுள்ள எல்லா மாநிலங்களும் வஞ்சகம் செய்கிறதே ஏன்? மேலும், இது போன்ற நதிநீர் பிரச்சினைகளின்போது அண்டை மாநிலங்களில் வாழும் தமிழர்களின் பாதுகாப்பு தொடர்நது கேள்விக்குறியாக்கப்பட்டு வருவது தான் 'இந்திய ஒற்றுமை'யா ?.

காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாறு, சிறுவாணி என எல்லா உரிமைகளுக்கும் நீதிமன்றத்தை அணுகி தமிழர்களின் உரிமையை நிலைநாட்ட வேண்டிய அவல நிலையில் இருக்கும் நாங்கள் எதனடிப்படையில் 'இந்தியர்'கள் என்ற ஒற்றை அடையாளத்தில் உள்ளடக்கிக்கொள்வது? எல்லாவற்றுக்கும் நீதிமன்றம்தான் தீர்வு என்றால், நாட்டையாள்வது? நீதிமன்றமா? பாராளுமன்றமா? பாராளுமன்ற ஆட்சிமுறைக்கு என்னதான் வேலை? மாநிலங்களுக்கிடையே எழும் சிக்கல்களைக்கூடத் தீர்த்துவைக்க முடியாத நடுவண் அரசு, தமிழர் நலன் சார்ந்த எல்லா முடிவுகளிலும் தமிழக அரசுக்கு எதிராகவே எடுப்பது தமிழர்களுக்கு ஆறாத வடுவை உருவாக்குகிறது.

நடுவண் அரசுகள் இப்படியென்றால் 50 ஆண்டுகளாகத் தமிழகத்தை ஆண்ட ஆளும் திராவிடக் கட்சிகளோ வருடம் ஒருமுறை நடக்கும் சடங்காக நடுவண் அரசுக்குக் கடிதங்கள் எழுதுவதை மட்டுமே வேலையாக வைத்திருக்கிறார்கள். தமிழர் அல்லாதவர்கள் இம்மண்ணில் அரசியல் அதிகாரம் பெறவும், தமிழர் வளங்களை உறிஞ்சி சுகபோக வாழ்கை வாழ கேடயமாகப் பயன்படுத்தப்பட்ட திராவிட அடையாள அரசியல், தமிழர் நலன் சார்ந்த எல்லா நகர்வுகளையும் நீர்த்துபோகவே பயன்பட்டதே தவிர, தமிழின உரிமையைப் பாதுகாப்பதற்கான எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என்பதை 2009 இனப்படுகொலை நமக்கு உணர்த்தியது. இதுவரையிலான திராவிட ஆட்சியாளர்களின் தன்னல ஊழல் ஆட்சியின் வெளிப்பாடே இன்றும் நம்மைக் கர்நாடகத்திடம் தண்ணீர்க்கு கையேந்த வைத்திருக்கும் இழிநிலையில் வைத்துள்ளது.

போதுமான நீர்வள மேலாண்மையும், நீர்வளத்தில் தன்னிறைவு அடைவதற்கான திட்டங்களும் இல்லாததன் விளைவை இன்று இந்தத் தமிழ்த்தேசிய இன மக்கள் எதிர்கொண்டுள்ளோம். இந்தியத்தின் மாற்றாய் உருவகப்படுத்தி, அதன் ஒவ்வாமையை அறுவடை செய்வதை மட்டுமே குறிக்கோளாய் வைத்துத் தமிழர்களைத் திராவிடர்களாய் திரித்து ஏமாற்றிப் பெற்ற அரசியல் அதிகாரம் பயன்ற்று கிடப்பதை உணர்கிறோம். இந்தச் சிக்கல்கள் இந்திய திராவிடப் பொய்மை அரசியல் அடையாளங்களை மறுத்து, தமிழ்த்தேசிய அரசியலே இந்த மண்ணிற்குத் தேவை என்பதை உரக்க உரைக்கிறது. தமிழர்களைத் தொடர்ச்சியாக மாற்றாந்தாய் மனப்போக்குடன் பார்க்கும் மத்திய அரசின் அணுகுமுறையும், தமிழர்களின் பெருந்தன்மையைப் பயன்படுத்திக்கொண்டு வஞ்சிக்கும் அண்டை மாநிலங்களின் அடாவடி நயவஞ்சகப் போக்கும் கண்டிக்கத்தக்கது..

தமிழர்களைத் தாக்கியும் தமிழகப் பேருந்துகளை அடித்து நொறுக்கியும் காவேரியில் தமிழர்களுக்குத் தண்ணீர் தர மறுத்தும் போராடுகிற கன்னடர்களைக் கண்டித்து வரும் 15- செப்- 2016 வியாழக்கிழமை அன்று சென்னை ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்திலிருந்து மாலை 2 மணிக்கு "காவேரி உரிமை மீட்பு பேரணி ஆர்ப்பாட்டம்" தொடங்குகிறது . இன உணர்வும் மான உணர்வும் கொண்ட ஒவ்வொரு தமிழரும் ஒன்றாகக் கூடுவோம் என்று சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

Naam Tamilar party chief Seeman has called for big rally and agitation against Karnataka violence.

60

கர்நாடகத்தில் அடாவடித்தனமாக வன்முறையில் ஈடுபட்டு வருவோரைக் கண்டித்து சென்னையில் செப்டம்பர் 15ம் தேதி காவேரி உரிமை மீட்புப் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் அழைப்பு விடுத்துள்ளார்.

English summary
Naam Tamilar party chief Seeman has called for big rally and agitation against Karnataka violence.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X