For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அது ஒரு பொற்காலம்.. நீதியரசர் ரத்தினவேல் பாண்டியன் பற்றிய நெகிழவைக்கும் ஃபேஸ்புக் போஸ்ட்

மறைந்த நீதியரசர் ரத்தினவேல் பாண்டியன் தமது பதவி காலத்தில் சாமானியர்களிடம் கரிசனையுடன் நடந்து கொண்டவர்.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    எஸ். ரத்தினவேல் பாண்டியன் மறைந்தார்..கண்ணீர் விட்ட ஸ்டாலின், வைகோ- வீடியோ

    சென்னை: உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்ற ரத்தினவேல் பாண்டியன் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவி வகித்த காலத்தில் சாமானிய மக்களிடம் எப்படி கரிசனையுடன் நடந்து கொண்டார் என்பதை மூத்த வழக்கறிஞர் அருள்மொழி தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில் இடம்பெற்றுள்ளதாவது:

    நீதியரசர் ரத்தினவேல் பாண்டியன் அவர்களைப் பற்றி சில செய்திகள்தான் நமக்குத் தெரியும். கண்டிப்பாக அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டிய ஒரு நிகழ்வை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

    Senior Lawyer's FB post on Justice Ratnavel Pandian

    கிரிமினல் வழக்குகளில் ஆட்கொணர்வு (Habeus Corpus ) மனுக்களை விசாரணை செய்யும் பொறுப்பில் நீதியரசர் ரத்தின வேல் பாண்டியன் அவர்கள் இருந்த பொழுது நடந்த ஒரு வழக்கு பற்றி மூத்த வழக்கறிஞர் ஒருவர் சொன்ன நேரடி அனுபவச் செய்தி இது.

    ஒரு பெண் கணவனை விட்டுப் பிரிந்து குழந்தைகளுடன் திருநெல்வேலியில் வாழ்ந்து கொண்டு இருந்தார். தன் மனைவி குழந்தைகளை கடத்திச் சென்று விட்டார் என்று கூறி ஆட்கொணர்வு வழக்கு தாக்கல் செய்தார் கணவர்.

    குழந்தைகளை நீதிமன்றத்திற்கு அழைத்து வர அப்பெண்ணுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. இரண்டு முறையும் நோட்டீசைப் பெற்றுக்கொண்டு அந்தப்பெண் நீதிமன்றத்திற்கு வரவில்லை. எனவே அவரை நீதிமன்றத்திற்குக் கொண்டு வருமாறு அந்த ஊர் காவல்துறை அதிகாரிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    குறித்த நாளில் காவல்துறை அந்தப் பெண்ணை குழந்தைகளோடு நீதிமன்றத்தில் நிறுத்தியது.

    நீதிபதிகள் பொதுவாக தங்கள் கேள்விகளை அரசு வழக்கறிஞரிடம்தான் கேட்பார்கள். அவர்கள் தான் அந்த நபர்களிடம் கேட்டு பதிலை வாங்கி நீதிபதியிடம் சொல்வார்கள்.

    தேவைப்படும் போதுதான் நீதிபதிகள் வழக்காடிகளை அருகில் அழைத்துப் பேசுவார்கள்.

    இந்த வழக்கு விசாரணை தொடங்கிய போது நீதிமன்றத்தின் தோற்றம் நடைமுறை ஆகியவற்றால் மிரண்டு போயிருந்த அந்தப்பெண்ணைப் பார்த்த நீதியரசர் ரத்தின வேல் பாண்டியன் அவர்கள் ஏன் அவர் குழந்தைகளை கணவருக்குத் தெரியாமல் ஊருக்கு அழைத்துப்போனார் என்று கேட்டவுடன் அந்தக் கணவர் செய்த கொடுமைகளைச் சொல்லி அவரிடம் இருந்து தப்பி நானும் பத்திரமாக இருந்து குழந்தைகளைக் காப்பாற்றத்தான் அழைத்துச் சென்றேன் என்று சொல்லி அந்தப்பெண் அழவும் ..

    நீதியரசர் அவர்கள் அந்தப்பெண்ணை தன் முன்னால் அழைத்து நேரடியாக கேள்விகள் கேட்க அந்தப்பெண் அஞ்சியபடி பதில் சொல்லி இருக்கிறார் .
    .
    " சரிம்மா நீதிமன்றத்தில் இருந்து இரண்டு முறை நோட்டீஸ் வந்ததா ??"

    "வந்தது"

    " நோட்டீஸ் வந்தும் நீ ஏன் கோர்ட்டுக்கு வரவில்லை ??'

    " வண்டிக்கு குடுக்க காசில்லை அய்யா "

    " இப்ப எப்படி வந்தாய் ??'

    " போலீசு வண்டில கூட்டிட்டு வந்தாங்க - அய்யா "

    நீதிமன்றம் அமைதியாகிறது.

    நீதியரசர் கேட்கிறார்..

    " சரி எப்படி திரும்பி ஊருக்கு போவாய் ??"

    " தெரியலய்யா போலீசு வண்டியிலேயே கொண்டு வந்து விடச் சொல்லுங்கய்யா "

    மீண்டும் ஒரு துயரமான இறுக்கம் நீதிமன்றத்தில் நிலவுகிறது.

    நீதியரசர் ரத்தின வேல் பாண்டியன் அவர்கள் அந்தப்பெணணை அருகில் அழைத்து ..

    "நான் தப்பு பண்ணிட்டம்மா..

    நீ பஸ்சுல போ..என்று சொல்லியபடி தன் பர்சில் இருந்து ஒரு நூறு ரூபாய் நோட்டை எடுத்து அந்தப்பெண்ணிடம் கொடுத்து குழந்தைகளுக்கு சாப்பாடு வாங்கிக் கொடுத்து அழைத்துப் போம்மா" என்று சொன்னவுடன்.. உடன் இருந்த நீதியரசரும் தன் பையில் இருந்து நூறு ரூபாய் எடுத்து கொடுத்துள்ளார்.

    அந்தப்பெண் கும்பிட்டு நன்றி சொல்ல வழக்கறிஞர்கள் கண் கலங்க "..அது நீதித்துறையின் பொற்காலமாக இருக்கலாம்.

    அத்துடன் வழக்கை முடிக்கவில்லை நீதியரசர் ரத்தின வேல் பாண்டியன் அவர்கள் . வழக்கு போட்ட அந்தக் கணவரை அழைத்து ..இப்படி உண்மைகளை மறைத்து பொய்வழக்கு போட்டு மனைவியையும் குழந்தைகளையும் அலைய விட்டதை கடுமையாகக் கண்டித்து எச்சரிக்கை செய்து அனுப்பினார்.

    வாழ்க்கைப் பாடம் என்பது அனுபவத்தில் விளைவது. அதற்கு படிப்பு மட்டும் போதாது.. பட்டறிவு வேண்டும் என்பதை நினைவூட்டிக் கொண்டே இருக்கும் உங்கள் வாழ்க்கைப்பயணம். வீர வணக்கம் அய்யா.

    இவ்வாறு மூத்த வழக்கறிஞர் அருள்மொழி பதிவிட்டுள்ளார்.

    English summary
    Madras High Court Senior Lawyer Arulmozhi's heart touching post on Late Justice Ratnavel Pandian.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X