For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதிமுக ஆட்சியை அகற்ற வேண்டிய காலம் நெருங்கிவிட்டது: ஸ்டாலின்

By Karthikeyan
Google Oneindia Tamil News

மதுரை: அதிமுக ஆட்சியை தமிழகத்தில் இருந்து அகற்ற வேண்டிய காலம் நெருங்கிவிட்டது என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத்தேர்தல்- 2016 -ஐ முன்னிட்டு எனது தேர்தல் பிரச்சாரச் சுற்றுப் பயணத்தை நேற்று மதுரையில் இருந்து உற்சாகத்துடன் தொடங்கி இருக்கிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன். ஆணவமிக்க, யாராலும் அணுக முடியாத, செயல் திறனற்ற அதிமுக ஆட்சியை தமிழகத்தில் இருந்து அகற்ற வேண்டிய காலம் நெருங்கி விட்டது.

stalin election campaign at madurai

இது தொடர்பாக ஸ்டாலின் பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளதாவது:

கடந்த ஐந்தாண்டு காலமாக தமிழ்நாடு ஒட்டுமொத்தமாக இருளில் மூழ்கி, பின்தங்கிய, துயரமான சூழ்நிலையில் இருந்து வருகிறது. பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு வழங்கிய முட்டைகளில் ஊழல் செய்யத் தொடங்கி, மின்சாரத்தைக் கொள்முதல் செய்தது வரை எல்லாவற்றிலும் ஒரேயடியாக ஊழலை மட்டும் செய்து பொதுமக்களின் வாழ்வை ஜெயலலிதா முழுமையாக சீரழித்து விட்டார். தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தாமல் பாழடைந்த நிலைக்கு நாட்டை தள்ளியதுடன், இங்கிருந்த தொழிற்சாலைகளையும் அவர் வெளியேற்றி விட்டார்.

2011 -ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது ஜெயலலிதா அளித்த எந்தவொரு தேர்தல் வாக்குறுதியையும் அவர் நிறைவேற்றவில்லை. உதாரணமாக, கடந்த தேர்தலின் போது மதுரை மக்களிடம், "தமிழ் தாய் சிலை அமைக்கப்படும், மெட்ரோ ரயில் வசதி உருவாக்கப்படும், எயிம்ஸ் மருத்துவமனை கொண்டு வரப்படும், விலைவாசி கட்டுப்படுத்தப்படும்", என்றெல்லாம் கவர்ச்சிகரமாக தெரிவித்த வாக்குறுதிகள் ஒன்று கூட இன்றுவரை மதுரையில் நடைமுறைக்கு கொண்டு வரப்படவில்லை.

மதுரை மாவட்டத்தை மிகப்பெரிய உற்பத்தி மையமாக (manufacturing hub of Tamil Nadu) மாற்றப்போவதாக நான் மதுரை மக்களுக்கு இன்று உறுதியளித்துள்ளேன். மதுரை முதல் தூத்துக்குடி வரை பல்வேறு தொழில்களில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி, தொழிற்துறையினரின் நடைபாதையாக ( industrial corridor) அப்பகுதியை உருவாக்கித் தருவோம். மேலும், தமிழர்களின் பாரம்பரியமிக்க வீர விளையாட்டுக்களான ரேக்ளா, ஜல்லிக்கட்டு போன்றவற்றை மீண்டும் நடத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் உறுதியளித்து இருக்கின்றேன்.

இந்த தேர்தல் பிரச்சாரம் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் உரிமைகளை மீட்பதற்கான போராட்டம். 85 லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்புகளுக்காக காத்துக் கொண்டு இருக்கிறார்கள். கணவர்களின் மதுபழக்கத்தால் குடும்பத் தலைவிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். தொழில் முனைவோர்கள், தொழிலதிபர்கள் மற்றும் சாமானியர்கள் உள்பட அனைத்துத் தரப்பினரும் அதிமுக ஆட்சியினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, நான் இப்போது முன்னெடுத்துள்ள தேர்தல் பிரச்சாரமானது, "தமிழ்நாட்டின் மதிப்புமிக்க எதிர்காலம், ஒட்டுமொத்த முன்னேற்றம், ஒருங்கிணைந்த வளர்ச்சி", ஆகியவற்றை உள்ளடக்கிய, மிகவும் முக்கியமான காலகட்டத்தில் நடத்திடும் போர். அப்படிப்பட்ட மகத்துவம் மிகுந்த இந்த போராட்டத்தில் அனைவரும் எங்களுடன் இணைந்து தமிழகத்தில் புதிய விடியலை உருவாக்க முன் வர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். முடியட்டும், விடியட்டும் ! இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

English summary
DMK treasurer m.k.stalin facebook status about his election campaign at madurai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X