For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகம் முழுவதும் மணல் கொள்ளையைத் தடுக்க வேண்டும் - மதிமுக மாநாட்டில் தீர்மானம்

Google Oneindia Tamil News

விருதுநகர்: நாடு முழுவதும் மணல் எடுக்கும் இடங்களில் மணல் அள்ளத் தடை விதித்து பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளதை ஏற்று சட்டவிரோத மணல் கொள்ளைகளை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் உள்ள முக்கிய ஆறுகளான தாமிரபரணி, வைகை, காவிரி, பாலாறு, பெண்ணையாறு போன்ற 33 ஆற்று நீர்ப் படுகைகளில், அதிக ஆழத்தில் மணல் அள்ளப்பட்டு இயற்கை வளம் கொள்ளை அடிக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆட்சியில் நடைபெற்ற மணல்கொள்ளை இப்போதும் தங்கு தடையின்றித் தொடர்கிறது. மணற்கொள்ளையைக் கட்டுப்படுத்துவது குறித்து, கடந்த 1999 ஆம் ஆண்டு ஜூலை 14 அன்று சென்னை உயர்நீதிமன்றம், ஓர் உத்தரவைப் பிறப்பித்தது.

தமிழக ஆறுகளைப் பாதிக்காத வகையில் மணல் அள்ளப்படுவதை தமிழக அரசு முறைப்படுத்த வேண்டும்; ஒவ்வொரு ஆற்றிலும் எந்த அளவு ஆழத்தில் மணல் அள்ளலாம் என்றும் குறியீடு நிர்ணயிக்க வேண்டும் என அத்தீர்ப்பில் கூறப்பட்டது.

இதுபோலவே தாமிரபரணி மணல் கொள்ளை தொடர்பான வழக்கில், மதுரை உயர்நீதிமன்றக் கிளையும் 2010 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி அளித்த தீர்ப்பிலும் சுட்டிக் காட்டியது.

ஆனால், நீதிமன்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்தாத தமிழக அரசு, ஆளும் கட்சியினர் அதிகாரிகள் கூட்டாக, மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருவதைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்து வருகிறது.

இதன் விளைவாக, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டக் கடலோர பகுதிகளில் கார்னெட், இலுமனைட், ரூட்டைல் ஜிர்கான், மோனசைட் ஆகிய தாதுமணல் சட்டவிரோதமாக அள்ளப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. விலை உயர்ந்த தாதுமணல் கொள்ளையைத் தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதுடன்

2013, ஆகஸ்ட் 5 ஆம் தேதி, தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயம் நாடு முழுவதும் மணல் எடுக்கும் இடங்களில் மணல் அள்ளத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளதை ஏற்று சட்டவிரோத மணல் கொள்ளைகளை முற்றிலும் தடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தென்னக நதிகளை இணைத்திடுக!

வருங்கால சமுதாயத்தின் நலனைக் கருத்திற்கொண்டு இந்திய நதிகள் அனைத்தையும் தேசிய மயமாக்கிட வேண்டும் என இந்திய நாடளுமன்றத்தில் 2000ஆம் ஆண்டு மே திங்கள் 5ஆம் நாள் தனி நபர் மசோதா கொண்டு வந்து அனைத்து கட்சிகளையும் ஆதரித்துப் பேசவைத்த சுதந்திர இந்தியாவின் முதல் நாடாளுமன்ற உறுப்பினர் நமது பொதுச்செயலாளர் வைகோ அவர்களே ஆவார்.

இன்றைய காங்கிரÞ தலைமையிலான ஐக்கியமுற்போக்கு கூட்டணி அரசிடம் நதிகள் இணைப்பு குறித்து தீர்க்கமான பார்வையோ தெளிவான செயல் திட்டங்களோ இல்லை என்பது கடும் கண்டனத்திற்கு உரியது என்பதோடு வருங்காலத்தில் நிலவக்கூடிய பெரும் தண்ணீர் பஞ்சத்தில் இருந்து விவசாயத்தையும், பொதுமக்களையும் பாதுகாத்திட நதிகள் அனைத்தையும் தேசிய மயமாக்கிட வேண்டும் எனவும், முதற்கட்டமாக தென்னக நதிகளை இணைத்திட மத்திய மாநில அரசுகள் முன்வர வேண்டும் எனவும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.

காவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்கு முறைக்குழு

காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினையைத் தீர்க்க அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம், 2007 பிப்ரவரி 5 ஆம் தேதி இறுதித்தீர்ப்பை அளித்தது. இதன்படி மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்குமுறைக் குழு ஆகிய அமைப்புகளை உருவாக்க வேண்டும்.

இந்த அமைப்புகளுக்குத்தான், காவிரி நீரை தேக்கி வைத்திருக்கும் கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர், ஹேமாவதி, கபினி மற்றும் ஹேரங்கி ஆகிய அணைகளில் உள்ள நீரின் அளவைக் கண்காணிக்கவும், தமிழ்நாட்டின் தேவைக்கு ஏற்ப அணைகளில் இருந்து தண்ணீரைத் திறந்துவிடவும் சட்டப்படி அதிகாரம் வழங்கப்பட்டு இருக்கின்றது.

காவிரி நடுவர்மன்றத்தின் தீர்ப்பை அரசு இதழில் வெளியிட்ட உடனேயே மத்திய அரசு, நடுவர் மன்றத் தீர்ப்பில் சுட்டிக்காட்டி உள்ளவாறு இவ்விரு அமைப்புகளையும் உருவாக்கி இருக்க வேண்டும்.

மாறாக, கர்நாடக மாநிலத்தின் வஞ்சகத்துக்குத் துணைபோகும் வகையில் மத்திய அரசு அமைத்துள்ள சட்டபூர்வ அதிகாரமற்ற காவிரி கண்காணிப்புக் குழுவின் மூலம், நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை நடைமுறைப்படுத்த முடியாது.

எனவே, காவிரியில் தமிழகத்தின் உரிமையை பெறும் வகையில், நடுவர் மன்றம் தெரிவித்தவாறு, காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்குமுறைக்குழுவை மத்திய அரசு உடனடியாக அமைத்திட வேண்டும் என்று, மறுமலர்ச்சி தி.மு.க. மாநாடு வலியுறுத்துகிறது.

English summary
MDMK in a resolution has urged the govt of Tamil Nadu to stop illegal sand smuggling.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X