3 தொகுதி தேர்தல் - இன்று முதல் திமுக விருப்பமனு - 21 முதல் நேர்காணல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதி சட்டசபைத் தேர்தல், திருப்பரங்குன்றம் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் இன்று முதல் 20ம் தேதிவரை விருப்பமனு அளிக்கலாம் என்றும் 21ம் தேதி முதல் வேட்பாளர் நேர்காணல் நடைபெறும் என்றும் திராவிட முன்னேற்றக்கழகம் அறிவித்துள்ளது.

கடந்த மே மாதம் தமிழகத்தில் 232 தொகுதிகளுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. பணப்பட்டுவாடா புகாரினால் நிறுத்தி வைக்கப்பட்ட தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளுக்கான சட்டசபைத் தேர்தலையும், காலியாக உள்ள திருப்பரங்குன்றம் தொகுதிக்கு இடைத் தேர்தலையும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 3 தொகுதிகளுக்கும் நவம்பர் 19ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்ததை அடுத்து அரசியல் கட்சிகள் பரபரப்படைந்துள்ளன.

Tamil Nadu by election 2016 DMK candidate interview on 21

3 தொகுதிகளிலும் போட்டியிட அதிமுக, திமுக தயாராகி வருகின்றன. மற்ற கட்சிகள் தங்களது நிலைப்பாட்டை அறிவித்து வருகின்றன. திருப்பரங்குன்றம் இடைத் தேர்தல் மற்றும் தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதி சட்டசபை தேர்தல் தொடர்பாக 3 மாவட்ட திமுக செயலாளர்களுடன், திமுக பொருளாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார்.

திருப்பரங்குன்றத்தில் திமுக வேட்பாளராக மு. மணி்மாறன் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார். அங்கு அதிமுகவின் சீனிவேல் வெற்றி பெற்றார். ஆனால் மரணமடைந்ததால் அங்கு இடைத் தேர்தல் வந்துள்ளது. பொதுத் தேர்தலின்போது அரவக்குறிச்சியில் திமுக சார்பில் கே.சி. பழனிச்சாமியும், தஞ்சாவூர் தொகுதியில் அஞ்சுகம் பூபதியும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் தற்போது இந்த 3 தொகுதிகளுக்கும் இன்று முதல் 20ம் தேதிவரை விருப்பமனு தாக்கல் செய்யலாம் என்றும் 21ம் தேதி காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் வேட்பாளர் நேர்காணல் நடைபெறும் என்றும் திமுக அறிவித்துள்ளது.

அரவக்குறிச்சி தொகுதியில் கே.சி. பழனிச்சாமி போட்டியிட விரும்பாததால் அந்த தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திமுக சார்பில் விருப்பமனு பெறப்படுவதால் மூன்று தொகுதிகளிலும் திமுகவே போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

அதிமுக சார்பில் அரவக்குறிச்சியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியே மீண்டும் போட்டியிட வாய்ப்புள்ளது. தஞ்சை, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் யார் என்பது இன்றும் சில தினங்களில் தெரியவரும்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
DMK is all set to begin its candidate interview on October 21 at Anna Arivalayam for Aravakkurichi,Thanjavur election, Tiruparankundram bypoll on November 19.
Please Wait while comments are loading...