புதை குழிக்குப் போகிறதா தமிழக அரசின் பூரண மதுவிலக்கு வாக்குறுதி?

Posted By: Staff
Subscribe to Oneindia Tamil

- ஆர். மணி

தமிழ் நாட்டில் மது பானங்களின் விலை ஏற்றப்பட்டிருக்கிறது. தமிழ் நாட்டின் மதுபான விற்பனையின் மொத்த குத்தகைதாரராக விளங்கும் டாஸ்மாக் நிறுவனம் , 10 ரூபாய் முதல் 12 ரூபாய் வரையில் மது பான பாட்டில்களின் விலையை ஏற்றியிருக்கிறது. இந்த விலை உயர்வு அக்டோபர் 11 ம் நாளிலிருந்து அமலுக்கு வந்து விட்டது. ஆனால் பீர் பாட்டில்களின் விலை உயர்த்தப் படவில்லை. இதன்படி 180 மில்லி லிட்டர் கொள்ளளவு கொண்ட குவார்ட்டர் பாட்டிலின் விலை 88 ரூபாயிலிருந்து 100 ரூபாயாக உயர்த்தப் பட்டுள்ளது. ஏற்கனவே சில வகை குவார்ட்டர் பாட்டில்களின் விலை 100 ரூபாயாக இருந்தது தற்போது 110 ரூபாயாக உயர்த்தப் பட்டுள்ளது. 120 ரூபாய் முதல் 380 ரூபாய் வரையில் இதுவரையில் விற்கப்பட்ட உயர்வகை குவார்ட்டர் மது பாட்டில்களின் விலை தற்போது 10 ரூபாய் கூடுதலாக உயர்ந்துள்ளது.

'’மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை, வழக்கமாக நாங்கள் விலையை உயர்த்துவோம். கடைசியாக விலை உயர்த்தப் பட்டது 2014 ம் ஆண்டு. ஆகவே புதியதாக எதையும் நாங்கள் செய்து விடவில்லை’’என்று விலை உயர்வை நியாயப்படுத்துகிறார் டாஸ்மாக் நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர். இந்த விலை உயர்வின் மூலம் அரசுக்கு கூடுதலாக ஆண்டுக்கு 2,250 கோடி ரூபாய் வருமானம் வரும் என்று அதிகாரிகள் கணிக்கின்றனர்.

Is the Tamil Nadu government burying its policy on prohibition?

2016 – 17 ம் ஆண்டில் டாஸ்மாக் கின் வருமானம் 26,995 கோடி ரூபாயாகும். 2017 – 18 ம் ஆண்டுக்கான டாஸ்மாக் வருமானம் 30,000 கோடி ரூபாயாக இருக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு கணிக்கப்பட்டது. '’தற்போது அந்த இலக்கை, அதாவது ஆண்டுக்கு 30,000 கோடி ரூபாயை டாஸ்மாக் விற்பனை மூலம் அடைய வேண்டும் என்ற இலக்கு சற்று கடினமானது என்றே நாங்கள் உணருகிறோம். இருந்த போதிலும் 2,250 கோடி ரூபாய் கூடுதல் வருவாயை வைத்து நிலைமையை ஓரளவு சமாளிக்க முடியும் என்றே நம்புகிறோம்’’என்கிறார் பெயர் கூற விரும்பாத அந்த டாஸ்மாக் அதிகாரி.

ஒவ்வோர் நாளும் டாஸ்மாக்கில் 70 கோடி ரூபாய்களுக்கு விற்பனை நடக்கிறது. வார இறுதி நாட்கள் மற்றும் தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் தினமும் 100 கோடி ரூபாய் வரையில் டாஸ்மாக் விற்பனை நடந்து கொண்டிருக்கிறது. கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்ட போதிலும், டாஸ்மாக்கின் வருவாயில் பாதிப்பு என்பது வெறும் 8 சதவிகிதம் தான். பெரிய அளவில் டாஸ்மாக் விற்பனையில் எந்த பாதிப்பும் இல்லை. இந்த 8 சத விகித சரிவு என்பதும் விரைவில் சரி கட்டப் பட்டு விடும் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்கள் டாஸ்மாக் அதிகாரிகள்.

'’தமிழ்நாட்டில் சில மாதங்களுக்கு முன்பு வரையில் இருந்த டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை 5,700. ஆனால் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த மது பான விற்பனை கடைகளை மூட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னர் தமிழ் நாட்டில் 3,300 கடைகள் மூடப்பட்டன’’ என்கிறார் டாஸ்மாக் ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் என்.பெரியசாமி.

2016 சட்டமன்ற தேர்தலின் போது, சென்னையில் நடைபெற்ற முதல் தேர்தல் பொதுக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா தான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக மது விலக்கு அமல்படுத்தப் படும் என்றார். அதே போல அவர் வெற்றிப் பெற்று ஆட்சி அமைந்தவுடன் 500 டாஸ்மாக் கடைகளை மூடினார். இதன் பின்னர் உள்ளூர் மக்களின் போராட்டங்கள் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் படி மொத்தம் 3,300 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுவிட்டன. ஆனால் வருவாயில் பெரிய அளவில் எந்த பாதிப்பும் இந்த நடவடிக்கைகளின் மூலம் ஏற்படவில்லை.

தமிழக அரசை பொறுத்த வரையில் டாஸ்மாக் விற்பனை மூலம் கிடைக்கும் வருவாய் மிக, மிக முக்கியமானது. '’தமிழ்நாடு அரசாங்கத்துக்கு, வற்றாத செல்வமாய், வாரி, வாரி கோடி, கோடி ரூபாய்களை அள்ளிக் கொடுக்கும் '’காமதேனு’’ தான் டாஸ்மாக் நிறுவனம். ஜெயலலிதா கொடுத்த, இன்று வரையில் தமிழக அரசும் கடை பிடித்துக் கொண்டிருக்கும் வகை, வகையிலான இலவசங்களுக்கு – மிக்சி, கிரைண்டர், லேப் டாப் கம்ப்யூட்டர்கள் மற்றும் இன்னும் பல, பல இலவசங்கள் தொடர்வதற்கு முக்கிய காரணம் டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருமானம் தான். இதுதான் இன்றைய தமிழக அரசின் வருவாயின் மறுக்க முடியாத யதார்த்தம்’’ என்கிறார் தமிழ் நாட்டின் பொருளாதாரம் பற்றிய ஆராய்ச்சியில் டில்லி பல்கலை கழகத்தில் பி.ஹெச்டி செய்து கொண்டிருக்கும் ஆதித்திய மஹேந்திரநாத்.

'’ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப் பட்ட பின்னர் வந்திருக்கும் கூடுதல் நிதி சுமையை குறைப்பதற்கு தமிழக அரசு மதுபான விற்பனை மூலம் கிடைக்கும் வருவாயை எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு அதிகரிக்க வேண்டும். இல்லையென்றால் இன்னும் ஆறிலிருந்து ஏழு மாத காலத்தில் மிகப் பெரிய நிதி நெருக்கடியை தமிழக அரசு சந்திக்க வேண்டியிருக்கும். தமிழக அரசின் கஜானா காலியாகி, தமிழ் நாடு அரசு திவாலாக வேண்டிய சூழலுக்கு கூட அப்போது தள்ளப்பட்டு விடலாம்’’ என்று மேலும் எச்சரிக்கிறார் மஹேந்திரநாத்.

ஆகவே இன்றைய கள யதார்த்தம், தமிழ் நாட்டில் பூரண மதுவிலக்கு என்பது இன்னும் பல ஆண்டுகளுக்கு அறவே சாத்தியப்படாத ஒன்று என்பதுதான். யார் ஆட்சிக்கு வந்தாலும் இதுதான் நிலைமை. கடந்த நூறாண்டு கால உலக வரலாறும் இதைத் தான் உறுதிப்படுத்துகிறது. நாடு விடுதலை அடைந்த இந்த 70 ஆண்டுகளில் இந்தியாவில் பல மாநில அரசுகள் பூரண மதுவிலக்கை அறிமுகப்படுத்தி அதனை மிக கடுமையாகி அமல்படுத்தி, பின்னர் அதில் வெற்றி பெற முடியாத காரணத்தால், பூரண மதுவிலக்கை விலக்கிக் கொண்டதும் தான் இந்திய வரலாறு.

கற்பனைக்கு எட்டாத காலந் தொட்டு உலக வரலாற்றை பார்ப்பவர்களுக்கும், மது அருந்துவது என்பது மனித உளவியலுடன் நெருக்கமான உறவு கொண்ட ஒரு விஷயம் என்பதை அறிந்தவர்களுக்கும் பூரண மதுவிலக்கு என்பது கிஞ்சித்தும் சாத்தியமற்றது என்பது நன்றாகவே தெரியும். ஆனால் தமிழ் நாட்டில் நடந்து கொண்டிருக்கும் கேவலமான காரியம், மதுவை அரசே விற்பது என்பது கூட அல்ல மாறாக மது விற்பனையை இலக்கு வைத்து அதாவது ஆங்கிலத்தில் சொன்னால், “with a target to get maximum money out of liquor sales” என்பதுதான். அதாவது மது விற்பனையை தமிழக அரசு எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு ஊக்குவித்துக் கொண்டிருக்கிறது. இதுதான் பிரச்சனையின் மூல வேர். இந்த மூலவேரை அறவே கிள்ளி எறியாமல் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது. அதிலும் டாஸ்மாக் நிறுவனத்துக்கு மது பானங்களை உற்பத்தி செய்து, விற்கும் நிறுவனங்கள் மாநிலத்தின் ஆட்சியாளர்களுக்கு நெருக்கமாக இருக்கும் நிறுவனங்களாகும், அது யார் ஆட்சியில் இருந்தாலும், அம்மா இருந்தாலும், ஐயா இருந்தாலும் இதுதான் உண்மை.

ஆகவே நாம் அடிப்படையில் புரிந்து கொள்ள வேண்டிய ஒரே விஷயம் இதுதான் … மதுவால் வரும் தீமைகளை தடுப்பதற்கான ஒரே வழி, பூரண மதுவிலக்கு கிடையாது, இது கள்ள சாராய சாவுகளுக்கு மட்டுமே வழி வகுக்கும்.

மாறாக மது விற்பனயை அரசுகள் முறைப்படுத்தலாம், மது விற்பனையை ஊக்குவிப்பதை அறவே தடுக்கலாம், மதுவால் வரும் தீமைகளை மக்கள் மன்றத்தில், மக்கள் புரிந்து கொள்ளும் விதத்தில் எடுத்துச் செல்லலாம். எந்த ஒரு உளவியல் நிபுனரும், ஆங்கிலத்தில் சொன்னால் Psychiatrists கள் ஒருவர் கூட பூரண மதுவிலக்கை ஆதரிக்காததற்கு காரணம் இதுதான். குடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் இந்த மருத்துவர்களுக்குத் தான் இந்த விவகாரத்தின் அடிப்படை தெரியும். பூரண மதுவிலக்கிற்காக கூவி, கூவி, அதில் அரசியல் லாபம் காண துடித்துக் கொண்டிருக்கும் அரசியல் கட்சிகளுக்கு இது தெரியாது. அப்படியே தெரிந்தாலும் அவர்கள் தங்கள் நிலையிலிருந்து மாற மாட்டார்கள். காரணம் இது வாக்கு வங்கி சம்மந்தப்பட்டது என்று அவர்கள் புரிந்து கொண்டிருப்பதுதான்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Tamil Nadu government's prohibition policy sent to buriel ground - புதை குழிக்கு போய்க் கெண்டிருக்கிறதா தமிழக அரசின் பூரண மதுவிலக்கு கொள்கை?

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற