For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மருத்துவர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீடு இல்லை என்ற தமிழக அரசுக்கு கண்டனம்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

doctor
சென்னை: சென்னை சிறப்பு மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் அலுவலர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீடு கொள்கை பின்பற்றப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளதற்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளார் கி.வெங்கட்ராமன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

சென்னை சிறப்பு மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் அலுவலர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீடு கொள்கை பின்பற்றப்படாது என்று தமிழக அரசு அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

இந்தியாவிற்கே இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் வழிகாட்டி மாநிலமாக இருந்த தமிழ்நாட்டில் இவ்வாறு தமிழக அரசு அறிவித்திருப்பது எந்த வகையிலும் ஏற்கக் கூடியது அல்ல. தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் இதனை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இப் பணிகள் நிரந்தர நியமனம் அல்ல என்றும் ஒப்பந்த அடிப்படையிலானது என்றும் எனவே தான் இடஒதுக்கீடு கொள்கை பின்பற்றப் படவில்லை என்றும் தமிழக அரசு கூறும் விளக்கம் ஏற்கக் கூடியது அல்ல.

இந்த நிரந்தரப் பதவிகளுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்குக் குறையாமல் மாத ஊதியம் வழங்கி ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்வதாக அறிவித்திருப்பதே திட்டமிட்டு இட ஒதுக்கிட்டுக் கொள்கையை கைவிடுவதற்கான சூதாகவே தெரிகிறது.

தமிழகத்தில் இயங்கும் தன் நிதி மருத்துவக் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு கிடையாது. பணத்தை பெருந்தொகையில் வாரிக் கொடுத்து பட்டம் வாங்கும் நிலையங்களாக அவை உள்ளன. ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்கள், ஏழைகள் ஆகியோருக்கு அக்கல்லூரிகளில் இடம் கிடைப்பதில்லை, தவிரவும் இக் கல்லூரிகளில் மிகப் பெரும் எண்ணிக்கையில் வெளி மாநில மாணவர்கள் இடம்பிடித்து விடுகின்றனர்.

இச் சூழலில் இட ஒதுக்கீடு இல்லாமல் பணி நியமனம் செய்யப்பட்டால் அது தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்ப்பட்ட மருத்துவ மாணவர்களின் வாய்ப்பை தட்டிப்பறிப்பதாக அமைவதோடு, வெளிமாநிலத்தவர்கள் பெரும் எண்ணிக்கையில் அரசு மருத்துவமனையிலேயே உயர் ஊதியப் பணி வாய்ப்பைப் பெற இடமளிப்பதாகவும் அமையும்.

'சமூக நீதிகாத்த வீராங்கனை' என்றப் பட்டத்தை சுமந்துள்ள தமிழக முதல்வர் செயலலிதா வெளியிட்டுள்ள இந்த ஆணை சமூக நீதிக்கு எதிரானது.

ஏற்கெனவே கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் இட ஒதுக்கீட்டு கொள்கைக்கு எதிரான வழிமுறை பின்பற்றப்பட்டது. அதே போன்று இப்போது மருத்துவர் மற்றும் அலுவலர் நியமனத்திலும் இட ஒதுக்கீடு கொள்கை கைவிடப்படுகிறது.

வர்ண - சாதி வழிப்பட்ட சமூக அநீதியை நிலை நாட்டும் இக் கொடுஞ்செயலை தமிழக அரசு கைவிட வேண்டும். சென்னை சிறப்பு மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் அலுவலர்கள் நியமனத்திற்கு தமிழ் நாட்டில் உள்ள இட ஒதுக்கீட்டு வரையறை அடிப்படையிலேயே பணி நியமனம் நடைபெற வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இக் கோரிக்கைக்கு முதல்வர் செவிமடுத்து திருத்தம் செய்யாது போனால் இந்த ஆணையை எதிர்த்து இட ஒதுக்கீடு காக்க சமூக நீதியில் அக்கறையுள்ள அனைத்து அமைப்புகளும் போராட்டத்தில் இறங்க வேண்டும் என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

English summary
Tamil Desiya Podhu Udamai Katchi has issued statements condemning a State Government announcement that reservation will not apply to contractual appointments of doctors and administrators for the new super-speciality hospital at the Omandurar Government estate.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X