Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நானும் நெரிஞ்சிப் பேட்டை சாமியாரும்!

Subscribe to Oneindia Tamil

- தந்தை பெரியார்

ஒரு தடவை, எங்கள் ஊருக்கு நெரிஞ்சிப் பேட்டை சாமியார் (சங்கராச்சாரி போன்றவர்) வந்தார். அது 1902-ம் வருஷமாய் இருக்கலாம்; அவருக்கு, எங்கள் ஊர் நகரத்துச் செட்டியார் வகுப்பு வியாபாரிகள் தடபுடலாய் பிக்ஷ (பிட்சை) நடத்துகிறார்கள். எங்கள் தகப்பனாரும் 50 ரூபா கொடுத்தார். பெரிய சமாராதனை நடக்கிறது.

அந்தச் சாமியார் தம்பி ஒரு மைனர்; கடன்காரன்; அவனும் கூட வந்திருந்தான். அவன், ஈரோட்டில் ஒரு வியாபாரிக்குக் கடன் கொடுக்க வேண்டும்; அது கோர்ட்டில் டிக்ரி ஆகி இருந்தது. அந்தச் சமயம், அந்த வியாபாரி அக்கடனை வசூல் செய்ய, என்னை யோசனை கேட்டார். நான் அவசரமாய், 'படிபோட்டு, வாரண்டு கொண்டுவா' என்று சொன்னேன். உடனே நிறைவேற்று விண்ணப்பம் போட்டு, அன்றே, வாரண்டு வந்தது. மறுநாள், பகல் 12 மணிக்கு வாரண்டு எடுத்துக் கொண்டு' சேவகனுடன் அந்த வியாபாரி என்னிடம் வந்தார்.

Thanthai Periyar Autobiography

நான் அவர்களைக் கூட்டிக் கொண்டு, ஈரோட்டில் சாமியார் இறங்கியிருந்த 'எல்லைய்யர் சத்திரம்' என்கின்ற இடத்துக்குப் போனேன். உள்ளே, சுமார் 200 பேர்கள், சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்; சத்திரத்திற்குப் பக்கத்தில், வெளியில், நான் நின்று கொண்டு, சாமியார் தம்பிக்கு நான் ஆள் அனுப்பினேன்; உள்ளே இருந்து, அவர் ரோட்டுக்கு வந்தார் சேவகனுக்கு கைகாட்டி, 'இவர்தான்' என்று சொன்னேன்.

சாமியார் தம்பி, 'வாரண்டு' என்று தெரிந்ததும், ஓடினார். நான் கூடவே கையைப் பிடித்துக் கொண்டு, இழுத்துக் கொண்டே போனேன்; திமிரிவிட்டு - 'சட்'டென்று வீட்டுக்குள் புகுந்து, வெளிக் கதவைத் தாளிட்டுக் கொண்டான். நான் உடனே தூணைப் பிடித்து, தாழ்வாரத்தின் மீது ஏறி, ஓடுகள் உடைய ஓடி, புறக்கடைப் பக்கம் வீட்டிற்குள் குதித்து சாப்பாடு இருக்கும் இடத்தையும், பார்ப்பனர் சாப்பிடும் பந்தியையும் தாண்டி வந்து, வீதிக் கதவைத் திறந்து விட்டு, சாயபு சேவகனைக் கூப்பிட்டு ஒரு அறைக்குள் ஒளிந்து கொண்ட, சாமியாரின் தம்பி கையைப் பிடித்து ஒப்பிவித்தேன். அவன் திமிரினான்; என் கடை ஆட்கள் நாலைந்து பேர்கள் அங்கிருந்தவர்களை- 'இவனைப் பிடித்து, வெளியில் தூக்கிக் கொண்டு போங்கள்' என்று சொன்னேன்; தூக்கி வந்து விட்டார்கள்.

Thanthai Periyar Autobiography

கூட்டம் சேர்ந்துவிட்டது. சாப்பிட்டுக் கொண்டிருந்த பார்ப்பனர்கள் சுமார் 200 பேர்கள், அரைச் சாப்பாட்டோடு இலையை விட்டெழுந்து கை கழுவிக் கொண்டார்கள். ஆளைப் பிடித்து ஒப்புவித்துவிட்டு நான் நேரே வீட்டிற்கு சாப்பாட்டுக்குப் போய் விட்டேன். சாமியார் கோஷ்டி போலீசில் பிராது எழுதி வைத்துவிட்டு, டெபுடி கலெக்டரிடம் பிராது கொடுக்க ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதாக எனக்குத் தெரிய வந்தது, பிட்ஷை நடத்துபவர்கள் வியாபாரிகள்; என் தகப்பனாரும் 50 ரூபா கொடுத்திருக்கிறார்; ஈரோடு நகரத்துச் செட்டிமார் பெரிதும் என் தகப்பனாரிடம் லேவாதேவி செய்பவர்கள்; சினேகமுறையில் பழகுபவர்கள்; ஈரோடு வக்கீல்களும் பிராமணர்களும் என் தகப்பனாரிடம் தாக்ஷன்ய மனோபாவமுடையவர்கள்; 'என்ன நடக்கிறது, என்று பார்க்கலாம்' என்றே கலக்கத்துடன், சாப்பிட்டுவிட்டு கடைக்கு வந்தேன்.

கடை வீதியில், வழிநெடுக இதைப்பற்றிப் பெரிய பிரஸ்தாபம், கடையில் வந்து நான் உட்கார்ந்த உடன், ''நீ அந்தப் பார்ப்பானைப் பிடித்துக் கொடுத்தது சரி ஆனால் அந்த பிராமண சமாராதனையைக் கெடுத்து விட்டாயே. அதைப் பற்றிதான் உன்மீது எல்லோருக்கும் வெறுப்பேற்பட்டு விட்டது," என்று என்னிடம் வந்து பலர் சொன்னார்கள்.

Thanthai Periyar Autobiography

சிலர், ''நல்ல வேலை செய்தாய்; எப்படியும் அந்தப் பார்ப்பானைப் பிடித்தே தீர்த்தாயே. அவன் எத்தனை பேர்களை ஏமாற்றிக் கொண்டு வாங்கின கடன் கொடுக்காமல் திரிகிறான்,'' என்று சொன்னார்கள்.

நான் அப்போதுதான், ''நாம் கண்ணால் பார்த்தால், சமாராதனை எப்படிக் கெட்டுப் போகும்; இந்தப் பார்ப்பான்கள் அங்கு வந்து சாப்பிட்டது தண்டசோறு; நாம் கொடுத்த பணம்; நான் ஒன்றையும் தொட்டுவிடவும் இல்லை; இப்படி இருக்க சமாராதனை எப்படிக் கெடும்? கெட்டால் தான் கெடட்டுமே, என்ன முழுகிப் போய் விட்டது? பார்க்கலாமே!," என்று, ஒரு மாதிரி திடப்படுத்திக் கொண்டு கடைவேலை பார்த்துக் கொண்டு, வருகிறவர்கள் போகிறவர்களிடம் இதைப் பற்றிப்பேசிக் கொண்டும் இருந்தேன்.

என் தகப்பனாருக்கு, இதைப்பற்றி ஒன்றும் தெரியாது. அவர் பிற்பகல் 3 அல்லது 4 மணி சுமாருக்கு வீட்டிலிருந்து கடைக்கு வந்தார். வந்து சிறிது நேரம் ஆனவுடன் ஒரு கூட்டம் சுமார் இருபது பேர்கள் கடைக்கு வந்தார்கள். அவர்கள் பெரிதும் நகரத்துச் செட்டியார் வகை; பெரிய ஆள்கள்; வக்கீல் குமாஸ்தா; பார்ப்பனப் பிள்ளைகள் - 2, 3 பேர், சாமியாருடைய அதிகாரி ஒருவர், இப்படியாக வந்தார்கள்.

இவர்கள் வந்த உடன் என் தகப்பனார் மறுபடியும் சாமியார் விஷயத்திற்கு ஏதாவது வசூலுக்கு வந்திருக்கிறார்களோ என்னமோ என்று நினைத்துக் கொண்டு மேலும் ஏதாவது கொடுக்கவே முடிவு செய்து கொண்டு சாமியார் ''பிட்க்ஷ (சமாராதனை, ஊர்கோலம்) 'நன்றாய் நடந்ததா?' என்பது பற்றிச் சிரித்த முகத்துடன் விசாரித்தார்.

வந்தவரில் பெரிய வர்த்தகச் செட்டியார் ஒருவர், ''அந்தக் கண்றாவியை ஏன் கேட்கிறீர்கள். அங்கு வந்து பாருங்கள், 200-300 பேர் பட்டினி. இனி மேல்தான், சமையல் நடக்க வேண்டும். ஆச்சார்ய சாமிகளுக்கு மிகமிக மன வேதனை,'' என்று சொல்லிக் கொண்டு வரும்போதே, ஒருவர், 'எல்லாம் பாழாய் விட்ட'தென்றும், மற்றொருவர், 'இந்த அக்கிரமம், இது வரை எங்கும் நடந்திருக்காது' என்றும், என்ன என்னமோ என்னைப் பார்த்துக் கொண்டே பேசுகிறார்கள்.

நான் கடைக்கு உள் உட்கார்ந்திருந்தவன், வெளியில் வந்து, தாழ்வாரத்தில் சுவருடன் சாய்ந்து நின்று கொண்டேன். என் தகப்பனாருக்கு, ஒன்றும் புரிய வில்லை. சங்கடமான வருத்தக்குறியுடன் முகத்தைச் செய்து கொண்டு 'என்ன சங்கதி?' என்று ஆச்சரிய பாவத்துடன் கேட்டார்.

''சங்கதி என்ன, எல்லாம் உங்கள் மகன் நம்ம ராமுவால்தான்'' என்று செட்டியார் பதில் சொன்னார். ''எங்க ராமனாலா? அவன் என்ன, இந்தக் காரியத்தில் சம்பந்தம்?' என்று மனவருத்தத்துடனும், ஆத்திரத்துடனும் கேட்டார், என் தகப்பனார். ''அந்த அநியாயத்தை ஏன் கேட்கிறீர்கள்? அங்கு வந்து பாருங்கள், சாப்பாடு பண்டங்கள் நாசமாய்க் கிடப்பதை, மலையாட்டம் கெட்டுப்போன பண்டம் குவிந்து கிடக்கிறது'' என்றார் வக்கீல் குமாஸ்தா பார்ப்பனர்; ''என்ன சங்கதி? எனக்குப் புரியவில்லை. சொல்லுங்கள் புரியும்படியாக.'' என்று அவசரமாகக் கேட்டார் தகப்பனார்.

"சமாராதனை நடந்து கொண்டிருக்கும்போது, உங்க ராமு வீட்டின் மீது ஏறிப் புறக் கடைப்பக்கம் குதித்து, பந்தி நடந்த பக்கம் வந்து வெளிக் கதவைத் திறந்து துலுக்கனையெல்லாம் கூட்டி வந்து உள்ளேவிட்டு விட்டான்; பிராமணாள் 200, 300 பேர் சாப்பிடச் சாப்பிட இந்த அக்கிரமம் நடந்ததால், அவர்கள் அத்தனை பேரும் எழுந்து விட்டார்கள். பின்புறம் செய்து வைத்திருந்த சாப்பாடு, கறி, குழம்பு, பதார்த்தம் எல்லாம் நாசமாய்விட்டது,'' என்றார் மற்றொரு வக்கீல் குமாஸ்தா பார்ப்பனர்; ''சொல்லுங்கள் சாமி. நன்றாய் நாய்க்கருக்கு விளங்கும்படி சொல்லுங்கள்'' என்றார் மற்றொரு செட்டியார்; என் தகப்பனார் மகா ஆத்திரத்துடன் ''என்னடா ராமா என்ன நடந்ததுடா? அங்கென்னத்துக்கு நீ போனாய்? என்ன சங்கதி சொல்லு...,'' என்று ஆவேசம் தாண்டவமாட, அதிகார தோரணையில் கேட்டார்.

நான், "ஒன்றும் இல்லையப்பா; இந்தச் சாமியார் தம்பியை வாரண்டு சேவகன் வாரண்டில் பிடித்து விட்டான்; பிறகு, கையெழுத்துப் போடாமல் தப்பி ஒடி எல்லைய்யர் சத்திரத்திற்குள்ளே போய்ப் புகுந்து கதவைத் தாளிட்டுக் கொண்டார்; நான் 'சட்டென்று ஒட்டுமேல் ஏறிக் குதித்துக் கதவைத் திறந்து விட்டேன்; பிறகு, சேவகன் வந்து பிடித்துக் கொண்டு போய் விட்டான். அதனால் இவர்கள் சமாராதனை கெட்டுப் போய்விட்டதாம்,'' என்றேன்.

என் தகப்பனாருக்கு ஏற்பட்ட கோபத்துக்கும், ஆத்திரத்துக்கும் அளவே இல்லை? ''அடத்தேவடியாள் மகனே, உனக்கென்ன அங்கு வேலை. வாரண்டுக்காரனிடமிருந்து ஓடி விட்டால், சேவகன் என்னமோ பார்த்துக் கொள்ளுகிறான். நீ ஏன் சுவர் எட்டிக் குதித்து உள்ளே போனாய்?'' என்றார். இதற்கு மத்தியில், ''அது மாத்திரமில்லிங்கோ நாய்க்கர்வாள்; பிராம்மணர் வரிசையாகப் பந்தியில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த மத்தியில் இலைகளை மிதித்துக் கொண்டு ஓடிக் கதவைத் திறந்துவிட்டு ஒரு நூறு பேருக்கு மேல் துலுக்கன் மலுக்கன் கண்டவன், நின்றவன், தெருவில் போனவன், எவனெவனோ வந்து உள்ளே புகுந்து அத்தனையையும் தோஷமாக்கி வெளியில் வாரிக்கொட்டப்பட்டது. இன்னமும் இப்ப மணி 4 ஆகியும் அத்தனை பிராம்மனாளும் பட்டினியாய் இருக்கிறார்கள். என் மனம் பதறுதுங்கோ,'' என்று சொன்னார்.

''ஆமாங்காணும், உங்கப்பன் வீட்டுச் சாப்பாடு நாசமாய்ப் போய்விட்டதாக்கும்; மிகப் பாடுபட்டு உழைத்த பிராமனாள் பட்டினி கிடக்கிறாங்களாக்கும். வாங்கின கடனை மோசம் பண்ணி, கடங்காரனை ஏமாத்தி விட்டு, வாரண்டு சேவகனிடமிருந்து தப்பிக் கொண்டு திருட்டுப் பயலாட்டம் ஓடி விடுகிறது; சமாராதனையில் போய் ஒளிந்து கொள்வது; கதவைத்தாள் போட்டுக் கொள்வது; இதெல்லாம் மிக நியாயமான சங்கதி... நான் கதவைத் திறந்ததால்... உலகம் முழுகிப்போய் விட்டது. இந்தப் பிராமணாள் பட்டினி கிடந்தால் உலகமே இருண்டு போகுமாக்கும். ஏகாதசி என்று நினைத்துக் கொள்ளட்டுமே... வந்து விட்டார்கள்... வெட்கமில்லாமல், பிராது சொல்ல,'' என்று நானும் ஆத்திரமாகக் கேட்டேன். உடனே என் தகப்பனார் எழுந்தார்.

''ரங்கேசா... எனக்கு இப்படிப் பட்ட பிள்ளையையா நீ கொடுக்க வேணும்?... நான் முன் ஜென்மத்தில் என்ன பாவம் பண்ணினேன்'', என்று மார்மாராக, பெண்களைப் போல் ஓங்கி ஓங்கி அடித்துக் கொண்டார்.

''என்ன முழுகிப்போய்விட்டது? அந்தத் திருட்டுப் பார்ப்பான் பண்ணினதைப் பற்றிச் சிந்திக்க மாட்டேன் என்கிறீர்கள். இவர்கள் கொழுத்துப் போய்ச் சோற்றை எடுத்துத் தெருவில் கொட்டி விட்டால், அதற்கு யார் என்ன பண்ணுவார்கள்? இன்னமும் பணம் அடிக்கலாம் என்று இந்தப் பார்ப்பான்கள், இந்தச் செட்டியார்களைக் கூட்டிக் கொண்டு வந்திருக்கிறார்கள்'' என்றேன். அதற்குள் வக்கீல் குமாஸ்தா பார்ப்பனர் ''நான் அப்போதே சொல்லவில்லையா?... கலெக்டரிடம் பிராது கொடுத்து விடுங்கள் என்று'' என்று சொன்னார். என் தகப்பனாருக்கு நான் சொன்ன பதில் மேலும் ஆத்திரத்தைக் கிளப்பி விட்டது ''சாமி நீங்க சும்மா இருங்க,'' என்று சொல்லிக் கொண்டு, குனிந்து பக்கத்தில் இருந்த அவரது செருப்புகளில் ஒன்றை எடுத்துக் கொண்டு, என்மீது வெத்திலை பாக்கு எச்சிலைத் துப்பி, என் குடுமியைப் பலமாய்ப் பிடித்துக் கொண்டு தலை-முகம்-முதுகு-என்று ஒன்றும் பார்க்காமல் 7, 8 அடி வாயில் வந்தபடி வைதுக்கொண்டு, பலமாக அடித்தார்.

செட்டியார்மார்கள் எல்லோரும் எழுந்து, "அண்ணா, அண்ணா விட்டு விடுங்கள்... விட்டுவிடுங்கள், தம்பி சின்னப்பையன்... அவனுக்கு இன்னமும் சரியாப் புத்திவரவில்லை; நாளாவட்டத்தில் வந்து விடும்; அடிக்காதீர்கள்'', என்று மத்தியில் புகுந்து அடிப்பதைத் தடுத்து நிறுத்தினார்கள். தகப்பனாருக்கு கோபம் தணியவில்லை; நானும் அடிக்குப் பயந்து, குனிந்து கொடுக்காமல் - இந்தப் பார்ப்பனர்களை முறைத்துப் பார்த்த வண்ணமே - நின்று கொண்டிருந்தேன்.

என் தகப்பனார் செருப்பைக் கீழே போட்டுவிட்டு, கையைக் கழுவிக் கொண்டு, பெட்டிக்கு முன் உட்கார்ந்து, பெட்டியைத் திறந்து ஒரு அய்ம்பது ரூபாய் நோட்டு ஒன்றையெடுத்து பெரிய செட்டியார் கையில் கொடுக்க, எழுந்து நின்று ''நீங்க பெரிய மனது பண்ணி, என்னை மன்னித்து, இதை மறந்துவிட வேண்டும். இவன் எனக்கு மகனல்ல; சத்ரு... என் பெயரைக் கெடுக்கத் தோன்றினவன். ஏதோ இரண்டு ஆளைவிட்டு, நன்றாக உதைத்து, கையையோ, காலையோ ஒடித்துவிடுங்கள். நான் ஏன் என்று கூடக் கேட்பதில்லை. எனக்குப் போதும்... இந்தப் பிள்ளையைப் பெற்ற பெருமை. இவன் தொலைய வேண்டும்; இல்லாவிட்டால் நான் தொலைய வேண்டும்; இனி இரண்டில் ஒன்று தான். சரி, இனிமேல் என்ன செய்வதென்பதை நான் பார்த்துக் கொள்கிறேன்,'' என்று சொல்லிக் கொண்டே, கண்களில் நீர் தாரை தாரையாக ஒழுக அவர் கையைப் பிடித்துக் கொண்டு 'நீங்கள் பெரிய மனசு பண்ணி மன்னிக்க வேண்டும்'', என்று சொல்லி 50 ரூபா நோட்டைக் கையில் கொடுத்தார்.

-தந்தை பெரியார் எழுதிய சுய சரிதைப் புத்தகத்திலிருந்து...

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+