என் கழுத்திலிருந்து வழியும் ரத்தத்தை எடுத்து கல்லக்குடி என்று எழுதுங்கள்! #கருணாநிதி
- கிங்
அது 1953 ம் ஆண்டு தி.மு கழகம் போராட்டங்கள் மூலம் தனது வேரோட்டங்களை தமிழகம் முழுவதும் பரப்பிய காலகட்டம் அது. மொட்டு விட்டு முகிழ்க்க தொடங்கியிருந்த தி.மு. க அந்த ஆண்டின் ஜூலை மாதத்தில் மும்முனை போராட்டங்களை அறிவித்திருந்தது.

1. ஜூலை 14 : - முதலமைச்சர் ராஜாஜியின் குலக்கல்வி திட்டத்தை எதிர்த்து ஈ.வி கே சம்பத் தலைமையில் மறியல் செய்வது
2. ஜூலை 15: - அரியலூர் அருகே வடநாட்டுக்காரர் ஒருவரால் அமைக்கப்பட்ட சிமென்ட் ஆலையும் அதனால் அந்தப் பகுதிக்கு டால்மியாபுரம் என்று சூட்டப்பட்ட பெயரையும் எதிர்த்து அந்தப் பகுதிக்கு கல்லக்குடி என்று பெயர் சூட்டுவது, இதற்கு கருணாநிதி தலைமை ஏற்பது
3.ஜூலை 15 :- அப்போதைய பிரதமர் நேரு திமுகவின் செயல்பாடுகளை நான்சென்ஸ் என்று குறிப்பிடுகிறார். இதை எதிர்த்து ரயில் மறியல் போராட்டம் நடத்துவது என்று மூன்று போராட்டங்களை அறிவித்திருந்தது திமு கழகம்
டால்மியாபுரத்தில் அன்று நடக்கப்போகும் போராட்டம் திமுகவின் வரலாற்றிலும் தனது அரசியல் வாழ்விலும் அப்படி ஒரு பெயரையும், ஒரு தனித்துவமான இடத்தையும் பெற்றுத் தரும் என கருணாநிதிக்கு அப்போது தெரிந்திருக்க நியாயமில்லை. தமிழர் வாழும் பகுதியில் சிமென்ட் தொழிற்சாலை ஒன்றை வடநாட்டை சேர்ந்த ஒருவர் நிறுவிவிட்டார் என்பதற்காகவே அந்த பகுதிக்கு டால்மியாபுரம் என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது. இந்தப் பெயரை மாற்ற வேண்டும் என்றுதான் தி மு க அன்று போராட்டம் அறிவித்திருந்தது.
வன்முறைக்கு சற்றும் இடம் தராமல் ரயில் நிலையப் பெயர் பலகையில் டால்மியாபுரம் என்று பொறிக்கப்பட்டிருந்த இடத்தில் கல்லக்குடி என்று எழுதப்பட்ட தாளை ஒட்டவேண்டும் இதுதான் போராட்டத்தின் செயல் வடிவமாக இருந்தது. போராட்டம் நடைபெறும் இடமான டால்மியாபுரத்திற்கு காலை நேரத்திலேயே வந்து விடுகிறார் கருணாநிதி. திட்டமிட்டபடி கல்லக்குடி என்று எழுதப்பட்ட தாளை டால்மியாபுரம் என்று பொறிக்கப்பட்டிருந்த பெயர் பலகையின் மீது ஒட்டுகிறார் கருணாநிதி. அப்போது அங்கிருந்த அரசு அதிகாரிகளோ அல்லது காவல்துறையோ எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது. அந்நேரத்தில் அந்த ரயில் நிலையத்திற்கு வந்து செல்லும் ஒரே ரயிலான அந்த ரயிலும் காலை 9.50 மணிக்கு அந்த ரயில் நிலையத்திற்கு வந்து சேருகிறது. இதைப் பார்த்த கருணாநிதி உடனடியாக சென்று ரயிலின் முன்பு தண்டவாளத்தில் தலையை வைத்து படுத்து விடுகிறார். அவரோடு முல்லை சக்தி, குழந்தை வேலு, கஸ்தூரி, குமாரவேலு ஆகியோரும் தண்டவாளத்தில் படுத்துக்கொண்டு போராட துவங்குகிறார்கள். டால்மியாபுரத்தின் பெயரை கல்லக்குடி என்று மாற்றும்வரை ரயிலை விடமாட்டோம் என்று போராடுகிறார்கள்.
அதுவரை எதுவும் செய்யாமல் இருந்த காவல்துறை அதிகாரிகளும், பிற அரசு அதிகாரிகளும் ஓடோடி வருகிறார்கள், உங்களது கோரிக்கையை ரயில்வே துறை அதிகாரிகளுக்கு எழுதுங்கள் இப்போது ரயிலை போக விடுங்கள் என்று சமாதானம் செய்ய முயற்சிக்கிறார்கள். திட்டவட்டமாக மறுத்து விடுகிறார் கருணாநிதி. இதைக் கண்ட அதிகாரிகள் ரயிலை இயக்க சொல்லி ரயிலின் ஓட்டுனருக்கு உத்தரவிடுகிறார்கள். ரயில் நகரத் துவங்கியதும் போராட்டம் நடத்துபவர்கள் எழுந்து சென்று விடுவார்கள் என்பது அதிகாரிகளின் எண்ணம் ஆனால் கருணாநிதியோ சற்றும் அசையாமல் அங்கேயே படுத்துக் கொள்கிறார். நகர்ந்து வந்த ரயில் கருணாநிதியின் அருகில் வந்து நிற்கிறது. அப்போது காவல்துறை வேறு வழியில்லாமல் கருணாநிதியையும் அவரோடு போராடியவர்களையும் கைது செய்து அழைத்து செல்கிறது.
கருணாநிதி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டாலும் போராட்டம் அத்தோடு அணைந்து விடவில்லை. மதியம் மணி 1.30 ஐ தொடுகிறது. கவிஞர் கண்ணதாசன் தலைமையில் மீண்டும் போராட்டம் தொடர்கிறது. இப்படி கருணாநிதி தொடங்கிவைத்த அந்த போராட்டம் சற்று நேரத்திலேயே பொது மக்களின் போராட்டமாக மாறுகிறது உடனடியாக தடியடி நடத்த துவங்குகிறது காவல்துறை. நேரம் செல்ல செல்ல போராட்டத்தின் வீரியம் அதிகரிக்கிறது காவல்துறையால் போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர முடியாத நிலை வந்தபோது துப்பாக்கிச் சூடு நடத்துகிறது காவல்துறை. இதில் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த கேசவனும், நடராஜனும் உயிரிழந்தனர்.
டால்மியாபுரத்தில் நிலைமை இப்படி நீடிக்க தூத்துக்குடியிலும் ரயில் மறியல் போராட்டம் முழு வீச்சுடன் நடக்கிறது அங்கும் காவல்துறை கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்த 4 உயிர்கள் பரிதாபமாக பலியாகின. 20 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். கல்லக்குடியில் கருணாநிதி தூவிய வீரிய விதை சென்னை, மதுரை திருச்சி, கோவை, திருவண்ணாமலை மற்றும் சிதம்பரம் போன்ற இடங்களிலும் மக்கள் போராட்டமாக வீறு கொண்டு எழுகிறது. அன்று ஒரு நாளில் மட்டும் தமிழ்நாடு முழுக்க கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது. டால்மியாபுரத்தில் போராடிய கருணாநிதி உள்ளிட்ட போராளிகள் அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு அரியலூர் கிளைச் சிறையில் அடைக்கப்படுகின்றனர். கருணாநிதிக்கும் மற்றவர்களுக்கும் 6 மாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது
இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட போராளிகளில் முக்கியமானவர் திரு ராம சுப்பையா. இவரது மகன் பிரபல திரைப்பட இயக்குனர் எஸ் பி முத்துராமனிடம் கல்லக்குடி போராட்டம் குறித்தும் கருணாநிதி குறித்தும் அவரது தந்தையார் சுப்பையா குறித்தும் கேட்டபோது தனது சிறு பிள்ளை பருவ நினைவுகளை ஒன் இந்தியா தமிழிடம் அவர் மனம் திறந்து பகிர்ந்து கொண்டார்.

"அப்போது நான் சிறு பையன். கல்லக்குடி போராட்டத்திற்கு பிறகு 2-3 நாட்களாக எனது தந்தை எங்கிருக்கிறார் என்பதே தெரியவில்லை. பின்னர் பத்திரிக்கைகள் மூலம் அவர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் என்பதை தெரிந்து கொண்டோம். அப்போது எனது தாயார் விசாலாட்சி என்னையும் அப்போதுதான் பிறந்திருந்த எனது தம்பியையும் அழைத்துக் கொண்டு சிறைக்கு சென்றார். அந்த சிறையில்தான் எனது தந்தையும் கலைஞர் கருணாநிதியும் அடைக்கப்பட்டிருந்தனர்.
என்னுடைய அம்மா அப்பாவை பார்த்ததும் அழ ஆரம்பிச்சுட்டாங்க, அப்போ கலைஞர் சொன்னார் ஒண்ணுமில்லம்மா நாங்க ஜெயில்ல இருக்கோமுன்னு நீங்க நினச்சிட்டு இருக்கீங்க. கம்பிக்கு இந்தப் பக்கம் இருக்க நாங்க உங்களைப் பாத்தா நீங்க ஜெயில்ல இருக்க மாதிரி இருக்கு, நாங்க சின்ன சிறையில இருக்கோம் நீங்க பெரிய சிறையில இருக்கீங்க அவ்வளவுதான் வித்தியாசம். இந்த நிலைமைய மாத்துறதுக்குத்தான் இந்தப் போராட்டம். இதை சந்தோசமா நீங்க எடுத்துக்கணும்னு கலைஞர் சொன்னது எனக்கு இன்னமும் நியாபகம் இருக்கு.
சிறையில் இருக்கும்போதே கலைஞர் ஒரு மாதிரி அரசாங்கத்தை நடத்தினார். அதுல கலைஞர் தான் முதலமைச்சர். என்னோட அப்பாதான் உணவுத்துறை அமைச்சர். இப்டியெல்லாம் இருந்த அந்த சிறையில ரொம்ப சிக்கலா இருந்த விசயம் கழிவறைக்குப் போறது. அளவுக்கு அதிகமான கைதிகள் இருந்ததுனால துர்நாற்றம் வீசுறதோட கழிவறைக்கு போறதுமே கஷ்டமான காரியமா இருந்தது. இதனால தினமும் என்னோட அப்பாதான் கழிவறைக்குப் போய் கலைஞருக்கு இடம் பிடிச்சு கொடுப்பாராம்.
நான் இயக்கிய நல்லவன் திரைப்பட 100 வது நாள் விழாவில் கலைஞர் கருணாநிதி இந்த தகவலை நினைவு கூர்ந்தார். கலைஞர் எழுதிய நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் சுறுசுறுப்புக்கு பெயர் போனவர் ராமசுப்பையா. ஒரு தொண்டர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணம் ராம சுப்பையா என்று அதில் குறிப்பிட்டிருப்பார்.
ஒரு நாள் எங்களது வீட்டிற்கு முரசொலி செல்வம் வந்தார். வந்தவர் என்னோட அப்பாவை பார்த்து உங்கள மேலவை உறுப்பினரா கலைஞர் நியமிச்சிருக்கார் அப்டின்னு சொன்னார் எங்களுக்கெல்லாம் பெரிய சந்தோசம் அது. அதாவது கலைஞருக்கு தொண்டர்களில் யார் வேலை செய்கின்றார்கள் யார் வேலை செய்யவில்லை என்பதெல்லாம் தெளிவாக தெரியும். உழைக்கின்ற தொண்டர்களுக்கு உரியவற்றை உரிய நேரத்தில் அவர் கொடுத்துவிடுவார். எங்கப்பா எனக்கு மேலவை பதவி வேண்டும் என்றோ அல்லது வேறு ஏதேனும் உதவி வேண்டும் என்றோ ஒருபோதும் கலைஞரிடம் கேட்டது இல்லை. எல்லோரையும் பேரைச் சொல்லி அழைக்கும் கலைஞர் என்னோட அப்பாவை சுப்பையா அண்ணே என்றுதான் அழைப்பார். இந்த தொடர்பு கடைசி வரைக்கும் இருந்தது.
என்னுடைய தந்தை எந்தளவுக்கு கலைஞர் மீது விசுவாசமாக இருந்தார் என்றால் என்னுடைய தந்தைக்கு உடம்பு சரியில்லன்னா டாக்டர்கிட்ட கூட்டிட்டு போறதில்ல. பதிலா கலைஞர்கிட்ட அழைச்சிட்டு போவோம் இவருக்கும் உடம்பு சரியாயிரும். ஒரு முறை உடம்பு ரொம்ப முடியாம வேறு வழியே இல்லாம டாக்டரிடம் கொண்டு போனப்ப அவர் சொல்றார் நான் சாக மாட்டேன்பா, எப்போ கலைஞர் மறுபடி முதலைமைச்சரா வர்றாரோ அப்போதான் நான் சாவேன் அவர்தான் எனக்கு முதல் மாலையும் போடணும் அப்டின்னு. என்ன ஆச்சரியம்னா அது போலவே அடுத்து வந்த தேர்தல்ல கலைஞர் முதல்வராக இருக்கார். அப்போ மறுபடியும் என்னோட அப்பாவுக்கு உடல் நலிவுற்று இறந்து போனார். அப்போ முதல் மாலை போட்டது கலைஞர் கருணாநிதிதான்.
என் தந்தையாரின் இறப்பிற்குப் பிறகு நான் நேரடியா அரசியலுக்கு வரவில்லை அதுக்கு பதிலா என்னோட தம்பி பேராசிரியர் சுப வீரபாண்டியன் கலைஞரோட இருக்கார். அவருக்கும் கலைஞர் உரிய மரியாதையை கொடுத்துட்டு வர்றார்.
கல்லக்குடி போராட்டத்திற்கு முன்பு லால்குடியில் ஒரு மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் என் தந்தையுடன் ஒரு சிறுவனாக நானும் கலந்து கொண்டேன். அப்போ அந்த மாநாட்டில் அண்ணா உரையாற்றுகிறார். தம்பி கருணாநிதியிடம் எந்த காரியத்தை கொடுத்தாலும் அதை வெற்றிகரமாக நிறைவேற்றுவார். ஆகவே இந்தக் கல்லக்குடி போராட்டத்தையும் உன்னிடமே ஒப்படைக்கிறேன் போய் வா தம்பி போய் வா தம்பி என்று உரையை நிறைவு செய்தார் அண்ணா. அடுத்ததாக பேச வந்தார் கலைஞர். வந்தவுடன் வழக்கமான அரசியல் மேடைகளில் பேசுவதுபோல் தலைவர்களின் பெயர்களை சொல்லி அழைத்துப் பேச துவங்காமல் போய் வருகிறேன் அண்ணா போய் வருகிறேன் என்று அண்ணா விட்ட இடத்தில் இருந்து துவங்கினார். கூட்டத்தின் கரகோஷம் அடங்க சிறிது நேரம் ஆனது.
என்னுடைய மனைவி மக்களிடம் எல்லாம் சொல்லிக்கொண்டு வந்துவிட்டேன். கல்லக்குடிக்கு சென்று ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்துப் படுப்பேன். அந்த ரயில் ஓட்டுனர் இரக்கம் இல்லாதவனாக இருந்தால் என் மீது அந்த ரயிலை ஏற்றட்டும். அப்போது என் கழுத்திலிருந்து வழியும் ரத்தத்தை எடுத்து அண்ணா அவர்களே கல்லக்குடி என்று எழுதுவீர்களேயானால் நான் பிறந்த பயனை அடைவேன் என்று உணர்ச்சித் தழும்ப பேசியதும் மாநாடு மொத்தமும் எழுந்து நின்று கை தட்டியது.
இப்படி பேசிவிட்டு சென்றபடி கல்லக்குடி சென்று அங்கு தண்டவாளத்தில் தலைவைத்து படுத்தார் கலைஞர். இப்படி கலைஞரின் பேச்சும் எழுத்தும் ஒன்றாகவே இருந்தது. இப்படிப்பட்ட போராட்டங்களும் பேச்சுக்களும்தான் கலைஞர் மீதும் தி மு கழகம் மீதும் மக்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கையை ஏற்படுத்தியது என்றார் இயக்குனர் எஸ் பி முத்துராமன் .
கல்லக்குடி இருக்கும் வரை, தமிழினம் இருக்கும் வரை கலைஞரின் பெயரும் என்றென்றும் நிலைத்திருக்கும் என்பதில் எள் முனையளவும் ஐயமில்லை.
(திமுகவின் தலைவராக 50 ஆண்டுகளை கருணாநிதி நிறைவு செய்துள்ளதையொட்டிய சிறப்புக் கட்டுரை)












Click it and Unblock the Notifications