For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவிரி... அ.தி.மு.க., எம்.பி.க்கள் ராஜினாமா செய்ய வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க முடியவில்லை என்றால் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களும், அதிமுக எம்.பி.க்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:

"காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை" என்று உச்சநீதிமன்றத்தின் முன்பு மத்திய அரசு திடீரென்று கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழக விவசாயிகளின் நலனை துச்சமாக எண்ணி, அதோடு தமிழ்நாட்டின் நலனையும் காலில் போட்டு மிதித்திருக்கிறது பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மத்திய அரசு.

The union government should immediately set up Cauvery Management Board - stalin

காவேரி இறுதி தீர்ப்பின் படி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று ஒவ்வொரு முறை உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட போதும் அது தொடர்பாக கர்நாடகாவில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டங்களில் கலந்து கொண்டு கர்நாடக பா.ஜ.க.வைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் அந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்திருக்கிறார்கள்.

கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான மாநில அரசும் உச்சநீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்ற தொடர்ந்து மறுத்துக் கொண்டிருக்கிறது. இப்போது கர்நாடக மாநிலத்தின் பக்கமே முழுமையாக சாய்ந்து நின்று, "காவேரி மேலான்மை வாரியம் அமைக்க உத்தரவிடும் அதிகாரம் இரு நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வுக்கு இல்லை" என்று மத்திய அரசு முட்டுக்கட்டை போட்டிருப்பது தமிழக விவசாயிகளையும், தமிழக மக்களையும் பெருத்த வேதனைக்கு உள்ளாக்கியிருக்கிறது.

காவேரி பிரச்சினையில், செப்டம்பர் 5 ஆம் தேதியில் தொடங்கி காவேரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று இதுவரை ஐந்து உத்தரவுகளை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது. கடைசியாக 30.9.2016 அன்று பிறப்பித்த உத்தரவில் அக்டோபர் 4 ஆம் தேதிக்குள் "காவேரி மேலாண்மை வாரியம்" அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன்படி தமிழகத்தின் சார்பில் காவேரி மேலாண்மை வாரிய உறுப்பினர் பெயரும் பரிந்துரை செய்யப்பட்டு விட்டது.

காவேரி மேலாண்மை வாரியம் அமைந்து விடும் என்று தமிழக விவசாயிகள் எல்லாம் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்த நேரத்தில் முன்னால் பிரதமர் தேவகவுடா உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கர்நாடகாவில் உண்ணாவிரதம் இருந்தார். பிரதமர் நரேந்திரமோடியின் உத்தரவாதத்தின் பேரில் உண்ணாவிரதத்தை திரும்பப் பெறுவதாக பிறகு தேவகவுடா அறிவித்தார்.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் சார்பில் "30.9.2016 அன்று உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என்று ஒரு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணையில் இன்றைய தினம் மத்திய அரசின் சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், "காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை" என்று வாதிட்டுள்ளார்.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்ற மறுப்பதில் கர்நாடக மாநில அரசும், மத்திய அரசும் ஒரு நாணயத்தின் ஒரே பக்கத்தில் நின்று தமிழக விவசாயிகளின் நலனை புறக்கணித்திருக்கும் செயல் இதயத்தை ஈட்டி கொண்டு தாக்குகிறது.

கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் இரு மாநிலங்களுக்கும் பொதுவாக செயல்பட வேண்டிய மத்திய அரசே தேர்தல் காரணங்களை மனதில் கொண்டு கர்நாடக மாநிலத்திற்கு ஆதரவாக செயல்படுவது, இதுவரை மத்திய அரசு கூறி வந்த "கூட்டுறவு கூட்டாட்சி"க்கு முற்றிலும் விரோதமாகவும், தமிழகத்தின் நலன்களை காலில் போட்டு மிதிக்கும் செயலாகவும் இருக்கிறது. "காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்" என்று காவேரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பு வெறும் பரிந்துரை மட்டுமே என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தின் முன்பு இன்னொரு அபாயகராமான வாதத்தையும் எடுத்து வைத்துள்ளது. இது காவேரி இறுதி தீர்ப்பையே சீர்குலைக்க முனைவதாக அமைந்திருக்கிறது.

காவேரி நடுவர் மன்றம் 5.2.2007 அன்று பிறப்பித்த இறுதி தீர்ப்பை மத்திய அரசு 19.2.2013 அன்று அரசிதழில் வெளியிட்டது. அப்படி வெளியிட்ட உடனேயே காவேரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பாணையாகி விடுகிறது என்று 1956 ஆம் வருட நதி நீர் தாவாச் சட்டப் பிரிவு 6(2) தெளிவாக கூறுகிறது.

இந்நிலையில் இறுதி தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டு மூன்றரை வருடங்கள் கழித்து அத்தீர்ப்பில் காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்த விஷயம் மட்டும் வெறும் பரிந்துரை என்று மத்திய அரசு கூறியிருப்ப நதி நீர் தாவா சட்டப்பிரிவுகளுக்கு முற்றிலும் விரோதமானது. "அரசிதழில் வெளியிடப்பட்ட இறுதி தீர்ப்பை நிறைவேற்ற மேலாண்மை வாரியம் அமைப்பது மத்திய அரசின் கடமை" என்று இதே நதி நீர் சட்டப் பிரிவு 6A சுட்டிக்காட்டுகிறது. ஆகவே, மத்திய அரசுக்கு உள்ள இந்த பொறுப்பையும் தட்டிக் கழிக்கும் விதத்தில் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டிருப்பது ஏற்கனவே காவேரி தண்ணீர் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கும் விவசாயிகளின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்திருக்கிறது.

காவேரி நடுவர் மன்றத் தீர்ப்பினை "வெறும் பரிந்துரை" என்ற தனது வாதத்தை திரும்பப் பெற்று, உச்சநீதிமன்ற உத்தரவின்படி காவேரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இரு மாநிலங்களும் மத்திய அரசுக்கு இரு கண்கள் போன்றவை. அதில் ஒரு கண்ணில் சுண்ணாம்பு, மற்றொரு கண்ணில் வெண்ணெய் என்ற போக்கை மத்திய அரசு கடைப்பிடிப்பது மத்திய- மாநில உறவுகளுக்கு சவால் விடும் போக்காக அமைந்திருக்கிறது. ஆகவே காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பதையும், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடக மாநிலம் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதையும் மத்திய அரசு தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி உறுதி செய்ய வேண்டும்.

அதே போல் தமிழகத்தை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி மத்திய அமைச்சர்கள் பொன் ராதாகிருஷ்ணன், நிர்மலா சீத்தாராமன் உள்ளிட்டோரும், அதிமுக எம்.பி.க்களும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்ற முன் வர வேண்டும். தமிழகத்தின் நியாயத்தை நிலைநாட்ட பாடுபட வேண்டும். அப்படி அழுத்தம் கொடுக்க இயலவில்லை என்றால் தமிழகத்தை சேர்ந்த பா.ஜ.க. மத்திய அமைச்சர்களும், அதிமுக எம்.பி.க்களும் உடனடியாக தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

English summary
tamilnadu State Opposition leader MK Stalin urges to union government should immediately set up Cauvery Management Board
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X