For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திகைக்க வைக்கும் திருக்குறள் திலீபன்!

Google Oneindia Tamil News

தேவகோட்டை: 1 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உள்ள தேதியைச் சொன்னால் அதன் கிழமையை சரியாக சொல்ல உங்களால் முடியுமா...? ஆனால் திருக்குறள் திலீபனால் முடியும். இந்த திருக்குறள் திலீபன் நடத்திய நினைவாற்றல் பயிலரங்க நிகழ்ச்சி தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் திருக்குறள் திலீபனின் நினைவாற்றல் பயிலரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வந்தவர்களை ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். காரைக்குடி தங்கசாமி, நடராஜபுரம் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Thirukuram Dileepan programme held in Devakottai school

திருக்குறள் தீலீபன் மாணவர்களிடையே பேசும்போது, புராணகால வரலாற்றிலிருந்து காணப்படும் பல வகை கலைகளுள் ஒன்று நினைவாற்றலை மனதில் நிறுத்தி அதை கவனத்தில் கொண்டு,மீண்டும் நினைவுபடுத்தி கூறும் கவனக கலை ஒன்றாகும். இது தமிழர்களின் பழங்கலைகளில் ஒன்றாகும். கவனகம் என்றால் என்ன? என்பதற்கு ஒரே நேரத்தில் தன்னை சுற்றி நடக்கக்கூடிய பல்வேறு நிகழ்வுகளை நினைவில் நிறுத்தி, முடிவில் தொகுத்துக் கூறுவதாகும்.

இது நினைவாற்றலின் உயர்ந்த வடிவமாகும். நமது முன்னோர்கள், நூறு நிகழ்வுகளை நினைவில் நிறுத்தி சொல்லக்கூடிய அளவிற்கு ஆற்றல் பெற்றவர்களாக இருந்திருக்கிறார்கள். நான் சிறு வயது முதல் கற்று கொண்டேன். எனது தாயும், தந்தையும், ஆசிரியர்களும் எனக்கு வழி காட்டுதலாக இருந்து என்னை நன்றாக ஊக்கப்படுத்தி இந்த அளவுக்கு பயிற்சி அளித்தனர். கவனக கலை நினைவாற்றலை பெருக்கும். மனதும், உணர்ச்சியும் நமக்கு தனி, தனியாக வழிகாட்டும். ஆனால் மனது சொல்படிதான் நாம் நடக்க வேண்டும். அப்போதுதான் வெற்றி அடைய முடியும். திருக்குறள் பயிற்சி அனைவரும் பெற வேண்டும். என்று பேசினார்.

Thirukuram Dileepan programme held in Devakottai school

திருக்குறள் திலீபன் ஒரே நேரத்தில் தன்னை சுற்றி நடக்க கூடிய பல்வேறு நிகழ்வுகளை நினைவில் நிறுத்தி, முடிவில் தொகுத்து கூறினார். மாணவ, மாணவியர் திருக்குறள் பற்றிய சந்தேகங்கள் கேட்டு தெளிவு பெற்றனர். நினைவாற்றல் கலை - திருக்குறளில் முதல் சீரை சொன்னால், குறளை சொல்லுதல், குறளை சொன்னால் குறளின் எண்னை சொல்லுதல், குறளின் எண்னை சொன்னால் குறளை சொல்லுதல் போன்ற பல்வேறு வகைகளில் நினைவாற்றலை வெளிப்படுத்தினார். உதடு ஒட்டாத திருக்குறளை வாயில் உதடுகளில் குண்டூசி வைத்து கொண்டு சொன்னதை கண்டு மாணவர்கள் அனைவரும் ஆச்சிரியத்தில் மூழ்கி போனார்கள்.

கி.பி.ஒன்று முதல் கி.பி.ஒரு கோடி ஆண்டுகள் வரையிலான தேதியைச் சொன்னால் கிழமையை சரியாக கூறினார். 1 முதல் 50 பெயர்களை வரிசை எண்ணுடன் மாற்றி மாற்றி சொல்ல, அதை நினைவில் நிறுத்தி, 1 முதல் 50 வரை,எண்ணையும் அதற்கான பெயரையும் வரிசையாக கூறினார். வந்திருந்த பெற்றோர்கள் ,சிறப்பு விருந்தினர்கள் அவர்களது பிறந்த தேதி முதல் முக்கியமான நிகழ்ச்சிகள் வரை எந்த தேதியை சொன்னாலும்,உடன் கிழமையை கூறி பார்வையாளர்களை அசத்தினார்.

Thirukuram Dileepan programme held in Devakottai school

உலக நாடுகளின் பெயரை சொன்னால், அந்த நாட்டு தலைநகரத்தின் பெயரை கூறினார். தலை நகரத்தின் பெயரை சொன்னால் உலக நாடுகளின் பெயரை சொன்னார். பதினாறு வகையான கவனகம் நிகழ்ச்சிகளான குறள் கவனகம், பறவை கவனகம், எண் கவனகம், விலங்கு கவனகம், எழுத்து கவனகம், நூல் கவனகம், கூட்டல் கவனகம், மலர்க் கவனகம், பெயர்க் கவனகம், பழக் கவனகம், ஆண்டுக் கவனகம், நாடுகள் கவனகம், மாயக்கட்ட கவனகம், வண்ணக் கவனகம், தொடு கவனகம், ஒலிக் கவனகம் என அனைத்தையும் மாணவர்கள் முன்பாக செய்து காண்பித்ததுடன் அதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதையும் விளக்கி கூறினார்.

மாணவர்கள் பரமேஸ்வரி, வெங்கட்ராமன், திவ்யஸ்ரீ, ராஜேஸ்வரன், ரஞ்சித், பரத்குமார், ராஜி, சின்னம்மாள், அபிநயா, ஜீவா உள்ளிட்ட பல மாணவர்கள் கேள்விகள் கேட்டு பதில்கள் பெற்றனர். நிகழ்ச்சியை ஆசிரியர் செல்வம் தொகுத்து வழங்கினார். நிறைவாக ஆசிரியை முத்துலெட்சுமி நன்றி கூறினார்.

நிலவேம்பு குடிநீர் கசாயம் வழங்கல்

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் நகராட்சி சார்பில் தொடர்ந்து 5 நாட்கள் நிலவேம்பு குடிநீர் வழங்கும் விழாவின் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

Thirukuram Dileepan programme held in Devakottai school

ஆசிரியை கலாவல்லி வரவேற்றார். தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம், தேவகோட்டை நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) ஜெயபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேவகோட்டை நகராட்சி தலைவர் சுமித்ரா ரவிக்குமார் மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் கசாயத்தை மாணவர்களுக்கு வழங்கி பேசுகையில், தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து 5 நாட்கள் நகராட்சி சார்பில் நிலவேம்பு குடிநீர் வழங்க ஏற்பாடுகள் செய்துள்ளது. பள்ளி மாணவர்கள் இளம் வயதிலேயே வரும் முன் காக்கும் வகையில் இந்த நிலவேம்பு குடிநீர் கசாயத்தை தொடர்ந்து சாப்பிட்டால் பல்வேறு முக்கிய நோய் பதிப்பில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ளலாம்.

Thirukuram Dileepan programme held in Devakottai school

தொடர்ந்து 5 நாட்கள் வழங்கி பிறகு 60 நாட்கள் கழித்து மீண்டும் தொடர்ந்து 5 நாட்கள் இந்த நிலவேம்பு வழங்கப்படும். இது இந்த ஆண்டு முழுவதும் தொடரும். மருந்து குடிப்பதற்கு கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் இதன் பலன்கள் அதிகம். பள்ளி மாணவர்கள் சுமார் 15 மி.லி .குடித்தால் போதுமானது என்று கூறினார். மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. நகராட்சி சுகாதார ஆய்வாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.

English summary
Thirukuram Dileepan's programme was held in Devakottai Chairman Manickavasagam middle school.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X