For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"எம்.ஜி.ஆர். திமுகவை விட்டு நீக்கப்பட்டு விட்டார்"... அந்த நாள் இன்று!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அரசியலில் புதிய சகாப்தம் தொடங்கிய நாள் இன்று. ஆம், 1972ம் ஆண்டு அக்டோபர் 14ம் தேதிதான் திமுகவிலிருந்து எம்.ஜி.ஆர். முழுமையாக டிஸ்மிஸ் செய்யப்பட்டார். திமுக பொதுக்குழு இன்றுதான் கூடி திமுகவிலிருந்து எம்.ஜி.ஆரை நீக்கி தீர்மான் போட்டது.

எம்.ஜி.ஆரை கட்சியை விட்டு நீக்கும் தீர்மானத்தை நாவலர் நெடுஞ்செழியன் கொண்டு வர, அதை முதலில் திமுக செயற்குழு நிறைவேற்றியது. அதைத் தொடர்ந்து திமுக பொதுக்குழு கூடி நிறைவேற்றியதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர். திமுகவிலிருந்து முழுமையாக நீக்கப்பட்ட நாள் இன்று.

திமுகவிலிருந்து எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டதும் தமிழகமே கொந்தளித்தது. எம்.ஜி.ஆரின் ரசிகர்களும், அவருடைய ஆதரவாளர்களாக இருந்த திமுகவினரும் பெருவாரியாக திரண்டு வந்து எம்.ஜி.ஆர். பின் நின்றனர். திமுக உடைந்தது.. அதிமுக பிறந்தது.

எம்.ஜி.ஆர். விவகாரம் குறித்து மறைந்த கவியரசு கண்ணதாசன் தான் எழுதிய "நான் பார்த்த அரசியல்" என்ற நூலில் விரிவாக எழுதியுள்ளார். அதிலிருந்து...

என்னய்யா செய்யலாம்?

என்னய்யா செய்யலாம்?

கருணாநிதியும் நானும் இந்தக் கட்டத்தில் நன்றாகப் பழகிக் கொண்டிருந்தோம். உள்ளுக்குள்ளே அவர்கள் இருவருக்கும் (கருணாநிதி - எம்.ஜி.ஆர்) தகராறு நடந்து கொண்டிருந்தது. திடீரென்று ஒருநாள் கருணாநிதி எனக்கு டெலிபோன் செய்து , "என்னய்யா செய்யலாம்" என்று கேட்டார்.

கணக்குத்தானே கேட்கிறார்..

கணக்குத்தானே கேட்கிறார்..

"சரி, அவர் கணக்குத்தானே கேட்கிறார். எல்லா ஊர்களிலேயிருந்தும் கணக்கு அனுப்ப வேண்டும் என்று செயற்குழுவிலே தீர்மானம் போட்டு, செயற்குழுவை ஒத்தி வைத்து விடுங்கள். கணக்கு வருவதற்கு ஒரு தலைமுறையாகும். அதுவரை என்னசெய்வார் என்று பார்க்கலாம்,"என்று நான் சொன்னேன்

ஒரேயடியாக ஒழித்து விட வேண்டியதுதான்

ஒரேயடியாக ஒழித்து விட வேண்டியதுதான்

செயற்குழுவுக்கு முதல் நாள் நண்பர் கருணாநிதி அவர்கள், எனக்கு டெலிபோன் செய்து, "இல்லை இல்லை. அது ஒன்றும் நடக்காது. இன்று ஒரேடியாக ஒழித்துவிட வேண்டியது தான்" என்று சொன்னார். நான் சொன்னேன், "சில மக்கள் பின்னணி இருக்குமே" என்று.

பத்துப் பேர் கத்துவான்.. பார்த்துக்கலாம்

பத்துப் பேர் கத்துவான்.. பார்த்துக்கலாம்

"என்ன, பத்துப்பேர் கத்துவான். பார்த்துக் கொள்ளலாம்" என்றார். மறுநாள் நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்கும் போது, நண்பர் ‘சோ' அவர்கள் எனக்கு டெலிபோன் செய்தார். "தெரியுமா விஷயம்?" என்று கேட்டார். "என்ன?" என்றார். "தெரியாது" என்றேன். "எம்.ஜி.ஆரை டிஸ்மிஸ் செய்து விட்டார்கள்" என்றார். "இருக்காதே" என்றேன். "இப்பொழுது தான் எனக்குச் செய்தி வந்தது" என்றார். இது இரண்டு மணிக்கு நடந்திருக்கும் என்றால், எனக்கு இரண்டு ஐந்துக்கெல்லாம் இந்தச் செய்தி வந்தது.

கேள்விப்பட்டாயா?

கேள்விப்பட்டாயா?

அவர் டெலிபோனை வைத்த உடனேயே, டெலிபோன் மணி அடித்தது. கருணாநிதி பேசினார்: "முதல் முதலாக உனக்குத் தானய்யா சொல்லுகிறேன். கேள்விப்ப ட்டாயா?" என்றார். "உங்களுக்கு முன்னாலே சோ போன் பண்ணினார் அய்யா" என்றேன். "என்ன நினைக்கிறாய்?" என்றார். "கொஞ்சம் கலகம் இருக்குமே" என்றேன். "பார்த்துக் கொள்ளலாம்"என்றார் அவர். "என்ன, பத்து ஊரிலே கலகம் செய்வார்கள். பார்ப்போம்" என்றார்.

போட்ட கணக்கு தப்பாயிற்று

போட்ட கணக்கு தப்பாயிற்று

ஆனால் அவர் போட்ட கணக்கு தவறு. மக்கள் பின்னணி என்பது எழுச்சியாக எழுமானால் காரண காரியங்கள் இன்றியே அது பெருங்கூட்டமாகத் திரளும் என்பதை நான் பல கட்டங்களில் பார்த்திருக்கிறேன். 1971 பொதுத் தேர்தலே சான்று. அதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆருக்கு மிகப் பெரிய பின்னணி இருக்கிறது என்பதை கருணாநிதி கண்டு கொள்ள முடிந்தது.

தலைவரானார் எம்.ஜி.ஆர்.

தலைவரானார் எம்.ஜி.ஆர்.

1970 - 1974 க்கு இடைப்பட்ட காலத்தில் எம்.ஜி.ஆர். அரசியல் தலைவரானதை நான் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். அரசியலில் ஒரு கட்சியைத் துவக்க வேண்டும், தலைவராக வேண்டும் என்கின்ற விருப்பம் எப்போது மே எம்.ஜி.ஆருக்கு இருந்ததில்லை என்பது எனக்குத் தெரியும். சினிமா உலகத்தில் தன்னுடைய ஆதிக்கத்தை விட்டுவிடக் கூடாது, அரசியலில் தன்னுடைய பிடியை விட்டுவிடக்கூடாது என்றுதான் அவர் நினைப்பாரே தவிர, முழு அரசியல்வாதியாக முழு நேரத்தையும் ஒதுக்கிக் கொள்ள அவர் எப்போதும் விரும்புவதில்லை.

வலுக்கட்டாயமாக தலைவராக்கியவர் கருணாநிதி

வலுக்கட்டாயமாக தலைவராக்கியவர் கருணாநிதி

ஆனால் அவரை வலுக்கட்டாயமாக அரசியலில் ஒரு தலைவராக்கிய பெருமை நண்பர் கருணாநிதிக்கு உண்டு. கட்சியிலிருந்து அவரை விலக்கியதன் மூலமாக ஏராளமான கூட்டத்தை அவர் பக்கத்தில் ஓடவிட்ட பெருமையும் கருணாநிதிக்கு உண்டு. எம்.ஜி.ஆரைப் பின் தொடர்ந்து தொண்டர்கள் அனைவரும் போய் விட்டார்கள்.

அற்புதமான திமுக தொண்டர்கள்

அற்புதமான திமுக தொண்டர்கள்

எம்.ஜி.ஆர். விலக்கப்பட்ட பிற்பாடு, அவருக்குப் பின்னணியாக நின்றவர்கள் அனைவரும் மிக அற்புதமான தி.மு.கழகத் தொண்டர்களாக இருந்தார்கள். கட்டுப்பாடற்ற, முறையாக செயல்திட்டமற்ற தொண்டர்கள்தான் என்றாலும், ஒரே தலைவரின் கீழே திரண்டவர்கள். எம் .ஜி.ஆரிடம் அவர்கள் உயிரையே வைத்திருந்தார்கள்.

2வது முறையாக ஏற்பட்ட கொந்தளிப்பு

2வது முறையாக ஏற்பட்ட கொந்தளிப்பு

அந்த முறையில் எம்.ஜி.ஆரைப் பின்பற்றியே அனைவரும் போனார்கள் என்பது மட்டுமல்லாமல், அரசியல் கட்சியில் ஒரு தலைவர் நீக்கப்பட்டார் என்பதற்காக நாடு முழுவதிலும் கொந்தளிப்பு ஏற்பட்ட சம்பவம் இது இரண்டாவது முறையாகும் .இந்திராகாந்தி நீக்கப்பட்ட போது முதன் முதலில் எப்படி நாடு முழுவதிலும் ஒரு எதிரொலி ஏற் பட்டதோ, அப்படியேதான் எம்.ஜி. ஆர். நீக்கப்பட்டவுடனே தமிழ்நாடு முழுவதிலும் எதிரொலி ஏற்பட்டது.

பெரும் கிளர்ச்சி

பெரும் கிளர்ச்சி

இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியைப் போலவே ஒரு மாபெரும் கிளர்ச்சி ஏற்பட்டது. ஆங்காங்கே கார்களையும், பஸ்களையும், லாரிகளையும், நிறுத்தி அதில் எழுதத் தொடங்கினார்கள். சின்னச் சின்னப் பள்ளி மாணவர்களிலேயிருந்து கல்லூரி மாணவர்கள்வரை, அதில் ஈடுபட்டார்கள். தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள். கைவண்டி இழுப்பவர்களில் இருந்து, கடலை விற்போர்கள் வரையில் ஆத்திரப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

அதிமுகவைத் தொடங்க வேண்டிய நிர்ப்பந்தம்

அதிமுகவைத் தொடங்க வேண்டிய நிர்ப்பந்தம்

ஆகவே, ‘அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' என்ற ஒரு பெரிய இயக்கத்தைத் துவக்க வேண்டிய நிர்பந்தம் எம்.ஜி. ஆருக்கு ஏற்பட்டது. அப்படித் துவங்கியவுடனே அது தமிழக அளவில் பெரிதாக வளர்ந்ததும் மிகச் சுலபமாக நடந்தது. வளர்ந்தது என்று சொல்வதைவிட வளர்ந்த நிலையிலேயே அது உருவாயிற்று என்று சொல்வது பொருந்தும். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு மாபெரும் கட்சியாகத் தமிழகத்தில் விளங்கும் என்று நான் எதிர் பார்த்ததுண்டு. அது நியாயமாக நடந்து விட்டது.

சாதாரண பிரியம் இல்லை

சாதாரண பிரியம் இல்லை

அதைச் சரிக்கட்டவும், ‘அப்படியொன்றும் இல்லை' என்று காட்டவும் நண்பர் கருணாநிதி பல்வேறு திசையில் பிரயாணம் செய்து பார்த்தார். பல ஊர்களில் அவர் பேசவே முடியாமல் போயிற்று. எம்.ஜி.ஆர். மீது ஜனங்களுக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் இருந்த பிரியம் என்பது சாதாரணமானதாக இல்லை. அதற்குக் காரணம் நியாயமா இல்லையா என்று ஆராய்வதைவிட, ஏதோ சில காரியங்களை அவர் செய்திருக்கிறார், செய்யக்கூடியவர், நியாயமானவர், நேர்மையானவர், ஒழுக்கமானவர் என்றெல்லாம் மக்கள் எண்ணினார்கள். அப்படி எண்ணிய மக்களின் நம்பிக்கை வீண் போகவில்லை.

நிலைமையே வேறாக மாறியிருக்கும்

நிலைமையே வேறாக மாறியிருக்கும்

கருணாநிதியின் மீது மக்களுக்கிருந்த நல்ல பெயரை அது தான் போக்கடித்தது. எம்.ஜி.ஆரை அவர் விலக்காமல் இருந்திருந்தால் நிலைமைகள் வேறுபட்டிருக்கக் கூடும். திராவிட முன்னேற்றக் கழகத்தைக் தவிர வேறு யாரும் ஆட்சிக்கு வருவதென்பது இன்னும் ஒரு 25 ஆண்டுக் காலத்துக்கு நடக்காமலேயே போயிருக்கும்.

ஓங்கி வளர்ந்த அதிமுக

ஓங்கி வளர்ந்த அதிமுக

அதனால் எம்.ஜி.ஆருடைய விலகல் காரணமாக, எம்.ஜி.ஆர் விலக்கப்பட்டதன் காரணமாக, திராவிட முன்னேற்றக் கழகம் மெலியும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற கட்சி ஓங்கி வளரும் என்று நம்பினேன். மற்ற நடிகர்களைப் போல் அவரும் ஒரு நடிகர்தான் என்றாலும், அரசியல் ஈடுபாட்டில் அவருக்கு இருந்த பிடிப்பின் காரணமாக, சில அரசியல் தத்துவங்களையும் அவர் உணர்ந்து கொண்டிருந்தார்.

கெட்டிக்கார தலைவர்

கெட்டிக்கார தலைவர்

விஷயங்களுக்குப் பதில் சொல்வதில் கெட்டிக்காரராக விளங்கினார். பிரச்சனைகளுக்குப் பரிகாரம் தேடுவதிலும் கெட்டிக்காரராக விளங்கினார். ஒரு கட்சியை நடத்தக் கூடிய சாமர்த்தியம் தனக்கு இருக்கிறது என்பதையும் காட்டினார்.

பிரித்தலும் பேணிக் கொளலும்

பிரித்தலும் பேணிக் கொளலும்

"பிரித்தலும் பேணிக் கொளலும் பிரித்தார்ப் பொருத்தலும் வல்லது அமைச்சு"
- என்றும் அவர் காட்டினார். அவர் கட்சிக்குள் மிக முக்கியமான ஆட்களும் உள்ளே நுழை ய ஆரம்பித்தார்கள். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் அங்கம் வகித்தவர்களில் பட்டதாரிகள் அதிகமாக இருந்தார்கள். அதே அளவுக்கு பட்டமோ, படிப்போ இல்லாத கிராம வாசிகளும் அதிகமாக இருந்தார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் எவ்வளவு எரிச்சல் அடைந்தும் கூட இந்த வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த முடியவில்லை என்று கூறியுள்ளார் கண்ணதாசன்.

அந்த பரபரப்புத் தீர்மானம்

அந்த பரபரப்புத் தீர்மானம்

திமுகவிலிருந்து எம்.ஜி.ஆர் நீக்கப்படுவது தொடர்பான திமுக தீர்மானம் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது.. அது இதுதான்... "தி.மு.க.,செயற்குழு. எவ்வளவோ வாய்ப்பளித்தும், எம்.ஜி.ஆர்.,அதை பயன்படுத்திக்கொள்ளவில்லை. கழக பொதுச்செயலாளர் நாவலர் அவர்களால் எம்.ஜி.ஆர்.,மீது கழக சட்ட திட்ட விதியின்படி எடுத்துள்ள நடவடிக்கையை இந்த செயற்குழு ஒரு மனதாக ஏற்றுக்கொண்டு இந்த தீர்மானத்தை பொதுக்குழுவிற்கு பரிந்துரை செய்கிறது என்பதே அந்த தீர்மானம்.

ஒருமித்த முடிவு

ஒருமித்த முடிவு

எம்.ஜி.ஆரை நீக்குவது தொடர்பான தீர்மானம் திமுக பொதுக்குழுவில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. அந்தக் கூட்டத்தில் மொத்தம் உள்ள 310 பேரில் 277 பேர் கலந்து கொண்டனர். மற்றவர்கள் வராததற்குக் காரணம், அவர்கள் எம்.ஜி.ஆர் ஆதரவாளர்கள் என்பது. கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருமே நீக்கத்தை ஆதரித்துப் பேசினர், வாக்களித்தனர்.

அக்டோபர் 14ல் நீக்கப்பட்டார் எம்.ஜி.ஆர்.

அக்டோபர் 14ல் நீக்கப்பட்டார் எம்.ஜி.ஆர்.

இதையடுத்து 1972ம் ஆண்டு அக்டோபர் 14ம் தேதி கூட்டப்பட்ட அந்த பொதுக்குழுவில், இன்று முதல் எம்.ஜி.ஆர்., திமு.கவை விட்டு முற்றிலும் நீக்கப்பட்டு விட்டார். இனி சமரசத்திற்கு இடமில்லை என்று திட்டவட்டமாக அறிவித்தது தி.மு.க.,பொதுக்குழு. இதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆரும், நான் தி.மு.கவிலிருந்து விலகிவிட்டேன். இரண்டொரு நாளில் புதிய அமைப்பு ஒன்றை துவங்குவேன் என்று அறிவித்தார்.

தமிழக அரசியல் வரலாற்றை மாற்றிப் போட்ட மறக்க முடியாத நாள் இன்று...!

English summary
History is teaching wonderful lessons always. This day, in the year 1972, MGR was dismissed from DMK and launched his own party ADMK.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X