For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திமுகன்னா ஆப்சென்ட்… அதிமுகன்னா லீவ்… இது போக்குவரத்து துறை கலாட்டா

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: திருச்சியில் நடைபெற்ற திமுக மாநாட்டில் பங்கேற்க ஆயிரக்கணக்கான திமுக போக்குவரத்து தொழிலாளர்கள் இரண்டு நாட்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு சென்றிருந்தனர். ஆனால் போக்கு வரத்துக்கழக நிர்வாகம் இவர் களுக்கு விடுப்பு அளிக்க மறுத்துவிட்டது. அந்த நாட்கள் ஆப்சென்ட் ஆக கருதப்படும் என அறிவித்துள்ளதால் தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

திருச்சியில் நடைபெற்ற திமுக-வின் 10-வது மாநில மாநாடு சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் நடைபெற்றது. லட்சக்கணக்கான திமுக தொண்டர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.

சனிக்கிழமை மாநாடு கொடியேற்றத்துடன் மாநாடு தொடங்கியதும் வாணவேடிக்கை ஆரம்பித்தது. இரண்டு மினி லாரிகளில் கொண்டுவரப்பட்ட வெடிவகைகள் அந்த மாநாட்டுத் திடலையே அதிரச் செய்தன.

போக்குவரத்து தொழிலாளர்கள்

ஆயிரக்கணக்கான திமுக போக்குவரத்து தொழிலாளர்கள் இரண்டு நாட்கள் விடுப்பு எடுத்து க்கொண்டு திருச்சி மாநாட்டிற்கு கிளம்பி வந்திருந்தனர். போக்கு வரத்துக்கழக நிர்வாகம் இவர் களுக்கு விடுப்பு அளிக்க மறுத்துவிட்டது. அந்த நாட்கள் ஆப்சென்ட் ஆக கருதப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரத்தம் கொடுத்தா லீவ்

அதேசமயம் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு கின்னஸ் சாதனை முயற்சிக்காக வெள்ளிக்கிழமை ரத்ததானம் செய்த போக்குவரத்துக் கழக பணியாளர்களூக்கு சனி, ஞாயிறு ஆகிய இரண்டு தினங்கள் விடுப்புக் கொடுத்து போக்குவரத்துக்கழகம் தாராளம் காட்டியது.

நாகூர் ஹனிபா இல்லாத மாநாடு

வழக்கமாக திமுக மாநாட்டு அரங்கில் துவக்க நாளன்று காலை பாடல்களைப் பாடி தொண்டர்களிடம் எழுச்சியேற்படுத்தும் நாகூர் ஹனிபா வின் பாடல்களை இம்முறை கேட்க முடியவில்லை. மாநாட்டு மேடையில் பாடகர் இறையன்பன் குத்தூஸ் குழு வினர் சில பாடல்களைப் பாடினர்.

கண் கலங்கிய நேரு

மாநாட்டில் வரவேற்புக் குழுத் தலைவர் நேரு தனது வரவேற்புரையில் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசினார். அவர் பேசுகையில், "எனது தம்பி ராமஜெயம் உயிரோடு இருக்கும் வரை கழகத்திற்காகப் பாடுபட்டார். அவரைப் பெருமைப்படுத்தும் வகையில் அவரது பெயரால் கொடிக்கம்பம் அமைக்க உத்தரவு வழங்கியதற்கு தனிப்பட்ட முறையில் என் குடும்பத்தின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மாநாட்டில் பாராட்டப்பட வேண்டிய விஷயங்கள் ஏதேனும் இருக்குமேயானால் அது கருணாநிதி எனக்கு இட்ட பிச்சை. இதில் ஏதேனும் தவறு இருக்குமேயானால் அது என்னால் ஏற்பட்ட ஆர்வக்கோளாறு" என்றார்.

ராமஜெயத்தின் கனவு

2011-ம் ஆண்டு திருச்சியில் மாநாடு நடத்த திமுக முடிவு செய்தது. அதற்காக இடம் தேடும்படலம் நடந்தது அப்போது உயிரோடு இருந்த நேருவின் தம்பி ராமஜெயம் தற்போது மாநாடு நடக்கும் இடத்தைத் தேர்வு செய்தார். இந்த இடத்தைப் பார்வையிட்ட நேரு இதை சீர்செய்யவே பெரும்தொகை செலவாகும், இந்த இடம் வேண்டாம் என்றாராம். (பிறகு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் அந்த மாநாடு கைவிடப்பட்டது). தற்போது தன் தம்பி விரும்பிய இடத்தில் எவ்வளவு செலவானாலும் சரியென்று மாநாடு நடத்தி அவரது கனவை நனவாக்குவது என்கிற எண்ணத்தில் நேரு இந்த இடத்தை மாநாட்டிற்காக தேர்வு செய்தாராம்.

திமுக மாநாட்டு வளாகத்தில் விதவிதமான தோற்றங் களுடன் தொண்டர்கள் வலம் வந்த னர். உடலெங்கும் தங்க வர்ணம் பூசிக்கொண்டும், கருப்பு, சிவப்பு வர்ணம் பூசிக்கொண்டும் சில தொண்டர்கள் வந்திருந்தனர்.

பந்தா பாலச்சந்தர், தொப்பி அன்பு

பெயர் பந்தா பாலசந்தர்! பெயரைக் கேட்டதும் வித்தியாசமாக இருக்கிறதா? எல்லாம் ஒரு விளம்பரம்தான். இவர் தனது 7 வயது முதல் திமுகவின் தீவிர விசுவாசி, அப்படியே கொஞ்சம் பந்தா பார்ட்டியும் கூட. ஆரம்ப காலத்தில் சைக்கிளில் கட்சிக் கூட்டம், மாநாடுகளுக்குச் சென்று பிரச்சாரம் செய்தவர், இப்போது இருசக்கர வாகனத்துக்கு மாறிவிட்டார். எது எப்படியோ... இது போன்ற தொண்டர்கள் இருக்கும் வரை திமுக தலைவர்கள் என்றும் உற்சாகமாக இருப்பார்கள்.

சென்னை அடுத்த குன்றத்தூரைச் சேர்ந்த 57 வயதாகும் அன்பு என்பவர் கடந்த 40 ஆண்டுகளாக திமுகவின் தீவிர தொண்டர். திமுக சார்பில் எங்கு கூட்டம், பேரணி என்றாலும் பெரியார், அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின், அன்பழகன் படங்களைத் தலையில் தொப்பியாக அணிந்துகொண்டு சென்று விடுவது இவரது வழக்கமாம். திருச்சியில் மாநாட்டில் உலாவந்த இவரை இன்றைய இளம் தலைமுறை கட்சியினர் வித்தியாசமாகப் பார்த்தனர், பாராட்டவும் செய்தனர்.

குவிந்த உளவுப்பிரிவினர்...

மாநாட்டுப் பந்தலில் மத்திய மாநில உளவுப் பிரிவு காவலர்கள் அதிக அளவில் குவிந்திருந்தனர். செய்தியாளர்கள் பகுதியில் இவர்களும் நிருபர்களைப் போல் அமர்ந்து குறிப்பெடுத்தனர். இவர்களில் சிலர் உடனுக்குடன் மாநாட்டில் பேசிய உரைகளை தங்களது உயரதிகாரிகளுக்கு நேரடி ஒலிபரப்பு செய்தனர்.

திணறிய திருச்சி

திருச்சியில் மாநாடு நடைபெற்ற இரண்டு நாட்களும் லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்டதால் திருச்சி திணறிவிட்டதே என்றே கூறவேண்டும். தொண்டர்கள் குவிந்ததைக் கண்ட திமுக தலைவர்கள் உற்சாகமடைந்ததை அவர்களின் பேச்சில் காணமுடிந்தது.

English summary
TN govt's Transport had warned its staffs not to attend DMK meet in Trichy, but gave permission to attend ADMK blood donation camp
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X