For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காஞ்சிபுரம்: குன்றத்தூரில் தாய்,மகள் கழுத்தறுத்துக் கொலை - 2 பெண்கள் கைது

By Mayura Akilan
Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்: குன்றத்துார் அருகே, தாய், மகளை கழுத்தை அறுத்து கொன்று, 50 சவரன் நகை, பணத்தை கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக 2 வேலைக்கார பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர். வீட்டிலிருந்த 50 சவரன் நகை, பணத்தை கொள்ளையடிக்க கத்தியால் குத்தியும், கழுத்தை அறுத்தும் தாய், மகள் கொடூரமாக கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த இரண்டாம் கட்டளை, பெஸ்லி கார்டன் பகுதியை சேர்ந்தவர் வசந்தா, 64. இவரது மகள் தேன்மொழி, 32. இவர், குன்றத்தூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். தேன்மொழிக்கு சுரபிஸ்ரீ, 7, குணஸ்ரீ , 9 மாதம் என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

Two detained for murder of schoolteacher, mother near Kanchipuram

தேன்மொழியின் கணவர் ராமசாமி, 40, ஏமன் நாட்டில் என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 3 வருடங்களுக்கு முன்புதான், பெஸ்லி கார்டனில் புதுவீடு கட்டி குடியேறினார்.

இந்நிலையில், நேற்று காலை 6.30 மணியளவில் சுரபிஸ்ரீ, கழுத்தில் பலத்த வெட்டு காயத்துடன் குணஸ்ரீயுடன் அழுது கொண்டே பக்கத்து வீட்டுக்கு ஓடி வந்தாள். இதை பார்த்ததும் அந்த வீட்டார் அதிர்ச்சியடைந்தனர். என்னவென்று விசாரித்தபோது, ‘எனது பாட்டியையும், அம்மாவையும் யாரோ கொலை செய்து விட்டார்கள்' என சுரபிஸ்ரீ கதறியபடி கூறினார்.

உடனே சுரபிஸ்ரீயை, போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, வீட்டுக்கு சென்று பார்த்தனர். அப்போது ஸ்டோர் ரூமில், நெஞ்சில் கத்தியால் குத்தப்பட்டும், கழுத்து அறுக்கப்பட்டும் வசந்தா பிணமாக கிடந்தார். மற்றொரு அறையில், தேன்மொழி, முதுகில் கத்தியால் குத்தப்பட்டும், கழுத்து அறுபட்டும் சடலமாகக் கிடந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் உடனே குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், வசந்தா, தேன்மொழி ஆகியோரது சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, ரேகைகள் பதிவு செய்யப்பட்டன. போலீஸ் மோப்ப நாய் ஜூலி வரவழைக்கப்பட்டது. அது, கொலை நடந்த இடத்தில் இருந்து, 300 மீட்டர் தூரத்தில் கட்டப்பட்டு வரும் ஒரு தனியார் அடுக்குமாடி கட்டிடத்தின் அருகில் ஓடிபோய் நின்றது. அங்கு பல குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. வட மாநிலத்தவர்கள் பலர் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இவர்களில் யாராவது இங்கு வந்திருப்பார்களா என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்தது.

முதற்கட்ட விசாரணையில், வீட்டின் கதவு உடைக்கப்படவில்லை; ஆனால், பீரோ உடைக்கப்பட்டிருந்தது. தேன்மொழி கழுத்தில் இருந்த நகைகள் காணவில்லை. காதில் கம்மல் இருந்தது. இதனையடுத்து திங்கட்கிழமையன்று இரவு, 7மணியில் இருந்து, 10 மணிக்குள், கொலை நடத்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில் குன்றத்தூர் போலீசாருக்கு, இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் ஆகியோர் நேற்றுமுன்தினம் இரவு அந்த வீட்டிற்கு வந்து போனதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், பல்லாவரம் அடுத்த நாகல்கேணி பகுதியை சேர்ந்த சத்யா ,35, தவுலத் பேகம், 40 ஆகிய இருவரும், வீட்டு வேலை செய்வதற்காக இந்த வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றது தெரிந்தது. பின்னர் அவர்களை நேற்று காலை 11 மணியளவில் பல்லாவரம் நாகல்கேணி பகுதியில் குன்றத்தூர் போலீசார் பிடித்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

போலீஸ் விசாரணையில் அவர்கள் கொலை செய்ததை ஒத்துக்கொண்டு வாக்குமூலம் அளித்தனர். சமீபத்தில் பெய்த கடும் மழையின்போது, டீச்சர் வீட்டில் வெள்ளம் புகுந்தது. இதனை சுத்தப்படுத்த அவர்கள் வீட்டில் நாங்கள் இருவரும் ஒரு வாரம் தங்கி இருந்தோம். அப்போது டீச்சரின் கணவர் வெளிநாட்டில் இருப்பதும், அவர்கள் வீட்டில் 50 சவரன் நகையும், பணமும் இருப்பதும் தெரிந்தது. இதை எப்படியாவது கொள்ளையடிக்க வேண்டும் என நாங்கள் திட்டம் தீட்டினோம்.

இதுகுறித்து எங்களுக்கு உதவி செய்யும் ஜெயக்குமார் , 40 என்பவருக்கு தெரியப்படுத்தினோம். அப்போது, ஜெயக்குமார் தான் டீச்சரை கொலை செய்வதாகவும், வீட்டில் இருக்கும் நகை மற்றும் பணத்தை மூன்று பேரும் சமபங்காக பிரித்து கொள்ளலாம் என்றும் கூறினார். நாங்களும் இதனை ஏற்றுக்கொண்டு டீச்சரை கொலை செய்ய தருணம் பார்த்து வந்தோம்.

இதனையடுத்து திங்கட்கிழமை இரவு நாங்கள் இருவரும் டீச்சர் வீட்டிற்கு வந்தோம். ஜெயக்குமார் மறைவாக நின்று கொண்டிருந்தார். அப்போது டீச்சரின் அம்மா வசந்தா வீட்டில் இருந்தார். நாங்கள் அடிக்கடி இங்கு வந்து செல்வதால், எங்களை பார்த்ததும் உடனே கதவை திறந்து விட்டார். நாங்கள் அவரிடம் பேசியபடி டீச்சரின் குழந்தைகளுக்கு பழங்கள் வெட்டிக்கொடுத்து கொண்டிருந்தோம்.

வெகுநேரமாகியும் டீச்சரை காணாததால் அவர் எப்போது வருவார் என கேட்டபடி அங்கேயே காத்திருந்தோம். பின்னர் 7 மணியளவில் வந்த டீச்சர் எங்களிடம் சிறிது நேரம் பேசிவிட்டு, பள்ளி ஆண்டு தேர்வு விடை தாள்களை திருத்தி கொண்டிருந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நாங்கள் ஜெயக்குமாரை உள்ளே அழைத்தோம். ஜெயக்குமார் உள்ளே வந்தபோது, பாட்டி வசந்தா ஸ்டோர் ரூமிற்கு சென்றார். அப்போது, பின்னால் சென்ற ஜெயக்குமார், தனது இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியால் வசந்தாவை குத்தி, கீழே தள்ளி கழுத்தை அறுத்தார்.

சத்தம் கேட்டு மற்றொரு அறையில் இருந்து டீச்சர் வெளியே வருவதற்குள், அவரையும் முதுகில் குத்தி கழுத்தறுத்து கொலை செய்தார். பின்னர் வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து பையில் போட்டு கிளம்பும் போது, தூங்கிக்கொண்டிருந்த டீச்சரின் மகள் சுரபிஸ்ரீ சத்தம் கேட்டு வெளியே வந்தாள். அவளையும் ஜெயகுமார் கத்தியால் கழுத்தில் கீறினார். அதன்பிறகு 3 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டோம் என்று போலீஸ் விசாரணையில் அவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். கொள்ளையடித்த பணம் மற்றும் நகையோடு தலைமறைவாக உள்ள கள்ளக்காதலன் ஜெயக்குமாரை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து ஏமன் நாட்டில் வேலை பார்க்கும் தேன்மொழியின் கணவர் ராமசாமிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது சத்தியா, தவுலத்பேகம் இருவரையும் கைது செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள ஜெயகுமாரை பிடிக்க தேடி வருகின்றனர். ஜெயக்குமார் பிடிபட்ட பின், நகை, பணம் எவ்வளவு கொள்ளையடிக்கப்பட்டது என்பது தெரியவரும் என்றும் தெரிவித்தனர். நகை பணத்திற்கு ஆசைப்பட்டு தாய், மகளை இரண்டு வேலைக்கார பெண்கள் கொலை செய்த சம்பவம் குன்றத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Police on Tuesday detained two women who connived with a man to murder a schoolteacher and her 60 years old mother in Kundrathur on the outskirts of Chennai to steal their gold jewellery.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X