For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திமுகவினருக்கு அருகதையில்லை... சட்டசபையில் சொன்ன ஜெ., - கொந்தளித்த ஸ்டாலின் # jayalalithaa

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: காவலர்களுக்கு வீட்டு வசதி செய்து கொடுப்பது பற்றி ஸ்டாலின் கேட்ட கேள்வியும், அதற்கு முதல்வர் ஜெயலலிதா சொன்ன பதிலும் சட்டசபையில் நேற்று அனலை கிளப்பியது.

சட்டசபையில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசினார். இதில் ஜெயலலிதா - மு.க.ஸ்டாலின் இடையே வாக்குவாதம் நடைபெற்றதால் சட்டசபையில் கடும் அமளி ஏற்பட்டது.

சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசினார்.

Uproar as MK Stalin, Jayalalithaa clash over remarks

ஸ்டாலின் பேச்சு

காவல்துறை வீட்டு வசதிக்காக ரூ.422 கோடியில் 2623 வீடுகள் கட்டப்படும் என்று கடந்த 2016-17-ம் ஆண்டு கொள்கை விளக்கக் குறிப்பில் கூறப்பட்டிருந்தது. அதுபோல காவல்துறை அதிகாரிகளுக்கு ''உங்கள் சொந்த இல்லம்'' திட்டத்தின் கீழ் போலீஸ் துணை சூப்பிரண்டுகள் மற்றும் தீயணைப்பு கோட்ட அலுவலர்கள் பதவியில் இருப் பவர்களுக்காக மாவட்ட தலைநகரங்களில் தலா 10 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்து வீடுகள் கட்டித்தரப்படும் என்று 3.5.2012 அன்று முதல்வர் கூறி இருந்தார். இதில் சென்னை மேல கோட்டையூர் தவிர மற்ற 31 மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதா? என்று கேட்டார்

ஜெயலலிதா பதில்

அப்போது முதல்வர் ஜெயலலிதா குறுக்கிட்டு, எதிர்க்கட்சித் தலைவருக்கு காவலர்களுக்கு வீட்டு வசதி செய்து கொடுப்பது பற்றி திடீரென்று அக்கறையும் கவலையும் வந்திருக்கிறது. காவலர்களுக்கு, காவல் துறையினருக்கு வீட்டு வசதி செய்து கொடுப்பது குறித்து யார் வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம். ஆனால் தி.மு.க.வினர் கேள்வி கேட்கக்கூடாது.

திமுகவினருக்கு அருகதையில்லை

அதைக் கேட்பதற்கான அருகதை தி.மு.க.வினருக்கு இல்லை. ஏன் என்று சொல்கிறேன் கேளுங்கள். காரணம் இல்லாமல் எதையும் சொல்ல மாட்டேன். நான் சொல்கிறேன். பொறுமையாக கேளுங்கள் என்றார். அப்போது திமுகவினர் குறுக்கிட்டனர். அதற்கு ஜெயலலிதா, நான் இன்னும் சொல்லி முடிக்கவில்லையே.

இழுத்து மூடிய கருணாநிதி

காவல் துறையினருக்கு வீடுகள் கட்டிக்கொடுப்பதற்காக என்று புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் 1980 ஆம் ஆண்டு காவல் துறை வீட்டு வசதிக்கழகம் என்ற ஒரு அமைப்பினை ஏற்படுத்தினார். அவர்தான் அந்தத் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதன் பின்னர் 1989 ஆம் ஆண்டு கருணாநிதி ஆட்சிப் பொறுப்பை ஏற்றபொழுது, முதல் வேலையாக அந்தக் காவல் துறை வீட்டு வசதிக்கழகத்தை கலைத்து இழுத்து மூடினார்.

1991 அதிமுக ஆட்சி

அதன் பின்னர் 1991 ஆம் ஆண்டில் நான் முதல்வராக பதவி ஏற்றபின்னர் காவல் துறை வீட்டு வசதிக் கழகத்தை மீண்டும் துவக்கினேன். அதன் பின்னர் ஆயிரக்கணக்கில் காவல் துறையினருக்கு வீடுகளை கட்டிக் கொடுத்திருக்கிறோம். அந்த விவரங்கள் எல்லாம் ஏற்கனவே வெளியிடப்பட்ட கொள்கை விளக்கக் குறிப்பில் தரப்பட்டிருக்கிறது.

சொன்னது ஏன்?

அதற்கு நான் மீண்டும் நேரத்தை எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. ஆனால், காவல் துறையினருக்காவே பிரத்யேகமாகத் தொடங்கப்பட்ட காவல்துறை வீட்டு வசதிக் கழகத்தை கலைத்து இழுத்து மூடிய தி.மு.க.வினர் இதைப்பற்றி கேள்வி கேட்க அருகதை இல்லை என்று அதனால்தான் சொல்கிறேன். என்று ஜெயலலிதா கூறினார்.

திமுக எம்.எம்.ஏக்கள் எதிர்ப்பு

ஜெயலலிதா சொன்ன விளக்கத்திற்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர். ஒட்டுமொத்தமாக எழுந்து 'அருகதை இல்லை' என்று சொன்னதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பதிலுக்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் எழுந்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சட்ட சபையில் கடும் கூச்சல் அமளி ஏற்பட்டது.

கூச்சலிடுவது தவறு

உறுப்பினர்களை அமைதியாக இருக்கச் சொன்ன சபாநாயகர் தனபால், எதிர்க்கட்சி தலைவர் காவலர் வீட்டு வசதி கழகம் பற்றி கேள்வி கேட்டார். அதற்கு முதல்வர் விளக்கம் தெரிவிக்கிறார் என்றார். உங்கள் ஆட்சியில் செய்த தவறை சுட்டிக் காட்டினார். நீங்கள் அம்மா கூறும் பதிலை அமைதியாக கேட்க வேண்டும். கூச்சலிடுவது தவறு என்றும் கூறினார்.

ஸ்டாலின் கேள்வி

அப்போது எழுந்த மு.க.ஸ்டாலின், நீங்கள் சொல்வதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறேன். நாங்கள் கேள்வி கேட்பதற்கு அமைச்சர்கள் பதில் சொல்கிறார்கள். அவர்கள் கூறும் விளக்கத்தை ஏற்று கொள்கிறோம் என்று கூறி விட்டு முதல்வரைப் பார்த்து ஸ்டாலின் சில எதிர் கேள்விகளை கேட்டார். உடனே அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பயங்கர ஆவேசத்துடன் எழுந்து தி.மு.கவினருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

அவை குறிப்பில் இருந்து நீக்கம்

தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் பதிலுக்கு கூச்சலிட்டு வாக்குவாதம் செய்தனர். இதனால் சபையில் சுமார் ஒருமணி நேரம் கடும் அமளி நிலவியது அப்போது சபாநாயகர் தனபால் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சொன்ன வார்த்தை சபை குறிப்பில் இருந்து நீக்கப்படுகிறது என்றார்.

சபாநாயகர் விளக்கம்

இதற்கும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மு.க.ஸ்டாலினும் சபாநாயகருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதற்கு சபாநாயகர் தனபால், எதிர்க்கட்சித் தலைவர் தேவை இல்லாமல் சொன்ன கருத்தை நீக்கி விட்டேன். இதை அனுமதிக்க முடியாது. தேவை இல்லாத வார்த்தையை பயன்படுத்தியுள்ளார் என்றார்.

மீண்டும் விளக்கம்

முதல்வர் ஜெயலலிதா மீண்டும் எழுந்து, எதிர்க்கட்சித் தலைவர் கேட்ட கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கிறேன் என்றார். இதற்கு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஜெயலலிதா பேச விட முடியாத அளவுக்கு கடுமையாக கூச்சலிட்டனர். சபாநாயகருடன் மு.க.ஸ்டாலின் கடும் வாக்குவாதம் செய்தார்.

நீடித்த அமளி

அப்போது முதல்வர் ஜெயலலிதா பதில் அளிக்க நீண்ட நேரம் நின்று கொண்டே இருந்தார். ஆனாலும் அமளி நீடித்தது. உடனே சபாநாயகர், சபையை நான் அமைதியாக நடத்த விரும்புகிறேன். தேவை இல்லாமல் தி.மு.க. உறுப்பினர்கள் குந்தகம் விளைவிக்கிறீர்கள். அம்மா பேசுவதை அமைதியாக இருந்து கேளுங்கள் என்றார்.

பதில் சொன்னேன்

முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து பேசினார், நான் கேள்வி கேட்கவில்லை. எதிர்க்கட்சி தலைவர் கேட்டதற்கு விளக்கம் அளிக்கிறேன். எதிர்க்கட்சி தலைவருக்கு பதில் சொல்கிறேன் என்றார்.

அவை குறிப்பில் இருந்து நீக்கியது ஏன்?

முதல்வர் பேசிய வார்த்தை மட்டும் சபை குறிப்பில் இருக்கும் போது எதிர்க்கட்சி தலைவர் சொன்ன வார்த்தையை மட்டும் எப்படி நீக்கலாம் என்று சபாநாயகரிடம் கேட்டனர். அதோடு சபாநாயகருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அ.தி.மு.க., தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கடுமையாக ஒருவரை ஒருவர் கை நீட்டி பேசினார்கள்.

தீர்ப்பை மாற்ற மாட்டேன்

சபாநாயகர் அவர்களை அமைதிப்படுத்த முயன்றார். என்றாலும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இருக்கையில் உட்கார மறுத்தனர். நான் தீர்ப்பளித்த பிறகு நீங்கள் அதில் விளக்கம் கேட்க முடியாது நான் கொடுத்த தீர்ப்பில் எந்த மாற்றமும் இல்லை என்றார் சபாநாயகர்.

அமைதி... அமைதி...

முதல்வர் அவைக்கு ஒவ்வாத சொல்லை சொல்லவில்லை. நீங்கள் கேட்க தகுதி இல்லை என்றுதான் பேசி உள்ளார். ஆனால் பதிலுக்கு நீங்கள் சொன்னதை ஏற்க இயலாது. எனவே சபையில் குழப்பம் செய்ய வேண்டாம். தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய சொல்ல உங்களுக்கு உரிமை இல்லை. அடுத்து அரசின் தனி தீர்மானம் சபையில் வர உள்ளது. அந்த தீர்மானத்தை சீர்குலைக்கும் வகையில் நீங்கள் நடக்கிறீர்கள். நீங்கள் செய்த தவறை முதல்வர் சுட்டிக் காட்டினார். எனவே எல்லோரும் அமைதியாக உட்காருங்கள் என்றார்.

சிறுவாணி அணை தனி தீர்மானம்

அரசின் தனித் தீர்மானத்தை இப்போது எடுக்கிறேன் என்றார். இதையடுத்து சிறுவாணி ஆற்றில் கேரள அரசு அணை கட்டும் விவகாரம் தொடர்பான தனி தீர்மானத்தை கொண்டு வர முதல்வருக்கு அனுமதி வழங்கினார். உடனே தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இருக்கைகளில் அமைதியாக அமர்ந்து விட்டனர். தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா அந்த தீர்மானத்தை சபையில் வாசித்தார். அதன்பின்னர் தனித் தீர்மானம் சட்டசபையில் ஏகமனதாக நிறைவேறியது.

English summary
The Assembly witnessed a ruckus for more than one and half hours as the DMK members created noisy scenes, shouting slogans and rushing to the Speaker’s podium demanding that Chief Minister J. Jayalalithaa’s remarks on DMK to be expunged.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X