நீட் விலக்கு கோரும் சட்டமுன்வடிவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்- அமெரிக்கா தமிழ் அமைப்புகள் வலியுறுத்தல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நீட் விலக்கு கோரும் தமிழக அரசின் சட்டமுன்வடிவுக்கு ஜனாதிபதி ஒப்புதலைப் பெற அமெரிக்கா தமிழ் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

சென்னையில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் உலகத் தமிழர் அமைப்பின் கோரிக்கையை கொழந்தவேல் இராமசாமி (உலகத் தமிழ் அமைப்பு, அமெரிக்கா), அரி பரந்தாமன் (முன்னாள் நீதியரசர்), பெ. மணியரசன் (தமிழ்த்தேசியப் பேரியக்கம்), தியாகு (தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம்), வழக்கறிஞர் பாலு (பாட்டாளி மக்கள் கட்சி), தி. வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி), சீமான் (நாம் தமிழர் கட்சி), பேராசிரியர் ஜவாஹருல்லா (மனித நேய மக்கள் கட்சி), ஆழி செந்தில்நாதன் (தன்னாட்சித் தமிழகம்), யா, அருள்தாஸ் (பச்சைத் தமிழகம்), செல்வி (மனிதி), வ. கவுதமன் (இயக்குநர்), பிரின்ஸ் என்னாரெஸ் (திராவிடர் கழக மாணவர் அணி) வினோத் களிகை (இளந்தமிழகம்), மூர்த்தி (கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு, திருப்பூர்), இளையராஜா (தமிழ்நாடு மாணவர் முன்னணி) உள்ளிட்டோர் வெளியிட்டனர்.

US Tamils urge TN Govt and MPs should get President's nod on NEET ordinance

நீட் தேர்வின் காரணமாக தன்னுயிரை ஈந்த அனிதாவின் மறைவுக்குப் பிறகு, அமெரிக்காவில் பல்வேறு நகரங்களில் நீட்தேர்வுக்கு எதிராக அமெரிக்கத் தமிழர்கள்தன்னெழுச்சியாகப் போராட்டங்களை நடத்தினார்கள். இது குறித்து உலகத் தமிழ் அமைப்பு நிர்வாகிகள் கூறியதாவது:

அமெரிக்காவிலுள்ள தமிழர்களாகிய நாங்கள் தமிழ்நாட்டின் கல்விச்சூழலால் உருவாக்கப்பட்டு மருத்துவர்களாகவும்,பொறியாளர்களாகவும், பேராசிரியர்களாகவும் மற்ற பிற துறைகளின் வல்லுநர்களாகவும் இங்கே பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டின் உயர்கல்வி, தொழிற்கல்வி உள்பட கல்வித்துறைமேலும் மேம்படவேண்டும் என்பதில் எங்களுக்கும் உடன்பாடே.

ஆனால் பல ஆண்டுகாலமாக தமிழ்நாட்டு அரசும் கல்வியாளர்களும் தமிழ்நாட்டின் சமூகப் பொருளாதாரச் சூழல்களினூடாக வளர்த்தெடுத்த மருத்துவக்கல்வி உள்பட கல்விமுறையை மத்திய அரசு துச்சமென மதிப்பதையும் அழிப்பதையும் நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். நமது மருத்துவக் கல்வியானது தமிழ்நாட்டிலும் உலகெங்கிலும் மிகச்சிறந்த மருத்துவர்களை பல்லாயிரக்கணக்கில் உருவாக்கியிருக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.

நீட் தமிழ்நாட்டின் நலன்களுக்கு, குறிப்பாக ஏழைகளுக்கும் ஊர்புற மாணவர்களுக்கும் எதிரானது. அது இந்தியக் கூட்டாட்சித் தன்மைக்கும் எதிரானது. மருத்துவக் கல்லூரிகளை அமைத்தல்,அவற்றை ஒழுங்குபடுத்துவதற்காக டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகச் சட்டம் இயற்றுதல், நுழைவுத்தேர்வு முறையை சீராய்வுகளுக்குப்பின் நீக்குதல், மருத்துவ உயர்கல்விக்கும் ஊர்புற மருத்துவச்சேவைக்கும் தொடர்பு உருவாக்குதல் என தமிழ்நாடு தனது பட்டறிவின் அடிப்படையில் முடிவெடுத்து இந்தியாவிலேயே மிகச்சிறந்த மருத்துவக் கல்வி முறையை உருவாக்கியிருக்கிறது. அது மிகச்சிறந்த சுதாதார உள்கட்டமைப்பையும் தமிழ்நாட்டில் உருவாக்கியிருக்கிறது.

எனவே நீட் தேர்வு முறை நமது தனித்துவமான மருத்துவக் கல்வியையும் சுகாதார முறையையும்அழிக்கக்கூடிய ஒன்றாக இருப்பதாகவே அமெரிக்கத் தமிழர்களாகிய நாங்கள் கருதுகிறோம். இந்நிலையில் நீட் விவகாரம் தொடர்பாக தமிழக அரசு இந்த ஆண்டு ஜனவரியில் சட்டசபையில் நிறையவேற்றிய சட்டமுன்வரைவு மீது மத்திய அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்காமலிருக்கிறது. தமிழ்நாடு-புதுச்சேரி அரசுகளும், இம்மாநிலங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதுகுறித்து வலியுறுத்தாமல் அமைதிகாப்பது விளங்கிக்கொள்ளமுடியாத புதிராக இருக்கிறது.

US Tamils urge TN Govt and MPs should get President's nod on NEET ordinance

எனவே, எந்த காலதாமதமும் இன்றி, தமிழ்நாடு அரசும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் விரைந்து செயலாற்றி, சட்டமுன்வரைவு குடியரசுத்தலைவருக்கு அனுப்பப்படவும், அவரால் ஏற்கப்படவும் ஆவன செய்யவேண்டும்.

அமெரிக்கத் தமிழர்களைப் பொறுத்தவரை, அனிதாவின் மறைவுக்குப் பின் உடனடியாக செயலில் இறங்கினோம். செப்டம்பர் 2, 2017: நியூ ஜெர்சி, மின்னசோட்டா, ஜார்ஜியா, மிஷிகன். டெக்சஸ், செப்டம்பர் 3 இல் கலிஃபோர்னியா (இரு இடங்கள்), செப்டம்பர் 4 இல் ஃப்ளாரிடா, கனெக்டிக்கட், இலினாய், தெற்கு காரலீனா, வடக்கு காரலீனா, ஒஹையோ, மேரிலாண்ட் (3 இடங்கள்), மிசெளரி, வர்ஜீனியா, இலினாய், டெலவர், பென்சில்வேனியா, செப்டம்பர் 6 இல் இலினாய், டெக்சஸ், செப்டம்பர் 8இல் நியூ யார்க் ஆகிய இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.

பிறகு செப்டம்பர் 16 இல் வாஷிங்டன் டிசி, 17 இல் சிகாகோ, நியூ யார்க், அட்லாண்டா, சான் பிரான்சிஸ்கோ, நியூ யார்க் ஆகிய இடங்களிலும் நடைபெற்றன. அமெரிக்கத் தமிழர்கள் உள்பட உலகத்தமிழர்கள் அனைவரும் இவ்விவகாரத்தில் தமிழக மக்களின் உரிமைகளுக்காக நிற்கிறோம் என்பதை வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு உலகத் தமிழ் அமைப்பு நிர்வாகிகள் தெரிவித்தனர்.

முனைவர் வை. க. தேவ், தலைவர், உலகத் தமிழ் அமைப்பு; சென்னையில் செய்தித் தொடர்புக்கு: ஆழி செந்தில்நாதன், +91 98841 55289

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
US Tamils movements had urged that the TamilNadu Govt and MPs should get the President's nod on TN Assembly's NEET ordinance.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற