• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பதவி சுகத்திற்கு தி.மு.க.வை வம்புக்கு இழுப்பதா? சபாநாயகருக்கு வி.பி.துரைசாமி கடும் எச்சரிக்கை

By Karthikeyan
|

சென்னை: தி.மு.க. மீது குறை சொல்வதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். உங்கள் பதவி சுகத்திற்கு தி.மு.க.வை வம்புக்கு இழுக்காதீர்கள் என்று சபாநாயகர் தனபாலுக்கு திமுக துணை பொதுச் செயலாளர் வி.பி.துரைசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக வி.பி.துரைசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

''சட்டமன்ற ஜனநாயகத்தின் கருப்பு நாள் ஒன்றை உருவாக்கி, மரபுகளையும், சட்டமன்ற நெறிமுறைகளையும் புதைகுழிக்கு தள்ளியுள்ள தமிழக சட்டமன்ற சபாநாயகர் பி. தனபால் "தாழ்த்தப்பட்டவன் என்பதால் என்னை அவமதிக்கிறார்கள்" என்று அபாண்டமான குற்றச்சாட்டை தனது பதவிக்குரிய கண்ணியத்தையும் மறந்து போகிற போக்கில் தி.மு.க. மீது சுமத்தியிருப்பதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

 V.P.Duraisamy issues strict warning to assembly speaker Dhanapal

அவர் சார்ந்திருக்கும் அதிமுக உறுப்பினர்களை விட- ஏன் அவர் இப்போது அடி வணங்கி நிற்கும் சசிகலாவிற்கு விசுவாசமாக இருக்கும் அதிமுக உறுப்பினர்களை விட சபாநாயகரை பெரிதும் மதித்த கட்சி திமுக என்பதையும், எதிர்கட்சி தலைவர் என்பதையும் சபாநாயகர் வசதியாக மறைத்து விட்டு புழுதி வாரி தூற்றும் செயலில் ஈடுபட்டிருப்பது தன் தவறிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக அவர் கையாளும் வஞ்சகம் நிறைந்த தந்திரம் என்பது ஒவ்வொரு தி.மு.க. தொண்டனுக்கும் தெரியும்.

இன்றைய தினம் ஸ்டாலின், தனபால் இருக்கையைக் கேட்கவில்லை. அவர் யாருக்கு வேண்டுமானாலும் கூனிக் குறுகி வணக்கம் போடட்டும். அப்படி ஏன் வணக்கும் போடுகிறீரகள் என்று கேட்கவில்லை. ஸ்டாலின் கேட்டது எல்லாம் தார்மீக அடிப்படையில் பதவியில் இருக்கும் தகுதியை இழந்து விட்ட அதிமுக ஆட்சிக்கு இன்னொரு முதலமைச்சரை -அதுவும் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ரிமோட் கன்ட்ரோலாக ஒரு ஆட்சியை அமர்த்துவதற்கு சபாநாயகர் ஏன் அவசர அவசரமாக நம்பிக்கை கோரும் தீர்மானத்தை எடுத்துக் கொள்ள முயன்றார்?

எதற்காக தி.மு.க. உறுப்பினர்களை வெளியேற்றும் நோக்கத்திலேயே இருக்கையில் அமர்ந்ததில் இருந்து செயல்பட்டார்? கூவத்தூரில் சட்டமன்ற உறுப்பினர்களை அடைத்து வைத்து, ஆம்னி பஸ்ஸில் அழைத்து வந்து அள்ளித் தெளித்த கோலத்தில் ஏன் ஒரு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த முயன்றார்? யாருக்கு வாக்களிக்கப் போகிறோம் என்பதிலேயே இறுதி முடிவு எடுக்க முடியாமல் சட்டமன்ற உறுப்பினர்களின் சுதந்திரத்தை சொகுசு விடுதியில் போட்டு பூட்டி வைத்ததை ஏன் சபாநாயகர் கண்டு கொள்ளவில்லை? நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் தினத்தில் கூட கோவை வடக்கு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் "எனக்கு இவர்களுக்கு வாக்களிக்க விரும்பவில்லை " என்று கூறி விட்டு பிரிந்து சென்றதைக் கூட ஏன் சபாநாயகர் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை? எல்லாவற்றிற்கும் மேலாக நம்பிக்கை தீர்மானத்தின் மீது ரகசிய வாக்கெடுப்பு நடத்துவதற்கு சபாநாயகர் மறுத்தது ஏன் என்றுதான் கேள்வி எழுப்பினார்.

எதிர்கட்சி தலைவர் மட்டுமல்ல- இன்றைக்கு ஒட்டுமொத்த தமிழகமே இந்தக் கேள்வியை கேட்டுக் கொண்டிருக்கிறது. இதற்கு உரிய பதிலை அளிக்க வக்கில்லாத தனபால் அவர்கள் தி.மு.க.வை "தாழ்த்தப்பட்டோர் விரோத கட்சி" போல் சித்தரிக்க முனைவது நடுநிலையாக இருந்து செயல்பட வேண்டிய சபாநாயகர் பதவியில் ஐந்து வருடத்திற்கும் மேலாக தலையாட்டி பொம்மையாகவே செயல்பட்ட பழக்கதோஷம் என்றே நான் எண்ணுகிறேன்.

காமாலை கண்ணனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்பது போல் "சட்டமன்ற நெறிமுறைகளை காலில் போட்டு மிதித்த சபாநாயகரை கண்டிக்கும் தி.மு.க.வை" பார்த்தால் சபாநாயருக்கு மிரட்சியாக இருக்கிறது என்றே கருதுகிறேன்.

யாரை பார்த்து தாழ்த்தப்பட்ட விரோத மனப்பான்மையில் என்னை விமர்சிக்கிறார்கள் என்று கூறுகிறாய்? தேர்தலே நடத்த முடியாமல் தவித்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தி தன்னுடைய உள்ளாட்சி துறை அமைச்சர் பதவி காலத்தில் தாழ்த்தப்பட்டவர்களை பஞ்சாயத்து தலைவர்களாக்கி அழகு பார்த்தாரே அந்த தளபதியைப் பார்த்து இப்படியொரு குற்றச்சாட்டை சுமத்த உங்களுக்கு வெட்கமாக இல்லையா? ஆதிதிராவிடர் நலனுக்காக தனி இயக்குனரகம் கண்டு, ஆதிதிராவிடர்களுக்கு இட ஒதுக்கீட்டை அதிகரித்து, அவர்களுக்கு இலவச வீடு கட்டித் தரும் திட்டத்தை இந்தியாவிற்கே முன்னோடியாக நடத்திக் காட்டினாரே அந்த தலைவர் கருணாநிதி தி.மு.க.வைப் பார்த்து "தாழ்த்தப்பட்டோர் விரோத கட்சி" என்று குறை கூறுவதற்கு உங்களுக்கு நா கூசவில்லையா?

ஆசிரியர் நியமனத்தில் நிரப்பப்படாமல் இருந்த இடங்களுக்கு சிறப்பு தேர்வு வைத்து 500 க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த ஆசிரியர்களை நியமித்து பெருமை சேர்த்த கட்சியைப் பார்த்து இப்படியொரு குற்றச்சாட்டு சுமத்த உங்கள் மனம் சந்தர்ப்பவசத்தால் ஒரு குரங்காக மாறி விட்டதா? அரசு வேலை வாய்ப்பு, கல்வி நிலையங்களில் 3 சதவீத உள் ஒதுக்கீட்டை அருந்ததியினர் மக்களுக்கு கொடுத்து இன்றைக்கு பல எஞ்சினியர்களை, டி.எஸ்.பி.களை, டாக்டர்களை உருவாக்கி இந்த சமுதாயத்திற்கு அதிகாரத்தை கொடுத்த தி.மு.க.வை பார்த்து இது மாதிரியொரு கேள்வி எழுப்ப உங்கள் இதயம் என்ன களி மண்ணால் ஆனதா?

எல்லாவற்றிற்கும் மேலாக 200க்கும் மேற்பட்ட சமத்துவபுரங்களை தமிழகம் முழுவதும் அமைத்து, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரும் சமத்துவத்துடன் வாழ்வதற்கு வழி ஏற்படுத்தி சமூக நீதியை நிலைநாட்டிய தி.மு.க.வைப் பார்த்து இந்த குற்றச்சாட்டைக் கூறுவதற்கு கொஞ்சம் கூட உங்களுக்கு அருகதை இல்லை என்பதை நீங்கள் முதலில் உணர வேண்டும்.

"பெண் சிங்கம்" படத்திற்காக தனக்கு கிடைத்த வருமானத்தைக் கூட அப்படியே அருந்ததியினர் மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்குவதற்காக ஒதுக்கித் தந்தவர் கருணாநிதி. அவர்வழி வந்த ஸ்டாலின் ஓலைக் குடிசைகளில் இருந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கான்கிரிட் வீடு கட்டிக் கொடுப்பதற்கு "கலைஞர் வீடு கட்டும் திட்டம்" என்ற உன்னதமான திட்டத்தை உருவாக்கி, தாழ்த்தப்பட்ட மக்களை கான்கிரீட் வீடுகளில் அமர வைத்து பெருமைப்பட்டவர் என்பதை நீங்கள் ஏனோ மறந்து விட்டது,

உங்களது பதவி சுகத்திற்காகத்தானே தவிர வேறு ஒன்றும் இல்லை. தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காக நாளும் பொழுதும் உழைத்தும், உரக்க குரல் எழுப்பியும் வரும் எங்கள் தங்கத் தளபதியை தாக்கி, சட்டையைக் கிழித்ததை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சபாநாயகர், தனது கட்டுப்பாட்டில் உள்ள காவலர்களை ஏவி விட்டு தாக்கிய சபாநாயகர் தனபால் தன் மீது படிந்து விட்ட களங்கத்தை நீக்க தளபதி மீது பழி போடுவது அநாகரிகமானது மட்டுமல்ல- அற்பத்தனமானது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

தி.மு.க. தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக இருக்கிறது என்பது போன்ற பொய் தோற்றத்தை உருவாக்க, நீலிக் கண்ணீர் வடிக்கும் சபாநாயகர் தன் கண் முன்பே தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை எக்மோர் திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்கே .எஸ்.ரவிச்சந்திரனை தாறுமாறாக காவலர்கள் கொண்டு தாக்கவும், மிதிக்கவும் கட்டளை பிறப்பித்தது ஏன்? தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த கழக சட்டமன்ற உறுப்பினரை ஈவு இரக்கமின்றி, கொடூரமான முறையில் காவலர்கள் மூலம் தாக்கி இப்போது உயிருக்கும் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் மருத்துமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறாரே அதற்கு சபாநாயகர் தனபால் என்ன சொல்லப் போகிறார்? நான்கு சுவருக்குள் ஒரு தாழ்த்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினரை பாதுகாக்க துப்பில்லாத சபாநாயகர் தனபால் தரணியில் வாழும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எல்லாம் பாதுகாவலனாக இருக்கும் தி.மு.க.வையையும், ஸ்டாலினையும் பார்த்து சுட்டு விரல் நீட்டுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.

மருத்துவமனையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ரவிச்சந்திரனுக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் சபாநாயகர் தனபால் தான் முழுப்பொறுப்பு என்று தெரிவித்துக் கொள்ளும் இந்த நேரத்தில் ஒன்றை மட்டும் உறுதியுடன் கூற விரும்புகிறேன். கூனிக் குறுகி, வளைந்து நெளிந்து வணக்கம் போட்டு, புகழ் ஆசனத்தை அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கும் தனபால் தி.மு.க.வை பார்த்து தாழ்த்தப்பட்டோரின் விரோதி என்று பொய்க் குற்றச்சாட்டைச் சொன்னால் உங்கள் வாய்க்கும் போஜனம் கிடைக்காது என்பதை விட தாழ்த்தப்பட்ட மக்களே உங்களை மன்னிக்க மாட்டார்கள் என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

சட்டமன்றத்தில் ஜனநாயகத்தை காப்பாற்ற முடியாவிட்டால் சபாநாயகர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும். அதை விடுத்து ஆதிதிராவிடர் மக்களுக்கு அடுக்கடுக்கான சாதனைகளை நிகழ்த்திய தி.மு.க. மீது குறை சொல்வதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். உங்கள் பதவி சுகத்திற்கு தி.மு.க.வை வம்புக்கு இழுக்காதீர்கள் என்று கூறிக் கொள்ள விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Deputy general secretary V.P.Duraisamy issues strict warning to assembly speaker Dhanapal
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more