பேரறிவாளன், நளினி, சாந்தன் உள்ளிட்ட 7 பேரையும் விடுக்க வைகோ வலியுறுத்தல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேர் விடுதலை மற்றும் பரோல் தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:

பூவிருந்தவல்லி தடா சிறப்பு நீதிமன்றம் 1998 ஜனவரி 28 இல், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 26 பேருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. உச்சநீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீடு காரணமாக மே 11, 1999 இல் முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன் ஆகிய 4 பேருக்கு மட்டும் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டு, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 3 பேரின் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. மற்ற 19 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

1999 அக்டோபர் 8-இல் நளினி உள்ளிட்ட நான்கு பேர் தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. உச்சநீதிமன்றம் மீண்டும் தூக்கு தண்டனையை உறுதி செய்ததால் நளினி, பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய நால்வரும் தமிழக ஆளுநருக்கு கருணை மனுக்களை அனுப்பினர். இதன் மீது முடிவெடுத்த அன்றைய முதல்வர் கருணாநிதி தலைமையிலான அமைச்சரவை ஏப்ரல் 19, 2000 இல் "நளினியின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும். மற்ற மூவரின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட வேண்டும்" என்று தமிழக ஆளுநருக்கு பரிந்துரை செய்தது.

11 ஆண்டுகாலம் நடவடிக்கை இல்லை

11 ஆண்டுகாலம் நடவடிக்கை இல்லை

இதனையடுத்து ஏப்ரல் 25, 2000 இல் நளினியின் மரண தண்டனையை மட்டும் ஆயுள் தண்டனையாக குறைத்த தமிழக ஆளுநர் பாத்திமா பீவி, பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரின் கருணை மனுக்களை நிராகரித்தார். இவர்கள் மூவரும் ஏப்ரல் 26, 2000 இல் குடியரசுத் தலைவருக்கு கருணை மனுக்களை அனுப்பினர். பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவரின் கருணை மனுக்கள் 11 ஆண்டுகள், 4 மாத கால தாமதத்துக்குப் பின்னர் நிராகரிக்கப்பட்டு, செப்டம்பர் 9, 2011 இல் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதிகாரம் இல்லை

அதிகாரம் இல்லை

மூன்று தமிழர்களின் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழகம் கொந்தளித்த நேரத்தில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள் 2011 ஆகஸ்டு 29 ஆம் தேதி சட்டமன்றத்தில், "தமிழக முதல்வராக இருக்கும் தனக்குக் கருணை வழங்கும் அதிகாரம் இல்லை. அதற்குக் காரணம் குடியரசுத் தலைவரால் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்ட பிறகு சம்பந்தப்பட்டவர்களுக்கு கருணை அளிக்கும் அதிகாரம் மாநில ஆளுநருக்கு இல்லை" என்று 1991 மார்ச் 5 இல் மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு எழுதியுள்ள கடிதத்தை மேற்கோள் காட்டினார்.

ராம்ஜெத் மலானியின் வாதம்

ராம்ஜெத் மலானியின் வாதம்

அந்தச் சூழலில் எனது வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு, முன்னாள் மத்திய சட்ட அமைச்சரும், தலைசிறந்த வழக்குரைஞருமான ராம்ஜெத்மலானி சென்னைக்கு வருகை தந்து, 2011, ஆகஸ்டு 30 இல் உயர்நீதிமன்றத்தில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று வாதாடினார். ராம்ஜெத்மலானி அவர்களின் சட்ட நிபுணத்துவம் வாய்ந்த வாதம்தான் நீதியரசர்கள் நாகப்பன், சத்தியநாராயணன் அடங்கிய அமர்வு மூவரின் தூக்குத் தண்டனைக்கு இடைக்காலத் தடை வழங்கக் காரணம் ஆயிற்று. அதே நாளான 2011 ஆகஸ்டு 30 இல் தமிழக முதல்வர் ஜெயலலிதா, "மூவரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும்" என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மரணதண்டனை ரத்து

மரணதண்டனை ரத்து

இதனிடையே பல்வேறு சட்டப் போராட்டங்களுக்குப் பின்னர் 2014, பிப்ரவரி 18 இல் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு, மரணக் கொட்டடியில் பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவரும் 15 ஆண்டுகள் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்பட்டு சித்ரவதையை அனுபவித்தனர். கடந்த 26 ஆண்டுகளாக நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயாஸ், இரவிச்சந்திரன் , ஜெயக்குமார் ஆகிய 7 பேரும் சிறைத் தண்டனையை அனுபவித்து உள்ளனர்.

விடுவிக்க வலியுறுத்தல்

விடுவிக்க வலியுறுத்தல்

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா அவர்கள் பிப்ரவரி 19, 2014 இல் சட்டமன்றத்தில், உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் வழங்கியதை ஏற்று 7 பேரையும் விடுதலை செய்வதற்கு தமிழக அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக அறிவித்தார். இந்நிலையில்தான், உடல் நலன் சீர்கெட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு பேரறிவாளன் தனக்கு பரோல் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார். பேரறிவாளன், சாந்தன், முருகன், உள்ளிட்ட உள்ளிட்ட 7 பேருக்கும் மனிதாபிமானத்துடன் தமிழக அரசு உடனடியாக பரோல் ஆணை வழங்குவதோடு, 7 பேரையும் விடுதலை செய்வதற்குத் தேவையான முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Mdmk general secretary Vaiko insisted TN government for the parole of 7 members who arrested in Rajiv Gandhi murder case including Perarivalan, Nalini, Murugan. And Vaiko requseted Tamilnadu Government to do legal action for the realease of 7 members.
Please Wait while comments are loading...