For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பட்டாசு ஆலை விபத்தில் ஐவர் பலி: தமிழக அரசு நிவாரணம் வழங்க வைகோ கோரிக்கை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் நிவாரண நிதியில் இருந்து தமிழக அரசு நிதி உதவி வழங்கவேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் எட்டக்காபட்டியில் உள்ள மெக்னீசியம் பவுடர் தயாரிக்கும் ஆலையில், டிசம்பர் 2 ஆம் நாள் மாலை 4.30 மணி அளவில் ஏற்பட்ட விபத்தில் ஐந்து பேர் உயிர் இழந்தனர். 2 பேர் படுகாயமடைந்தனர். இந்த ஆலையை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று பார்வையிட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மருத்துவமனையில் சந்தித்து விபத்து நடந்தது பற்றி கேட்டறிந்தார்.

Vaiko urges TN govt to give solatium to cracker blast victims

இதுகுறித்து இன்று காலை தலைமைச் செயலாளர் ஞானதேசிகனை சந்தித்து கோரிக்கை விடுத்தார். விபத்தில் பலியானவர்கள் குடும்பத்தினருக்கு தமிழக அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ,

விருதுநகர் மாவட்டம் எட்டக்காபட்டியில் மிக அண்மையில் அமைக்கப்பட்ட, பட்டாசுத் தொழிலுக்குத் தேவையான உபகரணம் தயாரிக்கும் ஒரு சிறிய ஆலையில், டிசம்பர் 2 ஆம் நாள் மாலையில் ஏற்பட்ட விபத்தில் ஐந்து பேர் உயிர் இழந்தனர். ஒருவர் நிலை மிகவும் கவலைக்கு இடமாக உள்ளது. இன்னொருவர் உயிர் பிழைக்க வாய்ப்பு உள்ளது. நேற்று 4 ஆம் தேதி இரவில் நான் அந்தக் கிராமத்திற்குச் சென்று பார்த்தேன்.

ஆலையின் உரிமையாளர்களுள் ஒருவரான வெங்கடேஷ் பிரபுவும், ஞானசேகரனும் வங்கியில் கடன் வாங்கித்தான் இந்த ஆலையைத் தொடங்கி உள்ளனர். உரிய சட்டவிதிகளின்படியே இயக்கி உள்ளனர். இந்தப் பொருளைத் தயாரிப்பதற்கு வெடிமருந்து லைசென்ஸ் வாங்கத் தேவை இல்லை.

2 ஆம் தேதியன்று மாலையில் அங்கு வேலை பார்த்த தொழிலாளி மின்சார வயரைச் சொருகும்போது, மின் பொறி ஏற்பட்டு உள்ளது. பயந்து போய் அந்த வயரைக் கீழே போட்டு விட்டார். உடனே அங்கிருந்த பொருட்கள் தீப்பிடித்துப் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டு விட்டது.

வெளியில் பாதுகாப்பாக நின்று கொண்டு இருந்த வெங்கடேஷ் பிரபுவும், ஞானசேகரனும், தொழிலாளர்களைக் காப்பாற்ற உள்ளே ஓடினர். அதில் வெங்கடேஷ் பிரபு உடல் முழுதும் கருகி உயிர் இழந்தார்.

அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த காளிமுத்து, பெருமாள்சாமி, சரவணன் ஆகிய மூவரும் தீயில் கருகி உயிர் இழந்தனர். தேவேந்திர வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த தொழிலாளியான மணிகண்டனும் உயிர் இழந்தார். நான் உயிர் இழந்த அனைவரது வீடுகளுக்கும் சென்றேன். ஆறுதல் கூறினேன்.

வெங்கடேஷ் பிரபு திருமணம் ஆகாதவர். இறந்து போன மற்றவர்கள் திருமணம் ஆனவர்கள். அன்றாடக் கூலி வேலை செய்து பிழைப்பவர்கள். கணவனை இழந்த இளம் பெண்களும், குழந்தைகளும் நிராதரவாய் பெரும் துன்பத்தில் தவிக்கின்றனர்.

ஆலையைத் தொடங்கிய வெங்கடேஷ் பிரபுவும் ஞானசேகரனும் எளிய விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். வங்கியில் கடன் வாங்கிய அந்தக் குடும்பங்களும் இன்று நிர்க்கதியில் நிற்கின்றன.

எனவே, இந்தக் குடும்பங்களுக்கு முதல்வர் நிவாரண நிதியில் இருந்து தக்க நிதி உதவி செய்வதோடு, இறந்து போன தொழிலாளர்களின் துணைவியர்களுக்கு ஏதேனும் ஒரு அரசுப் பணி கொடுத்து அக்குடும்பங்களுக்கு மனிதாபிமானத்தோடு முதல் அமைச்சர் மாண்புமிகு ஓ.பி.எஸ். அவர்கள் உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.

இதுகுறித்து இன்று ஐந்தாம் தேதி காலையில் தமிழக அரசு தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் அவர்களிடம் நிலைமையை எடுத்துக் கூறி ஆவன செய்யுமாறு வேண்டி உள்ளேன் என்று வைகோ கூறியுள்ளார்.

English summary
MDMK chief Vaiko has urged the state govt to give solatium to the cracker blast victims near Viruthunagar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X