புயலால் பாதிக்கப்பட்டோருக்கு உடனடி நிவாரணம்.. மத்திய, மாநில அரசுகளுக்கு மா.கம்யூ. கோரிக்கை
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நிவாரணம் தர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேட்டுக்கொண்டுள்ளது.
சென்னை: வர்தா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் வலியுறுத்தியுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

வர்தா புயல் மற்றும் பெருமழை சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம் , விழுப்புரம் , திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கடுமையான பாதிப்புகளை உருவாக்கியுள்ளது. குறிப்பாக சென்னை மாநகரம் கடும் சேதத்தை சந்தித்துள்ளது.
பேருந்து, ரயில் உட்பட போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. தொலைத்தொடர்பு, குடிநீர் விநியோகம் போன்றவையும் முற்றாக ஸ்தம்பித்துள்ளன. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. சென்னையில் பல்வேறு பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதோடு, கடும் சேதமும் ஏற்பட்டுள்ளது.
பல்வேறு தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்துள்ளது. கடலோரப் பகுதிகளில் மீனவர்களும் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். புயல் மற்றும் மழையால் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்பு அதிகமாகும் என்ற அச்சம் உள்ளது.
இந்நிலையில், மாநில அரசு அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை முழு வீச்சில் மேற்கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. இந்தப் பணிகளில் தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும்.
மத்திய அரசு மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் மாநில அரசுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதோடு, தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தேவையான நிதியை உடனடியாக ஒதுக்க வேண்டும் என்று மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. இவ்வாறு கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications