வேலூர்: கணவன் வீட்டில் சித்ரவதை... வீடியோ வெளியிட்ட பெண் தற்கொலை

வேலூர்: திருப்பத்தூர் அருகே நாட்றம்பள்ளியை சேர்ந்த சத்யா தற்கொலை செய்து கொண்டார். தனது கணவர் சித்ரவதை செய்வதாகவும், தன்னை காப்பாற்றுமாறு ரத்தக்காயங்களுடன் வீடியோவில் பேசிய சத்யா தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே நாட்றம்பள்ளியை சேர்ந்த சத்யா என்ற பெண் கணவரிடமிருந்து தன்னை காப்பாற்றுமாறு இரத்த காயங்களுடன் அழுதபடி பேசும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இவர் சில தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கடந்த 25 ஆம் தேதி தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார் சத்யா. இதை காவல் துறை தற்கொலை வழக்காக பதிவு செய்திருந்த நிலையில் சத்யா பேசியுள்ள வீடியோ தற்போது வாட்ஸ் அப்பில் வெளியாகியுள்ளது.
முகம், உடம்பில் ரத்த காயங்களுடன் உள்ள சத்யா, தானும் தனது குழந்தையும் நரக வாழ்கை வாழ்வதாகவும் தன்னை ஒரு தங்கை போன்று நினைத்து காப்பாற்றுமாறும் கண்ணீருடன் உருக்கமாக பேசுகின்றார்.
கணவர் தன்னை வீட்டில் அடைத்து வைத்து சோறு தண்ணி இல்லாமல் சித்ரவதை செய்வதாக கூறியுள்ள அவர், கணவரை நம்பி வந்த தனக்கு பல கொடுமைகள் நடந்ததாகவும் வீடியோவில் கூறியுள்ளார்.
தன்னிடம் செல்போன் இல்லை வேறு ஒரு நபரின் செல்போனை வாங்கி இதை பதிவு செய்கின்றேன் எனக் கூறிய அவர், தன்னை கணவர் கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாகவும் தான் வாழ ஆசைப்பபடுவதாகவும் யாராவது நான் வாழ உதவி செய்யுங்கள் எனவும் சத்யா கதறுகிறார்.
வீடியோ வைரலாகுவதற்கு முன்பாகவே சத்யா தற்கொலை செய்து கொண்டுள்ளார். சத்யாவின் வீடியோவை தற்போது பார்ப்பவர்கள் சத்யாவின் கணவர் சம்பத் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்து வருகின்றனர். காப்பாற்றுமாறு கூறிய பெண் தற்கொலை செய்து கொண்டது ஏன் என்றும் இந்த வீடியோவை பார்ப்பவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!