"சூப்பர் முதல்வராக" செயல்படுகிறாரா ஆளுநர்?... வேல்முருகன் சாட்டையடி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : வரம்பை மீறி ஆளுநர் செய்யும் நிர்வாகத் தலையீடு, மத்திய அரசின் விருப்பப்படி சூப்பர் முதல்வராக நடந்துகொள்கிறாரா என்ன? என்பதை தமிழக முதல்வர் தெளிவுபடுத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார் .

ஆளுநரின் ஆய்வு குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது : தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று கோயம்புத்தூரில் மாவட்ட ஆட்சியர், மாநகர ஆணையர் மற்றும் அதிகாரிகளைக் கூட்டி கலந்தாய்வுக் கூட்டத்தை நடத்தியிருக்கிறார். இந்தக் கலந்தாய்வுக் கூட்டத்தை நடத்த ஒரு வாரத்திற்கு முன்பே அந்த அதிகாரிகளுக்கெல்லாம் அவர் தகவலும் அனுப்பியிருந்திருக்கிறார்.

மரபுகளை மீறி ஆளுநர் நடத்திய இந்தக் கலந்தாய்வைக் கண்டித்து உடனடியாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் அங்கு போராட்டம் நடத்தினர். அதைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் அனைத்தும் தங்களது கண்டனத்தைத் தெரிவித்தன.ஆனால் ஆளும் ஈபிஎஸ்-ஓபிஎஸ் கட்சியும் பாஜகவும் மட்டும் ஆளுநரின் இந்த நடவடிக்கையை நியாயப்படுத்துகின்றன.

கோவையில் இன்றும் ஆய்வு

கோவையில் இன்றும் ஆய்வு

இதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் கண்டனத்தையும் மீறி, இன்று 2ஆவது நாளும் காலையிலேயே கோவையில் கலந்தாய்வில் ஈடுபட்டார் ஆளுநர். இதில் தமிழக அமைச்சர் வேலுமணியும் கலந்துகொண்டார். கோவை பேருந்து நிலையத்தில் பயோ டாய்லெட்டை ஆய்வு செய்த ஆளுநர், பிரதமரின் ‘தூய்மை இந்தியா' திட்டத்தின் கீழ் குப்பைகளை அகற்றும் பணியிலும் ஈடுபட்டார். கோவை காந்திபுரத்தில் பகுதிதாகக் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தையும் பார்வையிட்டார்.

அவரவர் விருப்பம்

அவரவர் விருப்பம்

‘தூய்மை இந்தியா' பணியைத் தவிர மற்றவையெல்லாம் ஆளுநரின் அதிகார வரம்புக்கு உட்பட்டவை அல்ல. ‘தூய்மை இந்தியா' திட்டப் பணி என்பது அவரவர் விருப்பப்பணி என்ற அளவில்தான் சரி. மற்றபடி அது மாநில உரிமை மட்டுமல்ல, உள்ளாட்சி அமைப்புகள் என்ற மக்களின் உண்மையான அதிகார அமைப்பையே டம்மியாக்கும் ஒரு போலியான, மோசடியான திட்டமாகும்.

மத்திய அரசால் ஆபத்து

மத்திய அரசால் ஆபத்து

இதைப் பேச வேண்டும்தான். ஆனால் அதற்கு முன் இப்போது அதிகாரிகளுடனான ஆளுநரின் கலந்தாய்வு என்பது மத்திய அரசால் தமிழகத்திற்கு ஆபத்து வந்துவிட்டதையே வெளிப்படுத்துவதாயிருக்கிறது.

முதல்வர் விளக்க வேண்டும்

முதல்வர் விளக்க வேண்டும்

வரம்பை மீறி கோவையில் மாவட்ட ஆட்சியர், மாநகர ஆணையர் மற்றும் அதிகாரிகளைக் கூட்டி நடத்திய இந்தக் கலந்தாய்வின் மூலம் மத்திய அரசின் விருப்பப்படி சூப்பர் முதல்வராக ஆளுநர் நடந்துகொள்கிறாரா என்ற கேள்வியே எழுந்துவிட்டது. சட்டத்துக்குப் புறம்பான இத்தகைய செயலை வன்மையாகக் கண்டிப்பதுடன்; தமிழக முதல்வரை, இது குறித்துத் தெளிவுபடுத்தக் கோருகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி என்று வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Tamizhaga Vazhvurimai party leader Velmurugan asks tamilnadu M Palanisamy to clarify the governor's visit and review meeting with officials at Coimbatore.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற