For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மெட்ரோ ரயில் அதிக கட்டணத்துக்கு நான் பொறுப்பாளியா? சீறும் கருணாநிதி

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தாம் போட்ட ஒப்பந்தத்தால்தான் மெட்ரோ ரயிலில் இவ்வளவு அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று முதலமைச்சர் ஜெயலலிதா கூறியிருப்பதை தி.மு.க. தலைவர் கருணாநிதி மறுத்துள்ளார்.

இது தொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:

ஜெயலலிதா தனது நீண்ட அறிக்கையில் ரயில் கட்டணத்தை நிர்ணயிக்க தி.மு.கழக ஆட்சியில் ஒப்பந்தம் கையெழுத்தானது என்று பழியை என் மீது சுமத்த முயற்சித்துள்ளார். தற்போது நான் விடுத்த அறிக்கையிலேகூட, மெட்ரோ ரயில் கட்டணத்தை அ.தி.மு.க. ஆட்சியினர் அதிக அளவுக்கு விதித்திருப்பதாக கூறவில்லை.

எனது அறிக்கையில், "தற்போது தொடங்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்திற்கு மக்கள் மத்தியில் அதிருப்தியும், கெட்ட பெயரும் ஏற்பட வேண்டும் என்பதற்காகவே இதற்கான கட்டணம் அதிக அளவுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள தாக பல கட்சிகளின் தலைவர்களும் புகார் கூறியிருக்கிறார்கள்.

ஜெ. அரசு மீது விமர்சனமா?

ஜெ. அரசு மீது விமர்சனமா?

டெல்லியில் மெட்ரோ ரயில் கட்டணமாக வசூல் செய்வதைப் போல 250 சதவிகித அளவுக்கு இங்கே மிக அதிகமாகக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப் படுகிறது. பயணம் செய்யும் பொதுமக்களின் நலன் கருதித் தொடங்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தில் குறை ஏற்படாத வகையில் உடனடியாக தமிழக அரசும், மெட்ரோ நிறுவனமும் இணைந்து பொதுமக்கள் போக்குவரத்துக்காக செலவிடும் சக்தியை அறிந்து, அதற்கேற்ப மெட்ரோ ரயில் கட்டணங்களைக் குறைத்து அறிவித்திட வேண்டும்" என்று கேட்டுக் கொண்டதில், ஜெயலலிதா அரசைப் பற்றி ஏதாவது தவறாகக் கூறியிருக்கிறேனா என்பதைப் பத்திரிகையாளர்களும், நாட்டு மக்களும் தான் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.

முதலமைச்சருக்கு அழகா?

முதலமைச்சருக்கு அழகா?

தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவருமே மெட்ரோ ரயில் கட்டணத்தைக் குறைக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதைப் போலவே தான் நானும்; தமிழக அரசும் மெட்ரோ நிறுவனமும் இணைந்து, இதுபற்றி முடிவு செய்து கட்டணத்தைக் குறைக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருப்பதில் என்ன தவறு?

ஏதோ ஒப்பந்தத்தில் நான் கையெழுத்திட்டிருப்பதாகவும், அதனால் கட்டணத்தைக் குறைக்கச் சொல்லி கேட்க எனக்கு அருகதை இல்லை என்றும் அறிக்கை விடுவதா ஒரு முதல் அமைச்சரின் பண்பாட்டுக்கு அழகு?

நானா பொறுப்பாளி?

நானா பொறுப்பாளி?

மெட்ரோ ரயில் கட்டணம் இந்த அளவுக்கு அதாவது 10 கிலோ மீட்டருக்கு நாற்பது ரூபாய் இருக்குமென்றா நான் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டேன் அவர் குறிப்பிட்டுள்ள அறிக்கையிலேயே இதற்காக உருவாக்கப்படும் தனி அமைப்பு கட்டணங்களை நிர்ணயிக்கும் என்று தான் வார்த்தைகள் இருப்பதாக அவரே ஒப்புக் கொண்டிருக்கும்போது, மெட்ரோ ரயில் கட்டண உயர்வுக்கு நானா பொறுப்பாளி?

கட்டணத்தை குறையுங்கள்..

கட்டணத்தை குறையுங்கள்..

தமிழ்நாட்டிலே உள்ள அத்தனை எதிர்க்கட்சிகளும் மெட்ரோ ரயில் கட்டணம் அதிகமாக இருக்கிறது என்று தெரிவித்திருக்கின்ற நேரத்தில், தமிழக அரசின் முதல் அமைச்சர் பொறுப்பிலே இருப்பவர், தன்னுடைய பொறுப்பினை உணர்ந்து, மெட்ரோ ரயிலில் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, அந்த கட்டண உயர்வுக்கு யார் காரணமோ அவர்களை அழைத்துப் பேசி, அந்தக் கட்டணத்தைக் குறைக்கச் சொல்வது தானே முறை!

மாநில அரசுதான் காரணமாமே

மாநில அரசுதான் காரணமாமே

அதை விட்டு எனக்கு அருகதை இல்லை என்றெல்லாம் அநாகரிகமாக அறிக்கை விடுவது சரிதானா? அதிகமான கட்டணம் என்ற பிரச்சினைக்கு ஜெயலலிதாவின் அறிக்கை தீர்வு கண்டு விடுமா?

இப்போது கூட எனக்கு ஒரு செய்தி வந்தது! அதில் மெட்ரோ ரயில் கட்டணம்; வாரியத்தால் அண்மையில் நிர்ணயம் செய்யப்பட்டது என்றும், மாநில அரசுக்கும் அதிலே பங்கு உண்டு என்றும், வாரியத்தின் கட்டணம் குறித்த கருத்தை முதலமைச்சர் ஏற்றுக் கொண்டார் என்றும் அதிலே கூறப்பட்டுள்ளது.

தூங்கும் கோப்பு

தூங்கும் கோப்பு

திருவொற்றியூர் வரை மெட்ரோ ரயில் விரிவாக்கம் குறித்த கோப்பு ஆறு மாத காலமாக முதல்வர் அலுவலகத்திலே தூங்கி கொண்டிருக்கிறதாம். இந்தச் செய்தியில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பதை முதல் அமைச்சர் அவரது அலுவலகத்தில் கேட்டுத் தெரிந்து கொள்ளட்டும்.

என்னாச்சு மோனோ

என்னாச்சு மோனோ

மோனோ ரயில் திட்டம் பற்றி அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு ஆளுநர் உரையிலும், நிதி நிலை அறிக்கையிலும் கூறி எத்தனை ஆண்டுகள் ஆகின்றன. இப்போது என்ன நிலை? முதலமைச்சர் எனக்கு பதில் அளிப்பதை விட்டு விட்டு, அந்தத் திட்டங்கள் என்னவாயிற்று என்று தலைமைச் செயலகத்திற்குச் சென்று, அதிகாரிகளை அழைத்துப் பேசித் தெரிந்து கொள்ளட்டும், தமிழக மக்களுக்கும் தெரிவிக்கட்டும்.

அதை விட்டு விட்டு அன்றாடம் நானும் அலுவலகம் போகிறேன் என்ற பாணியில் "வீடியோ கான்பரன்ஸ்" மூலமாக எதையாவது தொடங்கி வைக்கிறேன் என்று புகைப்படம் எடுத்து பத்திரிகைகளுக்கு அனுப்பி விட்டு, அவ்வப்போது எதிர்க் கட்சிகள் மீது அநாகரிகமாக வார்த்தைகளைக் கொட்டி அறிக்கை விடுவது அவருக்கும் அழகல்ல; அவர் வகிக்கும் பதவிக்கும் அழகல்ல!

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

English summary
The war of words between DMK and AIADMK over Metro Rail continued on Friday with the former asking Chief Minister Jayalalithaa to clarify when her government had taken a decision about the project.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X