For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விடுதலை சிறுத்தைகளை பாஜக வளைத்துப் போட துடியாய் துடிப்பது இதனால்தான்!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் எப்படியாவது காலூன்றிவிட போராடும் பாஜகவின் தற்போதைய இலக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. தமிழக அரசியலில் பிரதான கட்சிகள் விடுதலைச் சிறுத்தைகளை தொடர்ந்து தனிமைப்படுத்துவது பாஜகவின் 'வளைப்பு' வேலையை எளிதாக்குகிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

திமுக, அதிமுக, மதிமுக ஆகியவை என்னதான் 'திராவிடம்' 'இந்துத்துவா எதிர்ப்பு' 'பெரியார்' என்று பேசினாலும் பாஜகவுடன் கூட்டணி அமைக்க ஒருபோதும் தயங்கியது கிடையாது. அப்படி பாஜகவுடன் கூட்டணி வைத்ததற்காக சிறுபான்மை சமூக கட்சிகள் இந்த பிரதான கட்சிகளைப் புறக்கணித்ததும் இல்லை. அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்ற ஒற்றை சொல்லை உதிர்த்துவிடுகின்றனர்.

அதே நேரத்தில் கடந்த கால் நூற்றாண்டுகாலமாக இந்துத்துவா எதிர்ப்பு, சாதிய எதிர்ப்பு, ஈழ விடுதலை ஆகியவற்றில் உறுதியாக இருந்து வருகிறது விடுதலைச் சிறுத்தைகள். ஆனால் தேர்தல் அரசியலுக்குள் போனதால் அதுவும் மெல்ல மெல்ல நீர்த்துக் கொண்டுதான் போகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் நேசித்து வரவழைத்த திருமாவளவன், இனப்படுகொலை செய்த மகிந்த ராஜபக்சேவுடன் கை குலுக்கி மகிழ்ந்ததை உலகம் பார்த்ததுதான்.

புறக்கணித்த அதிமுக, திமுக

புறக்கணித்த அதிமுக, திமுக

கடந்த லோக்சபா தேர்தலில் திமுக, அதிமுக இரண்டுமே விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, இடதுசாரிகளை கூட்டணியில் சேர்க்கவே விரும்பவில்லை. இதனால் மக்கள் நலக் கூட்டணி உதயமானது. பலமுனைகளில் பேரம் பேசிக் கொண்டிருந்த தேமுதிக, அதிமுகவால் கழற்றிவிடப்பட்ட தமாகா ஆகியவையும் இதில் ஐக்கியமாகின. பாஜகவோ பாமகவை சேர்க்க படாதபாடுபட்டு பரிதாபமாக நடுத்தெருவில் நின்றது.

இடதுசாரிகளுடன் கை கோர்க்கும் திமுக

இடதுசாரிகளுடன் கை கோர்க்கும் திமுக

சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்தன இந்த கட்சிகள். தற்போது இடதுசாரிகளை தங்களது கூட்டணியில் சேர்ப்பதற்கான நகர்வுகளை திமுக மேற்கொண்டு வருகிறது. அண்மையில் காவிரி தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு இடதுசாரிகளின் விவசாய சங்கங்களை மட்டும் அழைத்து சிக்னலை வெளிப்படுத்தியது திமுக. மதிமுக, விடுதலைச் சிறுத்தைகளை அக்கூட்டத்துக்கு திமுக அழைக்கவில்லை.

2019 தேர்தலுக்காக...

2019 தேர்தலுக்காக...

அத்துடம் பாஜகவை மிகக் கடுமையாக திமுக தலைவர் கருணாநிதி தொடர்ந்து விமர்சித்து வருகிறார். 2019 லோக்சபா தேர்தலில் 'மதச்சார்பற்ற அணி' ஒன்றை அமைக்கும் நோக்கத்தில்தான் இந்த அறிக்கைகள் வெளியாகின்றன என்பது தெளிவாகப் புரிகிறது. திமுக, இடதுசாரிகள் அல்லது திமுக, இடதுசாரிகள், காங்கிரஸ் என்ற ஒரு அணி அமையவும் வாய்ப்பிருக்கிறது.

மதிமுக, தேமுதிக

மதிமுக, தேமுதிக

தற்போதைய நிலையில் மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், தேமுதிக, தமாகா ஆகியவை பிரதான அரசியல் கட்சிகளான திமுக, அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணையவே வாய்ப்பில்லாமல் தனித்துவிடப்பட்டுள்ளன. இதில் மதிமுக, தேமுதிக ஆகியவை பாஜக அணியில் இருந்தவை. அவற்றுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எந்த ஒரு தயக்கமும் இல்லை.

சிறுத்தைகளை நோக்கி பாஜக

சிறுத்தைகளை நோக்கி பாஜக

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தொடர்ந்தும் இந்துத்துவா எதிர்ப்பு பேசிவருகிறார். ஆனால் அவரது கட்சியின் பொதுச்செயலர் ரவிக்குமாரோ 'இந்துத்துவா' எதிர்ப்பையும் பேசிக் கொண்டு அப்படியே லைட்டா மோடி புகழ்பாடுகிற வேலையையும் செய்துகிறார். கடந்த சில மாதங்களாக அடுத்தடுத்து நடைபெறும் நிகழ்வுகள் பாஜக தற்போது விடுதலைச் சிறுத்தைகளை நோக்கி நகரத் தொடங்கியுள்ளதை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது. இதன் உச்சம்தான் கால்நூற்றாண்டு கால நண்பரான திருமாவளவனை 25 ஆண்டுகள் கழித்து அவரது அலுவலகத்தில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நேற்று சந்தித்த 'நாடகம்'.

எங்களுக்கு மட்டும் கொள்கையா?

எங்களுக்கு மட்டும் கொள்கையா?

இது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் நிர்வாகிகளிடம் நாம் பேசிய போது, பிரதான கட்சிகள் பாஜக பக்கம் போவதும் வருவதுமாக இருக்கின்றன; இந்துத்துவா எதிர்ப்பை பேசுகிற விடுதலை சிறுத்தைகளை சிறுபான்மை கட்சிகள் எதுவும் சீண்டுவதே இல்லை. அந்த கட்சிகள் அனைத்துமே அரசியல் வெற்றிக்காக அலைபாயும்போது விடுதலைச் சிறுத்தைகளுக்கும் மட்டும் ஏன் கொள்கை அளவுகோல் தேவை? என்கின்றனர்.

பாமகவே வேண்டாம்.. பாஜக மட்டும் எதற்கு?

பாமகவே வேண்டாம்.. பாஜக மட்டும் எதற்கு?

ஆனால் விடுதலைச் சிறுத்தைகளின் மற்றொரு தரப்போ, அன்று வடமாவட்டங்களில் அமைதி நிலவ வேண்டும் என்பதால் பாமகவுடன் கை கோர்த்தோம்; இன்று மிக மோசமான எதிரியாக பாமக உருவெடுத்திருக்கிறது. அரசியலில் வெற்றி பெறுவதற்காக பாஜகவுடன் விடுதலை சிறுத்தைகள் கைகோர்க்க வேண்டிய நிலைமை வரலாம்... ஆனால் பாஜக தன்னுடைய உண்மை முகத்தை வெளிப்படுத்தும் போது மிக மோசமான பாதிப்பு எங்களுக்குத்தான். சாதியம் பேசும் பாமகவே வேண்டாம் என்கிற போது மதவாதம் பேசும் பாஜகவை மட்டும் எப்படி ஏற்க முடியும் என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.

கேரளா ஸ்டைல்

கேரளா ஸ்டைல்

ஏற்கனவே கேரளாவில் இடதுசாரிகளின் வாக்கு வங்கியாக இருந்த ஈழவா மக்களிடையே ஒரு அரசியல் கட்சியை உருவாக்கி அங்கே கால் பதித்தது பாஜக. தற்போது அதே பாணியில் தலித்துகளின் கட்சியாக இருக்கும் விடுதலைச் சிறுத்தைகளை வளைத்துப் போட்டு கால் பதிக்க நினைக்கிறது பாஜக.

நவம்பர் 12-ல் என்ன நடக்கும்?

நவம்பர் 12-ல் என்ன நடக்கும்?

சென்னையில் அடுத்த மாதம் நவம்பர் 12-ந் தேதி நடைபெற உள்ள தேசிய தலித் முன்னணியின் கூட்டத்தில் மத்திய பாஜக அரசின் அமைச்சர்களான ராம்விலாஸ் பஸ்வான், அத்வாலே ஆகியோர் பங்கேற்கின்றனர். அந்த கூட்டத்தில் பேசப்படும் கருத்துகள் விடுதலைச் சிறுத்தைகளின் அடுத்த கட்ட நகர்வுக்கான சிக்னலாக இருக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

English summary
Union Minister Pon Radhakrishnan on Wednesday met VCK leader Thol. Thirumavalavan. But VCK senior leaders denied that the speculations Of VCK And BJP Alliance.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X