For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2ஜி: ராஜாவுடன் நேரடி விவாதத்துக்கு ஜெயலலிதா தயாரா?- கருணாநிதி

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: மத்திய அரசில் இருந்து திமுக விலகியதற்கான காரணத்தை மறுபடியும் விளக்கியுள்ளார் அக்கட்சியின் தலைவர் கருணாநிதி.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கேள்வி, பதில் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கேள்வி:- "தமிழ்நாட்டிற்கே தலைகுனிவை ஏற்படுத்தும் வகையில் 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அலைக்கற்றை இமாலய ஊழலை முன்னின்று நடத்திய கட்சி தி.மு.க." என்று ஜெயலலிதா விமர்சனம் செய்கிறாரே?.

Why did DMK leave UPA?: Explains Karunanidhi

பதில்:- அலைக்கற்றை வழக்கு விசாரணைக்கு என்றே சிறப்பு நீதிமன்றம் உருவாக்கப்பட்டு, உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலில் நாள்தோறும் விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றம்சாட்டப்பட்டுள்ள ஆ.ராசா வாய்தா வாங்கி வழக்கு விசாரணையை இழுத்தடித்து தாமதப்படுத்த சிறிதும் நினைக்காமல், விசாரணையில் நாள்தோறும் தொடர்ந்து ஆஜராகி நீதிமன்றத்திற்கு சிறப்பான ஒத்துழைப்பை நல்கி வருகிறார். எனவே முதல்-அமைச்சர் கோவையில் பேசியதற்கு முழு விளக்கம் பெற பொதுமக்கள் முன்னிலையில் ராசாவுடன் ஒருமுறை நேரடியாக விவாதிக்க முன்வரலாம் அல்லவா?.

கேள்வி:- மத்திய அரசு தமிழக மக்களுக்கும், தமிழ் இனத்திற்கும் துரோகம் செய்ததாகவும், அதற்கு கடந்த 9 ஆண்டு காலமாக தி.மு.க. ஒத்துழைத்தது என்றும் ஜெயலலிதா ஒவ்வொரு கூட்டத்திலும் சொல்கிறாரே?.

பதில்:- தி.மு.க. மத்திய அரசில் அங்கம் வகித்த போதுதான், தமிழ் மொழிக்கு செம்மொழி தகுதியைப் பெற்றது; சென்னையில் செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் அமையக் காரணமாக இருந்தது; சேது சமுத்திரத் திட்டத்திற்கு ஒப்புதலும் நிதியும் பெற்றுத்தந்தது; சென்னை மாநகரில் மெட்ரோ ரெயில் திட்டம், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம், திருச்சி, கோவை, மதுரை விமான நிலையங்கள் விரிவாக்கம், கடல்சார் தேசியப் பல்கலைக்கழகம், தேசிய சித்த மருத்துவ ஆய்வு மையம், சேலத்தில் புதிய ரெயில்வே மண்டலம், சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையே பறக்கும் சாலைத்திட்டம், மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவீத இடஒதுக்கீடு, பொடா சட்டம் ரத்து, நெசவாளர்களுக்கு "சென்வாட்" வரி நீக்கம், திருவாரூரில் மத்தியப் பல்கலைக் கழகம், மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய மையங்கள், 3,276 கிலோ மீட்டர் சாலைகள் 4 வழிச் சாலைகளாக மேம்பாடு, பெரிய போக்குவரத்து மேம்பாலங்கள், துறைமுக விரிவாக்கப் பணிகள், சரக்குப் பெட்டக முனையங்கள், நீர்வழிப் போக்குவரத்து வசதிகள் என்று இன்னோரன்ன திட்டங்கள் தமிழகத்திற்குக் கிடைத்தன.

இன்னும் சொல்ல வேண்டுமேயானால், மத்திய அரசில் தி.மு.க. அங்கம் வகிக்கத் தொடங்கியதற்கு வெகுகாலத்திற்கு முன்பே பிரதமராக இருந்த இந்திரா காந்தியோடு தேர்தல் உடன்பாடு கொண்டிருந்த போதே, சேலம் உருக்காலைத் திட்டம், நெய்வேலி நிலக்கரி இரண்டாவது சுரங்கம் - மின் திட்டம், விடுதலை நாளன்று முதல்-அமைச்சர்களே கொடியேற்றுவதற்கான உரிமை போன்றவற்றை நாம் பெற்றுத் தந்தோம்.

கேள்வி:- தி.மு.க. மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசில் இருந்து விலக உண்மையான காரணம், இலங்கைத் தமிழர் பிரச்சினை அல்ல என்றும், அலைக்கற்றை வழக்குதான் காரணம் என்றும் ஜெயலலிதா கோவையில் கூறியிருக்கிறாரே?.

பதில்:- அலைக்கற்றை வழக்குக்காக மத்திய அரசில் இருந்து விலகுவது என்றால், அந்த வழக்கில் தி.மு.க.வினரை கைது செய்தபோதே விலகி வந்திருப்போம். ஆனால் அப்போது தி.மு.க. மத்திய அரசில் இருந்து விலகவில்லை. மத்திய அரசில் இருந்து தி.மு.க. விலகியபோது நான் விடுத்த அறிக்கையில், "தமிழ் இளைஞர்களும், வாலிபர்களும் தங்கள் இனம் வாழ - மொழி வாழ - நடத்திய வீர மரணப் போராட்டங்கள் கூட தமிழ் உணர்வற்றவர்களால் எள்ளி நகையாடப்பட்டாலும், அவைகளையெல்லாம் மீறி நமது குறிக்கோள் வெற்றியே முக்கியம் என்ற கொள்கை உறுதியோடு; ஈழப்போரில் மாண்டு மடிந்த போராளிகளுக்கும், அவர்தம் குடும்பத்தாருக்கும் வீர வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிற சூழலில் அவர்தம் காலடி மண்ணெடுத்து, அதனைத் திலகமாக இட்டுக்கொண்டு, அந்தத் திலகத்தின் சாட்சியாக - தமிழ் ஈழத்தில் சிங்களப் பேரினவாதிகளால் நடத்தப்பட்ட - அதிலும் குறிப்பாக ராஜபக்சே அரசின் போர்க்குற்றங்கள் மலிந்த - இருகருத்துக்கு இடமில்லாத வகையில் இனப்படுகொலையே நடத்தப்பட்டு - உலக அரங்கில் உள்ள நாடுகளின் விவாதத்திற்கு உரியதாக ஆகிவிட்ட இந்தச்சூழலில் உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று மார்தட்டிக்கொள்ளும் இந்தியத் திருநாடு, இந்தப் பிரச்சினையின் ஆழத்தை உணராமல், விளைவுகளைக் கருதாமல், ஒதுங்கி நிற்பதோ; அல்லது எதிர்மறை கருத்துரைப்பதோ - இந்தியாவில் காந்தியடிகளும், இலங்கையில் தந்தை செல்வநாயகமும் சுதந்திரப் போராட்டத்திற்காகத் தேர்ந்தெடுத்து நடத்திய அறவழிகளை - அறவே மூடிவிடுவதற்கான; ஜனநாயக விரோதச் செயல்களாகும்.

இவைகளையெல்லாம் ஐ.நா. மன்றத்திலும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்திலும் நீதி நெறியோடு ஆராய்ந்து பார்த்து - அனைத்து நாட்டு மக்களின் இதயத்தையும் குளிர வைக்கும் முடிவுகளை மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அதற்கு மாறாக இழப்பின் உச்சத்திற்கே தள்ளப்பட்ட இலங்கையும், அந்த இலங்கையின் "தொப்புள் கொடி" உறவுகொண்ட தமிழகம் இடம்பெற்றுள்ள இந்தியாவும், இந்த ஜனநாயக விரோதச் செயல்களுக்கு கதவுகளைத் திறந்துவிட்டிருப்பதை இன உணர்வுள்ள எந்த ஒரு தமிழனாலும் ஏற்றுக்கொள்ள இயலாது.

எனவே "குதிரை குப்புறத் தள்ளியதும் அல்லாமல், குழியும் பறித்த கதை"யாக, அமெரிக்காவின் வரைவுத் தீர்மானத்தை பெருமளவுக்கு நீர்த்துப்போக விட்டதோடு; தி.மு.க. முன்மொழிந்த திருத்தங்கள் எவற்றையும் இந்திய அரசு சிறிதும் பரிசீலனையும் செய்யவில்லை. எனவே, ஈழத்தமிழருக்கு எந்த வகையிலும் பயன்படாத சூழ்நிலைகளே உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இதற்குப் பிறகும் இந்திய மத்திய ஆட்சியில் தி.மு.க. நீடிப்பது தமிழினத்திற்கே இழைக்கப்படும் பெரும் தீமை என்பதால், தி.மு.க. மத்திய அமைச்சரவையில் இருந்தும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்தும் உடனடியாக விலகிக்கொள்வதென முடிவு செய்யப்பட்டுள்ளது" என்ற வரிகளை மீண்டும் ஒரு முறை படித்தால், தி.மு.க. எதற்காக மத்திய அரசில் இருந்து விலகியது என்பதைத் தெரிந்துகொள்ள முடியும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

English summary
DMK supremo Karunanidhi has once again explained as to why his party left UPA.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X