• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மோடி புகழ் பாட எடப்பாடி பழனிசாமி அரசு துடிப்பது ஏன்?

|

ஆர். மணி

"இந்தியாவில் உள்ள அனைத்து தரப்பு மக்களின் வளர்ச்சிக்காகவும், பயனுக்காகவும் மத்திய அரசு எண்ணிலடங்கா திட்டங்களை செயற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் தங்கள் மாவட்டங்களில் மத்திய அரசின் மூலம் செயல் படுத்தப்பட்டு வரும் கீழ்கண்ட திட்டங்களை செயல்படுத்தும் துறைகளில் தொடர்புடைய மத்திய அரசு அலுவலர்களை அணுகி, அத்தகவல்களை புகைப் படங்களுடன் வெற்றிக் கதைகளாக (success stories) தொகுக்கப் பட்ட விவரங்களைப் பெற்று, தலைமையிடத்திற்கு தபால் மூலமாகவும் idfieldpublicity@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் 11.05, 2017 க்குள் அனுப்பி வைக்கும் படி கேட்டுக் கொள்ளப் படுகிறது".

இதுதான் தமிழக அரசின் செய்தி மற்றும் ஒளிபரப்புத் துறையின் செயலாளர் ஜெ.குமரகுருபரன் தமிழ் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களுக்கு 5.5.2017 அன்று அனுப்பிய கடிதம். சுதந்திர இந்தியா தன்னுடைய 69 ஆண்டு கால வரலாற்றில் சந்திக்காத ஒரு நிகழ்வுதான் இது. அதாவது மத்தியில் ஆளக் கூடிய ஒரு அரசாங்கத்தின் சாதனைகளை ஒரு மாநில அரசு கையேடுகளாகவும், சிடி க்களாகவும் தயாரித்து இன்ன பிற வகைகளிலும் மக்களை போய்ச் சேரும்படி நடவடிக்கைகளை மேற்கொள்ளுவது.

Why Edappadi govt wants to laud Modi govt's achievements?

இதுவரையில் கடந்த 69 ஆண்டுகளில் எந்த மாநில அரசும் செய்யாத காரியம் இது. மத்திய அரசிடம் இருக்கும் கள விளம்பரத்துறை மற்றும் இன்ன பிற பொது மக்களை சென்றடையக் கூடிய துறைகள்தான் இந்த காரியத்தை செய்யும். ஆனால் ஒரு மாநில அரசு, மத்தியில் ஆளும் வேறோர் கட்சியைச் சேர்ந்த, அதுவும் தேர்தலில் தன்னுடைய கூட்டணியாக இல்லாத ஒரு கட்சி ஆளும் அரசாங்கத்துக்காக இப்படிப்பட்ட காரியத்தை செய்வது என்பது இதுதான் முதல் முறையாகும்.

"எந்தளவுக்கு மோடி அரசிடம் அஇஅதிமுக அரசு நெடுஞ்சாண் கிடையாக சரணாகதி அடைந்து கிடக்கிறது என்பதற்கு இதனை விட வேறு எந்த விளக்கமும், உதாரணமும் பொது மக்களுக்குத் தேவையில்லை. பாஜக அரசின் ஊதுகுழலாக அஇஅதிமுக அரசு மாறிவிட்டது என்பதுதான் இதில் நாம் காணக் கிடைக்கும் நிதர்சனம், உண்மை, யதார்த்தம்'' என்கிறார் தற்போது அஇஅதிமுக வில் ஓரங்கட்டப்பட்டிருக்கும் ஒரு முன்னாள் அமைச்சர்.

"நான் ஏதோ என்னுடைய அரசியல் வாழ்வு தற்போதைக்கு பாதிக்கப் பட்டு, தோற்றுப்போய், துவண்டுபோய் நிற்கும் காரணத்தால் இதனை சொல்லவில்லை. பொது வெளியில் காணக் கிடைக்கும் விஷயங்களை வைத்தே, கண் பார்வை உள்ளவர்களும், ஓரளவு அரசியல் அனுபவம் கொண்டவர்களும் கூட இதனை புரிந்து கொள்ளலாம். அந்தளவுக்கு வெட்ட வெளிச்சமாகத் தெறிகிறது அஇஅதிமுக இன்று மோடியிடம் முழு சரண்டர் ஆகியிருப்பது" என்று மேலும் கூறுகிறார் அந்த முன்னாள் அமைச்சர்.

ஜெயலலிதா மறைந்த பிறகு மோடி யின் திட்டப்படிதான் எல்லாம் நடக்கத் துவங்கியது. தப்பித் தவறி கூட வேறு எவரும் வந்து விடக்கூடாது என்பதற்காகவே மத்திய அமைச்சர் எம்.வெங்கய்யா நாயுடு ஜெ மரணத்தின் போது கூடவே இருந்து ஓபிஎஸ் முதலமைச்சர் ஆவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டுத் தான் போனார். ஆனால் திடிரென்று சசிகலா முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப் பட்ட பின்னர் நிலைமை மாறியது. ஓபிஎஸ் ஸின் ஜெ சமாதி தியானமும், சசிகலா ஜெயிலுக்குப் போனதும் மோடியின் திட்டத்தை தவிடு பொடியாக்கியது.

எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக் கொள்ள ஏனோ மோடி மறுக்கிறார். அதற்கான உண்மையான காரணங்கள் என்னவென்று நமக்குத் தெரியவில்லை. நம் காதில் விழுவது எல்லாம் வெறும் யூகங்களாக மட்டுமே இருந்து கொண்டிருக்கின்றன. எடப்பாடி முதலமைச்சர் ஆனதும், ஓபிஎஸ் ஸூக்கு கொடுக்கப்பட்டிருந்த தமிழக போலீஸின் பாதுகாப்பு உடனடியாக விலக்கிக் கொள்ளப் பட்டது. அடுத்த 24 மணி நேரத்தில் ஓபிஎஸ் ஸுக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படை பாதுகாப்பு கொடுக்கப்பட்டு விட்டது. அதே போல ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மோடியை சந்தித்து 90 நிமிடங்கள் பேசுகிறார்கள். ஆனால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 45 நிமிடங்கள் மட்டுமே மோடியிடம் பேசுகிறார். இதில் இன்னுமோர் கூடுதல் தகவல், எடப்பாடி மோடியை சந்தித்த போது அவருடன் இருந்தது மாணிக்கம் என்கின்ற ஒரு வழக்கறிஞர். தலைமை செயலாளர் கிரிஜா வைத்திய நாதனும், முதலமைச்சரின் உயர் செயலாளர் ஷிவ் தாஸ் மீனாவும் வெளியில் உட்கார வைக்கப்பட்டனர்.

மோடியின் குஜராத் நாட்களை அறிந்தவர்கள் திரும்ப, திரும்ப சொல்லும் ஒரு வார்த்தை மிகவும் முக்கியமானது. "மோடி குஜராத்தை ஆண்ட போது கிட்டத் தட்ட ஆறாண்டுகள் அங்கே பணி புரிந்தேன். அந்த ஆட்சியை உன்னிப்பாக பார்த்தவர்களுக்கு ஒரு விஷயம் நன்றாக விளங்கும். தான் சொல்லிய காரியம், தான் சொல்லிய படியே அட்சரம் பிசகாமல் அப்படியே நடக்க வேண்டும். அப்படி அந்த காரியம் நடக்கவில்லை என்றால் அதற்கான காரணத்தை கண்டு பிடித்து மோடி எப்படியாவது தான் நினைத்ததை, திட்டமிட்டதை வெற்றிகரமாக நடத்திவிடுவார். அதற்காக அவர் எந்தளவுக்கும் போவார். தான் சொல்லியதை செயற்படுத்த தவறியவர்கள், அதற்கான தகுதி உள்ளவர்களாக இருந்தாலும் சரி, அல்லது அதற்கான தகுதி இல்லாதவர்களாக இருந்தாலும் சரி ஒருபோதும் அவர்களை மோடி மன்னிக்க மாட்டார்'' என்கிறார் இந்தியாவின் முன்னணி ஆங்கில நாளிதழின் குஜராத் தலைமை செய்தி ஆசிரியராக பணியாற்றிய முன்னணி ஆங்கில செய்தியாளர் ஒருவர்.

ஓபிஎஸ் செய்த எல்லாவற்றையும் தானும் செய்கிறேன் என்று இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி கூறியும் கூட மோடி திருப்தி அடைந்ததாக தெரியவில்லை. மோடியின் நம்பிக்கையை பெற இன்னும் சில காலம் எடப்பாடி பழனிசாமி பொறுத்திருந்து பார்க்கலாம். ஆனால் அப்போதும் ஓபிஎஸ் ஸை விரும்பியது போல எடப்பாடி பழனிசாமியை மோடி நம்ப மாட்டார் என்பதுதான் கடந்த கால வரலாறு.

"இன்று தமிழ் நாட்டில் நடந்து கொண்டிருப்பது பாஜக வின் பினாமி அரசு" என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் சொல்லுவது நூற்றுக்கு நூறு சரியான கணிப்புதான் என்று தான் ஓரளவு அரசியல் அறிவு உள்ளவர்களும் கூட நினைக்கிறார்கள். ஜெயலலிதா வின் பெயரை சொல்லி 2016 ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த அஇஅதிமுக வினர் இன்று செய்து கொண்டிருக்கும் காரியங்கள் எல்லாமே ஜெயலலிதாவின் நினைவுகளுக்கு செய்யும் பச்சை துரோகமாகத் தான் இருக்கிறது. ஜெயலலிதா எதிர்த்த ஜிஎஸ்டி, உணவு பாதுகாப்பு மசோதா, உதய் மின் திட்டம் போன்ற விஷயங்களில் எல்லாம் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துமனையில் தன்னுடைய உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் போதே அஇஅதிமுக அரசு மோடி அரசிடம் சரணாகதி அடைந்து விட்டது.

ஜெ இறந்த பிறகு மோடி போட்ட செயற் திட்டம் அதாவது Blue Print இன்று மோடி நினைத்தளவுக்கு வெற்றி பெறவில்லை. இதுதான் மோடி அரசின் கோபத்துக்கான காரணம். ஓபிஎஸ் ஸுக்கு 90 நிமிடம் அப்பாயிண்ட்மெண்ட். எடப்பாடி பழனிசாமிக்கு 45 நிமிடம் அப்பாயிண்ட்மெண்ட். நடிகை கெளதமிக்கு அவர் விரும்பும் போதெல்லாம் அப்பாயின்மெண்ட் கொடுக்கத் தெரிந்த மோடிக்கு, அவருடைய அலுவலகத்தின் வாசலிலேயே ஒரு மாதகாலத்துக்கு போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகளின் பிரதிநிதிகளை சந்திக்க மனம் இல்லை.. தமிழக சட்டமன்றத்தின், 89 எம்எல்ஏ க்களை கொண்டிருக்கும் திமுக செயற் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு அப்பாயிண்ட் மெண்ட் கொடுக்க மறுக்கிறார் மோடி.

தமிழகத்தின் தலைமை செயலகத்தில் மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு ஆய்வு கூட்டம் நடத்துகிறார். அவரது துறை சார்ந்த விஷயங்கள் பற்றி பேசினார்கள். கூட்டத்தின் முடிவில் மத்திய அரசு சொல்லியபடி தமிழக அரசு செயற்படவில்லை என்றால், தமிழகத்துக்கான நிதியை மத்திய அரசு நிறுத்தி விடும் என்று எச்சரிக்கிறார். "இதைப் போன்ற ஒரு ஆணவப் பேச்சை, தவறான பேச்சை வேறெந்த மாநிலத்திலும் போய் நாயுடுவால் பேச முடியாது. மத்திய அரசுக்கு என்று தனியாக எந்த நிதியும் கிடையாது. இந்தியாவின் 29 மாநிலங்களும் மத்திய அரசுக்கு கட்டும் வரியிலிருந்துதான் மத்திய அரசு அந்தந்த மாநிலங்களுக்கு நிதியுதவி அளிக்கிறது. அதிலும் அதிகமாக மத்திய அரசுக்கு நிதி, அதாவது வரியின் மூலம் கொடுக்கும் மாநிலங்களில் முன்னணியில் இருக்கும் மாநிலம்தான் தமிழகம். ஆகவே எங்கள் பேச்சை நீங்கள் கேட்கா விட்டால் நிதியுதவி நிறுத்தப்படும் என்ற நாயுடுவின் பேச்சு அராஜகமானது மட்டுமல்ல, சட்டப்படியும் தவறான பேச்சாகும்'' என்கிறார் இந்தியாவில் மத்திய - மாநில அரசுகளின் உறவு பற்றி ஆராய்ச்சி செய்து வரும் அ.போஜராஜன்.

ஜெயலலிதா உயிருடன் இருந்த வரையில் தமிழகத்தில் பாஜக வுக்கு எந்தவொரு அரசியல் இடத்தையும், அதாவது, Political space கொடுத்தது கிடையாது. இத்தனைக்கும் தனிப்பட்ட முறையில் மோடியும், ஜெயலலிதா வும் நல்ல நண்பர்கள்தான். ஆனாலும் ஜெ பாஜக வுக்கு எந்த அரசியல் அங்கீகாரத்தையும் கொடுக்க வில்லை. மாறாக பாஜக வை எங்கே வைத்திருக்க வேண்டுமோ அங்கே தான் ஜெயல லிதா வைத்திருந்தார். காரணம் பாஜக வுடன் கூட்டணி சேர்ந்தால் அது அஇஅதிமுக வின் வாக்கு வங்கியில் கணிசமான அளவுக்கு இல்லையென்றாலும், ஓரளவுக்காவது பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்ற மக்களின் நாடித் துடிப்பை அவர் அறிந்த காரணத்தால்தான்.

ஆனால் ஜெ வின் வழிந்தோன்றல்கள் இன்று மோடியின் திருவடிகளை கெட்டியாக பிடித்துக் கொண்டு, கூச்ச நாச்சமில்லாமல் அரசியல் செய்து கொண்டிருப்பது தங்களை காப்பாற்றிக் கொள்ளத்தானே தவிர தமிழ் நாட்டின் நலனை கருத்தில் கொண்டல்ல.

ஜெ நான்காவது முறையாக ஆட்சிக்கு வந்ததன் ஓராண்டு 23.05.2017 அன்று வந்தது. அஇஅதிமுக கட்சியிடமும், அதனது அமைச்சர்கள் மற்றும் இன்ன பிற முக்கியஸ்தர்களிடமும் எந்த ஆர்வமும் தென்படவில்லை. ஜெயலலிதா இறந்த பிறகு எப்பொழுதும், அதாவது அனு தினமும், ஒவ்வொரு நொடிப் பொழுதும் தங்களது பதவியை காப்பாற்றிக் கொள்ளுவதிலேயே முழு கவனத்தையும் செலுத்திக் கொண்டிருக்கும் ஒவ்வொரு அஇஅதிமுக அமைச்சருக்கும், எம்எல்ஏ வுக்கும் ஓராண்டு நிறைவைப் பற்றியெல்லாம் சிந்திப்பதற்கு நேரமும் இல்லை, அதற்கான மனமும் இல்லை.

எது எப்படியோ, உண்மை இதுதான் .... இந்தியாவில் பல மாநிலங்களில் பிராந்திய கட்சிகள் ஆட்சியில் உள்ளன. ஆனால் எந்த பிராந்திய கட்சியும் இந்தளவுக்கு, அதாவது மோடி அரசின் "மூன்றாண்டு சாதனைகளுக்கு" நினைவு மலர் தயாரிக்க கூடிய அளவுக்கு சுய மரியாதை இழந்து போய் நிற்கவில்லை. ஆனால் தமிழ் நாட்டின் ஆளும் கட்சி மட்டும் ஏன் இந்த காரியத்தை செய்கிறது என்பதற்கான உண்மையான காரணம் என்னவென்பது இந்திய அரசின் வருமான வரித் துறைக்கும், அமலாக்கப் பிரிவுக்கும், சிபிஐ க்கும் மட்டும் தான் தெரியும்.

புரட்சி தலைவரால் துவங்கப் பட்டு, புரட்சித் தலைவியால் வளர்க்கப் பட்ட, நாடாளுமன்றத்தில் 50 எம் பி க்களை கொண்டிருக்கும், நாடாளுமன்றத்தின் மூன்றாவது பெரிய கட்சியான அஇஅதிமுக இன்று பூனைக் குட்டியாய் மோடி அரசிடம் சரண்டர் ஆகியிருப்பது ஒட்டு மொத்த தமிழகத்துக்கும் இயற்கை கொடுத்த சாபம் என்றுதான் நாம் சொல்ல வேண்டும்!

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Edappadi Palanisamy led ADMK govt wants to laud Modi govt's achievements. It is seen as a very strange move by a state govt, as no state govt has done like this never before.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more