For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்த தலித் எழுத்தாளரை எல்லோரும் கைவிட்டது ஏன்?

By R Mani
Google Oneindia Tamil News

-ஆர்.மணி

தமிழ்நாட்டில் எழுத்தாளர்கள், அறிவுஜீவிகள் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும், அவதூறு வழக்குகளை எதிர் கொள்ளுவதும் சாதாரண நிகழ்வுகளாகிவிட்டன.

ஆனால் இவ்வாறு கைது செய்யப்படும் அல்லது பொய் வழக்குகளுக்கு ஆளாகும் எழுத்தாளர்கள் மற்றும் அறிவுஜீவிகளுக்கான ஆதரவு அந்தந்த குறிப்பிட்ட சமூகத்தினர் மற்றும் சிவில் சமூகத்தினரிடமும் இல்லாமல் போவதுதான் துர்பாக்கியமான நிலையாக மாறிக் கொண்டிருக்கிறது.

இதற்கு சரியான உதாரணம் சமீபத்தில் கைது செய்யப்பட்டு, பின்னர் உயர் நீதிமன்றத்தின் தலையீட்டின் பேரில் விடுதலையாகியிருக்கும் புதுக்கோட்டையைச் சேர்ந்த தலித் எழுத்தாளர் துரை குணாவின் கதை. என்ன நடந்தது என்பதை இப்போது துரை குணாவின் வாய் மொழியாகவே கேட்கலாம். தொலைபேசியில் துரை குணாவிடம் எடுத்த பேட்டி இது:

Why everyone nonsupport this Dalit writer?

கே; என்ன நடந்தது என்று சொல்ல முடியுமா?

துரை குணா: ஜூன் 9ம் தேதி காலையில், குளந்திரான்பட்டு கிராமத்தில் உள்ள என்னுடைய வீட்டில்- இது கரம்பக்குடி தாலுகா, புதுக்கோட்டையில் உள்ளது - தூங்கிக் கொண்டிருந்தேன். காலை 5.30 மணியளவில் ஒரு போலீஸ் ஜீப் வந்த நின்றது. ஒரு எஸ்.ஐ மற்றும் இரண்டு காவலர்கள் வந்து கதவைத் தட்டினர். நான் எழுந்து பார்த்த போது, வந்து ஜீப்பில் ஏறு என்று கூறினர். என்ன விஷயம் என்று கேட்ட போது, அதெல்லாம் ஸ்டேஷனில் வந்து பேசிக் கொள்ளலாம் என்று கூறி ஜீப்பில் ஏற்றி விட்டனர்.

கே: பிறகு என்ன நடந்தது?

துரை கருணா: காலை 7.30 மணியளவில் இன்ஸ்பெக்டர் சகாயம் அன்பரசு வந்தார். நான் ஸ்டேஷனில் தரையில், அங்கிருக்கும் காமிராவின் பார்வையில் படாமல் அமர வைக்கப்பட்டிருந்தேன். வந்தவுடன் இன்ஸ்பெக்டர் என்னைப் பார்த்து, ‘பிச்சைக் கார ஜாதியில் பிறந்த நீயெல்லாம் என்னை எதிர்த்து எழுதுகிறாயா? தொலைத்து விடுவேன்?' என்று கூறி மேலும் மோசமான வார்த்தைகளைக் கூறியும் வசை பாடினார். 'நான் எதற்காக என்னை கைது செய்திருக்கிறீர்கள்? அந்தக் காரணத்தைக் கூறுங்கள்' என்று கேட்டேன். அதற்கு பதில் வரவில்லை. பின்னர் ஸ்டேஷனில் வேறு ரூமில் என்னை உட்கார வைத்தனர்.

கே: எப்போது நீதிமன்றத்துக்கு கொண்டு சென்றனர்?

துரை குணா: மாலை 4.30 மணிக்கு ஆலங்குடி பெண் மாஜிஸ்திரேட் முன்னிலையில் என்னை ஆஜர்படுத்தினர். அப்போதுதான் சிவானந்தம் என்பவரை நான் கத்தியால் குத்தியதாக ஒரு வழக்கு வந்துள்ளதாகவும் அதற்காக நான் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் மாஜிஸ்திரேட் கூறினார். மேலும் 2015ம் ஆண்டில் என் மீது ஒரு கொலை முயற்சி வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நிலுவையில் இருப்பதாகவும் கூறிய மாஜிஸ்திரேட், கத்தியால் குத்தப்பட்ட வழக்கிற்கு ஆலங்குடி நீதிமன்றத்தில் ஜாமீன் போட்டு வாங்கிக் கொள்ளும்படியும், கொலை முயற்சி வழக்கிற்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமீன் தாக்கல் செய்யுமாறும் அறிவுறுத்தினார்.

கே; சிவானந்தம் என்பவர் யார்? அவரை நீங்கள் கத்தியால் குத்தியதாக சொல்லப்பட்ட புகார் உண்மையா?

துரை குணா: சிவானந்தம் யார் என்றே எனக்குத் தெரியாது. மேலும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் என் மீது ஒரு கொலை முயற்சி வழக்கு நிலுவையில் உள்ளதென்பதும் அப்போதுதான் எனக்குத் தெரிய வந்தது. பூபதி கார்த்திகேயன் என்பவர் எனக்கு நண்பர். அவருக்கு சிவானந்தம் என்பவர் பணம் கொடுக்க வேண்டியிருந்தது. இந்த கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் ஒரு கட்டத்தில் பூபதி கார்த்திகேயன் சிவானந்தத்திடம் குரலை உயர்த்திப் பேசுகிறார். இதனைத் தெரிந்து கொண்ட உள்ளூர் இன்ஸ்பெக்டர் வேறு ஒரு தருணத்தில் சிவானந்தத்திடம் வெற்றுப் பேப்பரில் கையெழுத்து வாங்கி விடுகிறார். அதாவது பூபதி கார்த்திகேயனிடம் இருந்து பணத்தை திரும்பி வாங்கித் தருவதாகச் சொல்லி வெற்றுப் பேப்பரில் கையெழுத்து வாங்கி விடுகிறார். பின்னர் சிவானந்தம் பூபதி கார்த்திகேயனுக்கு பணத்தை செட்டில் செய்து விடுகிறார். இந்த வெற்றுத் தாளில்தான் சிவனாந்தத்தை நான் கத்தியால் குத்தியதாக போலிசே புகாரை எழுதிக் கொள்ளுகிறது.

கே: இதற்கு என்ன ஆதாரம்?

துரை குணா: அந்த சிவானந்தம் என்பவர் உயர்நீதி மன்ற மதுரை கிளையில் நான் கைது செய்யப்பட்ட பிறகு ஒரு ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்கிறார். அதில் தன்னை யாரும் கத்தியால் குத்தவில்லை என்று சொல்லுகிறார். அதாவது யாரை நான் குத்தியால் குத்தினேன் என்று வழக்கு போடப்பட்டதோ அந்த நபர்தான் குத்தப்படவில்லை என்றும், என்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று கூறியும் ஆட் கொணர்வு மனுவை தாக்கல் செய்கிறார்.

Why everyone nonsupport this Dalit writer?

(இணைப்புகள்)

1. http://www.thehindu.com/news/cities/Madurai/complainant-files-habeas-corpus-plea-in-durai-guna-case/article8734649.ece

2. http://www.newindianexpress.com/states/tamil_nadu/Assault-case-against-Dalit-writer-Guna-friend-false-finds-NGO/2016/06/14/article3481006.ece

3. http://www.thenewsminute.com/article/dalit-authors-arrest-murder-attempt-angers-activists-wife-alleges-police-plot-44645

கே: 2015 ல் பதிவான கொலை முயற்சி வழக்கு என்ன வழக்கு?

துரை குணா: மாரிமுத்து என்பவர் கொடுத்த புகாரின் பேரில் பதிவான வழக்கு அது. இவரும் யாரென்றே எனக்குத் தெரியாது. இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் சிவானந்தம், மாரிமுத்து இவர்கள் எல்லோருமே தலித் சமூகத்தினைச் சேர்ந்தவர்கள் என்பதுதான்.

கே: பிறகு என்ன நடந்தது?

துரை குணா: கத்தியால் குத்தப்பட்டதாகச் சொல்லப்பட்ட வழக்கில் ஜூன் 15ம் தேதியும், கொலை முயற்சி வழக்கில் 17ம் தேதியும் ஜாமீன் கிடைத்தது. 17ம் தேதி இரவு நான் விடுதைலயானேன்.

கே: உங்கள் மீது ஏன் போலீஸ் இந்த பொய் வழக்குகளை போட வேண்டும்?

துரை குணா; நான் உள்ளூரில் நடக்கும் சமூக விரோத காரியங்களுக்கு, கள்ளச் சாராயம், மணல் கடத்தல் போன்றவற்றுக்கு சம்மந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் தான் காரணமென்று பல புகார்களைக் கொடுத்திருக்கிறேன். அதுதான் காரணம்.

கே: நீங்கள் ஒரு எழுத்தாளர், என்ன புத்தகத்தை எழுதியிருக்கிறீர்கள்?

துரை குணா: ‘ஊரார் வரைந்த ஓவியம்' என்று 35 பக்க குறுநாவலை எழுதியிருக்கிறேன். 12.7.2014 அன்று இந்தப் புத்தகத்தை கரம்பக்குடி காந்தி பூங்காவில் வெளியிட்டேன்.

கே: இந்தப் புத்தகத்தை வெளியிட்ட பின்னரும் உங்களுக்கு பிரச்சனை வந்து விட்டது அல்லவா?

துரை குணா: ஆம். இந்தப் புத்தகத்தை வெளியிட்ட பின்னர் மிரட்டல்கள் வந்தன. உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் போய் தகுந்த பாதுகாப்புக்கான உத்திரவினை பெற்றுத் தான் ஊர் திரும்பினேன். ஆனால் ஊர் திரும்பியவுடனேயே எனக்கெதிராக ஆர்பாட்டங்கள் நடந்தன. போலீஸ் எனக்கெதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீதும் என் மீதும் சேர்த்தே வழக்குப் போட்டது. மூன்று மாதங்கள் ஊரை விட்டு வெளியேறிய பின்னர்தான் ஊர் திரும்பினேன்.

கே: அப்படி என்னதான் ‘ஊரார் வரைந்த ஓவியம்' குறு நாவலில் நீங்கள் எழுதியிருந்தீர்கள்?

துரை குணா: ஒரு 12 வயது தலித் சிறுவன் கோயிலில் விபூதியை எடுத்துப் பூசிக் கொள்ளுகிறான். இதனை அந்த கோயில் பூசாரியும், ஆதிக்க ஜாதியினரும் எதிர்க்கிறார்கள். அந்த சிறுவனுக்கு அபராதம் விதிக்கிறார்கள். வெளியூர் சென்று படித்துவிட்டு வேலை பார்க்கும் தலித் இளைஞர்கள் இதில் கோபமுற்று ஆதிக்க ஜாதியினரைத் தாக்குகிறார்கள். இதன் பின்னர் இரண்டு சமூகத்தினை சேர்ந்த பெண்களைப் பற்றியும் இரண்டு தரப்பும் வைக்கும் விமர்சனங்கள் குறு நாவலில் முக்கியமானது. இந்த குறுநாவலுக்காக இதுவரையில் எட்டு வழக்குகள் என் மீது நிலுவையில் உள்ளன.

கே: உங்கள் மீது உள்ளூர் தலித்துக்களுக்கும் ஏன் கோபம்?

துரை குணா: நான் தலித் மக்களைப் பற்றி இழிவாக எழுதிவிட்டதாக தலித்துக்கள் கோபப் படுகிறார்கள். ஆதிக்க ஜாதியினர் நான் அவர்களைப் பற்றி இழிவாக எழுதி விட்டதாக கோபப் படுகிறார்கள்.

கே: ஆகவே நீங்கள் இரண்டு தரப்பினரின் எதிர்ப்பையும் சம்பாதித்துக் கொண்டீர்கள்?

துரை குணா: ஆம். அதுதான் என்னுடைய தற்போதய நிலைமை (விரக்தியில் சிரிக்கிறார்)

கே: நீங்கள் எந்த கட்சியிலாவது உறுப்பினரா?

துரை குணா: நான் சிபிஎம் மில் உறுப்பினராக இருக்கிறேன். உறுப்பினர் அட்டை கூட வைத்திருக்கிறேன். என்னுடைய குறு நாவலை புதுக்கோட்டை மாவட்ட சிபிஎம் செயலாளர்தான் 2014ல் வெளியிட்டார்.

கே: உங்கள் கைது நடவடிக்கையின் போது சிபிஎம் உங்களுக்கு ஆதரவாக செயற்பட்டதா?

துரை குணா: சிபிஎம் அறிக்கை கொடுத்தது.

கே: இந்த விஷயத்தில் சிபிஎம் மின் செயற்பாடுகள் உங்களுக்கு திருப்தியளிக்கிறதா?

துரை குணா: (சிறிது தயங்குகிறார்) இல்லை எனக்குத் திருப்தி தரவில்லை. சிபிஎம் ஒரு இடதுசாரி கட்சி. அவர்கள் நினைத்தால் அரசு இயந்திரம் தவறாக பயன்படுத்தப் படும்போது எவ்வாறு அதனை கட்டமைப்பு ரீதியில், ஒருங்கிணைந்து எதிர்த்துப் போராட முடியும் என்பது அவர்களுக்குத் தெரியும். ஆனால் என் விஷயத்தில் சிபிஎம் அதனை செய்யவில்லை.

கே: என்ன காரணம்?

துரை குணா: எனக்குத் தெரியவில்லை. ஒரு வேளை, இது காரணமாக இருக்கலாம். அதாவது அவர்கள், சிபிஎம் தோழர்கள் சொல்லுவது, என்னுடைய குறு நாவலில் நான் சித்திரித்திருக்கும் கதாபாத்திரங்கள் நிஜ வாழ்வில் சம்மந்தப்பட்ட ஊரில் இருப்பது சரியானதல்ல என்று கூறுகிறார்கள். அதாவது நடமாடிக் கொண்டிருப்பவர்களை, அவர்களை அடையாளப்படுத்தும் விதமாக சித்திரித்திருப்பது சரியல்ல என்ற வாதம் சிபிஎம்மால் முன் வைக்கப்படுகிறது.

கே: ஏன் தமிழகத்தில் உள்ள மற்ற தலித் அமைப்புகள், அது விசிகே அல்லது புதிய தமிழகம் போன்றவையும் கூட உங்களை ஆதரித்து பெரிய அளவில் குரல் கொடுக்கவில்லை?

துரை குணா: நான் தலித்துக்களையும் இதில் தவறாக சித்தரித்திருக்கிறேன் என்பது காரணமாக இருக்கலாம். ஆனால் பெரியளவில் தலித் அமைப்புகளும் குரல் கொடுக்கவில்லை என்பது ஏமாற்றமாகத்தான் இருக்கின்றது.

கே: எழுத்தாளர் பெருமாள் முருகன் விவகாரம் வந்த போது உருவான ஆதரவு, எழுத்தாளர்கள் மற்றும் சிவில் சமூகத்திடமிருந்தும் உங்களுக்குத் தற்போது ஏன் இல்லை?

துரை முருகன்: தெரியாது. ஆனால் வருத்தமாகத்தான் இருக்கிறது.

கே: நீங்கள் வாழ்கை ஜீவனத்திற்கு என்ன செய்கிறீர்கள்? அடுத்த புத்தகத்தை எப்போது கொண்டு வரப்போகிறீர்கள்?

துரை குணா: வாழ்கை போராட்டமாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது. அரசு கொடுத்த நிலத்தில் வீடு கட்டிக் குடியிருக்கிறேன். மனைவி, இரண்டு குழந்தைகள். நிரந்தர வருமானம் கிடையாது. அப்பா ஐஸ் விற்று ஓரளவுக்கு பொருளுதவி செய்து கொண்டிருக்கிறார். ஒரு கவிதைத் தொகுப்பை தயார் செய்திருக்கிறேன். ஆனால் புத்தகமாக வெளியிட போதிய நிதியில்லாததால் காத்திருக்கிறேன்.

English summary
Durai Guna, a dalit writer is in trouble for his latest book release on Dalits and some other caste people. But none of the writers of dalit movements supporting Guna in his troubling days. Here is his complete interview taken by R Mani.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X