கருணாசை லேசுல நினைத்துவிடாதீர்கள்.. செம பிளான்ல இருக்காரு!

சென்னை: டிடிவி தினகரன் ஆதரவாளரான, அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி இன்று திடீரென, எம்எல்ஏ கருணாசை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு எதிர்பார்க்கப்பட்டதுதான் என்று, கூறுகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
கருணாசை சந்தித்து பொன்னாடை போர்த்தி அவருக்கு தனது ஆதரவை தெரிவித்தார் ரத்தினசபாபதி.
ரத்தினசபாபதி கூறுகையில், சட்டசபையில் அமைச்சர் ஒருவர், டிடிவி தினகரனை ஒருமையில் பேசியபோது, எதிர்த்த எம்எல்ஏக்களில் கருணாஸ் ஒருவர். இதையெல்லாம் மனதில் வைத்துதான், அரசு இவரை பழி வாங்குகிறார்கள்.
[ நான் லொடுக்கு பாண்டிதான்.. வார்த்தையை அளந்து பேசுங்கள்.. பொறிந்து தள்ளிய கருணாஸ்! ]

தினகரன் ஆதரவு எம்எல்ஏ
கருணாஸ் மீது ஒரு துரும்பு விழுந்தாலும் நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். நீதிமன்ற உத்தரவுடன் வெளியே வந்துள்ள கருணாசை இன்முகத்தோடு பார்க்க வந்துள்ளேன். சசிகலா மட்டுமல்ல, கருணாசும் இந்த ஆட்சியை அமைக்க காரணமாக இருந்தவர். ஆனால் ஆட்சியாளர்கள் நன்றி என்ற மூன்றெழுத்தை மறந்துவிட்டனர். நாங்கள் எதையும் சந்திக்க தயாராக வந்தவர்கள். கருணாசை அச்சுறுத்தல் மூலமாகவோ, மிரட்டல் மூலமாகவே அடிபணிய வைத்துவிட முடியாது. எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும், அதை எதிர்கொள்ளும் ஆற்றல் கொண்டவர் கருணாஸ். இவ்வாறு ரத்தினசபாபதி தெரிவித்தார்.

திடீர் வாய்ப்பு
கருணாசை பொறுத்தளவில் முக்குலத்தோர் புலிப்படை என்ற பெயரில், திடீரென கட்சியை துவங்கியவர். முக்குலத்தோரில் மற்றொரு பிரமுகரின் செல்வாக்கை குறைக்க, கருணாசுக்கு முக்கியத்துவம் கொடுத்து கடந்த தேர்தலில், ஒரு தொகுதியையும் கொடுத்தார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. ஆனால், ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, கருணாசுக்கு முக்கியத்துவம் குறைந்துவிட்டது.

தள்ளிப்போனார்
சசிகலா ஆதரவாளராக இருந்த கருணாஸ் கூவத்தூர் ரிசார்ட் சம்பவங்களை முன் வைத்து குத்திக் காட்டி பேச ஆரம்பித்த நிலையில், அரசில் உயர் பதவியில் இருப்பவவர்கள் இவரை ஒதுக்கிக வைக்க ஆரம்பித்தனர். ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு எதிரான போராட்டத்தின்போது முக்குலத்தோர் புலிப்படையை சேர்ந்தவர்கள் உள்ளே புகுந்து, ரசிகர்களை அடித்து நொறுக்கிய வீடியோ வெளியானபோது அரசின் கோபம் இன்னும் அதிகரித்தது.

திரைப்பட வாய்ப்பு இல்லை
கருணாஸ் இப்போது திரைப்படங்களில் வாய்ப்பு இன்றி உள்ளார். அரசியலிலும் தனித்து சாதிக்க முடியாது என்பதை கருணாஸ் உணர்ந்துள்ளார். எனவே தனது பேட்டிகளின்போது தான் சார்ந்த ஜாதியை குறிப்பிட்டு பேசியபடியே உள்ளார். ஜாதி ஆதரவை அவர் பெரிதும் எதிர்பார்க்கிறார் என்பது இன்று ரத்னசபாபதியுடனான சந்திப்பின்போது கூட தெரிந்தது. இருவரும் பேட்டியளித்தபோது பின்புலத்தில் முத்துராமலிங்க தேவர் புகைப்படம் இடம் பெற்றிருந்ததை பத்திரிகையாளர்கள் கவனிக்க மறக்கவில்லை.

தேர்தலுக்கு ரெடி
எனவே தினகரன் அணிக்கு செல்ல கருணாஸ் முடிவு செய்துள்ளார். ஜாதியை முன் வைத்து ஆதரவை திரட்டுவதோடு, தினகரன் அணியில் இருந்தால்தான் அடுத்த தேர்தலில் செலவீனங்களை அவர் பார்த்துக்கொள்வார் என்ற கால்குலேசனும் இதில் உள்ளதாம். கடந்த தேர்தலிலும் அதிமுகதான் தேர்தல் செலவுகளை பார்த்துக்கொண்டது. எனவே வரும் தேர்தலில் தினகரனுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டால், காசும் செலவாகாது, வெற்றியையும் உறுதி செய்துவிடலாம் என்பது கருணாஸ் திட்டம் என்கிறார்கள். இவரது அரசியல் திட்டத்திற்காகவே ஜாதியை முன்னிறுத்தி மக்களை தூண்டும் செயல்களில் ஈடுபடுகிறார் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.