For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓ. பன்னீர்செல்வம் – அதிமுக அரசியல் பரம பதத்தில் கீழே சரிந்து விழுந்த கதை

By R Mani
Google Oneindia Tamil News

-ஆர்.மணி

ஓ. பன்னீர்செல்வம் இன்று வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார். இரண்டு முறை தமிழ் நாட்டின் முதலமைச்சராக இருந்தவர். தற்போதய நிதி மற்றும் பொதுப் பணித் துறை அமைச்சர். இவருடன் சேர்த்து மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வையை தன்னுடன் வைத்திருக்கும் நத்தம் விஸ்வநாதன் மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பனும் கூட முற்றிலுமாக இன்று ஆளும் அதிமுக வில் ஓரங்கட்டப் பட்டுவிட்டனர்.

Why O Panneer Selvam sidelined in AIADMK?

வழக்கமாக முதலமைச்சரும், அதிமுக வின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவை எந்த அரசியல் கட்சியின் முக்கியஸ்தர்கள் வந்து சந்தித்தாலும், இவர்கள் உடனிருப்பர். ஆனால் சமீபத்தில் ஏழு சிறிய கட்சிகளின் பிரதிநிதிகள் ஜெயலலிதாவை அவரது போயஸ் தோட்ட வீட்டில் சந்தித்த போது இவர்கள் இல்லை. ஜெயலலிதாவின் வலது பக்கத்தில் அவரது விருந்தினர்கள் அமர்ந்திருக்கின்றனர். இடது புறத்தில் வீட்டு வசதித்துறை அமைச்சர் வைத்தியலிங்கம் மற்றும் அமைச்சர்கள் வேலுமணி மற்றும் தங்கமணி உள்ளிட்ட ஐந்து பேர் அமர்ந்திருக்கின்றனர். இந்த சந்திப்புக்கு முன்பு அதிமுக சார்பில் போட்டியிட விரும்பியவர்களிடம் ஜெயலலிதா நேர் காணல் நடத்தியபோது அவரது அருகாமையில் இருந்தது கட்சியின் அவைத்தலைவர் ஈ.மதுசூதனன் மற்றும் புதியதாக இரண்டு பேர். அப்போதும் ஓபிஎஸ் மற்றும் நத்தம் இல்லை. நால்வர் அணியில் - ஓபிஎஸ், நத்தம் விஸ்வநாதன், பழனியப்பன் மற்றும் வைத்தியலிங்கம் - மூவர் இன்று முக்கியத்துவம் இழந்து விட்டது தெளிவாகவே தெரிகிறது. இந்த மூவரிலும் ஓபிஎஸ் ஓரங்கட்டப்பட்டது தான் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதற்கு சொல்லப்படும், ஊர்ஜீதமாகாத காரணங்களை பற்றிய ஆராய்ச்சிக்குள் போவதற்கு

முன்பு ஓபிஎஸ்ஸின் அரசியல் வாழ்வு பற்றிய ஒரு சின்ன ஃபிளாஷ்பேக்...

ஜனவரி 14 1951 ல் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பிறந்தவர். மனைவி பெயர் பி.விஜயலஷ்மி. இரண்டு மகன்கள். பெரியகுளம் முனிசிபாலிட்டியில் 1996 - 2001ல் சேர்மனாக இருந்தவர். அப்போது தமிழகத்தில் திமுக ஆட்சி நடந்து கொண்டிருந்தது. இதற்கு முந்தைய இவரது அரசியல் சுவாரஸ்யமானது. அதிமுகவில் ஆரம்பக் கால உறுப்பினர். 1987ல் எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் அதிமுக ஜானகி அணி, ஜெயலலிதா அணி என்று இரண்டாக பிளவு பட்டது. அப்போது ஓபிஎஸ், ஜானகி அணியில் இருந்தார். ஜெயலலிதா 1989 ஜனவரியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தன்னுடைய அரசியல் வாழ்வின் முதல் தேர்தலில் போட்டியிட்டார். அதற்கு முன்பே 1984ல் ஜெயலலிதா ராஜ்யசபா உறுப்பினராக எம்ஜிஆரால் நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டாலும். மக்கள் மன்றத்தில் தேர்தல் களத்துக்கு வந்தது 1989 ஜனவரியில் நடந்த தேர்தலில் தான். போடி தொகுதியில் போட்டியிட்டார். அப்போது ஜானகி அணியில் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டது நடிகை வெண்ணீராடை நிர்மலா. இவரது தலைமை தேர்தல் ஏஜண்ட்தான் ஓ பன்னீர்செல்வம்.

Why O Panneer Selvam sidelined in AIADMK?

இந்த தேர்தலில் ஜெயலலிதா வென்றார். ஆனால் அதிமுக வின் இரண்டு அணிகளும் தோற்றன. திமுக வென்று மு.கருணாநிதி முதலமைச்சரானார். ஆனால் 1989 பிப்ரவரியிலேயே ஜானகி அணி, ஜெயலலிதா அணி என்ற இரண்டு அணிகளுமே ஒன்றாக இணைந்தன. மீண்டும் இரட்டை இலை சின்னம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.

2001 ம் ஆண்டில்தான் முதன் முறையாக ஓபிஎஸ் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப் பட்டார். எம்எல்ஏவான மூன்றே மாதங்களில் ஓபிஎஸ்ஸுக்கு ஜாக்பாட் அடித்தது. ஆம். 2001ம் ஆண்டு செப்டம்பர் 21ம் தேதி உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி எஸ்.பி. பரூச்சா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு ஜெயலலிதா முதலமைச்சராக பதவியேற்றது செல்லாதென்று தீர்ப்பளித்த து. காரணம் 2000 ம் ஆண்டில் டான்சி மற்றும் பிளசெண்ட் ஸ்டே ஊழல் வழக்கில் கீழமை நீதிமன்றத்தால் குற்றவாளியென்று தீர்ப்பளிக்கப்பட்டு, சிறைத் தண்டனை விதிக்கப் பட்ட ஜெயலலிதா 2001ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழந்திருந்தார். மேலும் நான்கு தொகுதிகளில் ஜெயலலிதா அப்போது வேட்பு மனு தாக்கல் செய்து பிரச்சனை வேறு மாதிரியாகவும் வடிவமெடுத்திருந்தது. ஆனால் அதிமுக 2001 சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றிருந்தது.

2001 மே 13 ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளி வந்தன. இதில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அடுத்த நாளே மாலை 6 மணிக்கு ஜெயலலிதா முதலமைச்சராக பதவியேற்றார். இதனை எதிர்த்து திமுக தாக்கல் செய்த மனுவை, அதாவது எம்எல்ஏவாகும் தகுதியில்லாத ஒருவர் எவ்வாறு முதலமைச்சராக நீடிக்க முடியும் என்ற வழக்கில்தான் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு ஜெயலலிதாவின் பதவிப் பிரமாணம் செல்லாதென்று தீர்ப்பளித்தது. தீர்ப்பு காலையில் வந்தது. இரவு 8 மணியளவில் புதிய முதலமைச்சரும், அமைச்சர்களும் பதவியேற்றனர். யாரும் எதிர்பாராதவிதமாக ஓபிஎஸ் முதலமைச்சராக பதவியேற்றார். அப்போதைய தமிழக அமைச்சரவையில் புரோட்டகால் பட்டியல் வரிசையில் 14 இடத்தில் இருந்தவர் ஓபிஎஸ்.

அப்போதைய நிதியமைச்சர் சி.பொன்னையனுக்குத் தான் முதலமைச்சர் வாய்ப்பு கிடைக்கும் என்றெல்லாம் பரவலாக பேசப்பட்டது. கிட்டத்தட்ட ஐந்தரை மாதங்கள் முதலமைச்சராக இருந்தார் ஓபிஎஸ். 2001 ம் ஆண்டு டிசம்பர் 4 ம் தேதி சென்னை உயர்நீதி மன்றம் ஜெயலலிதாவை டான்சி மற்றும் பிளசெண்ட் ஸ்டே ஊழல் வழக்குகளில் இருந்து விடுதலை செய்தது. மார்ச் 2ம் தேதி ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றார். 2001 செப்டம்பர் 21ம் தேதி சென்னை ஆளுநர் மாளிகையில் முதலமைச்சராக பதவியேற்பதற்கு முன்பு எல்லார் முன்பும், நெடுஞ்சாண் கிடையாக ஜெயலலிதா காலில் விழுந்த ஓபிஎஸ் தனது ராஜ விஸ்வாசத்தை வெளிப்படையாகவே ஊர், உலகிற்கு காட்டினார்.

Why O Panneer Selvam sidelined in AIADMK?

2006ம் ஆண்டு ஜெயலலிதா தோற்று திமுக ஆட்சியைப் பிடித்தது. அதிமுக ஆட்சியை இழந்தாலும், 1996யைப் போல படுதோல்வியை கட்சி சந்திக்கவில்லை. 61 இடங்களை அதிமுக வென்றது. திமுக வென்று கருணாநிதி முதலைமச்சரானார். 1996 ஜூனிலிருந்து சில மாதங்கள் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராக இருந்தார் ஓபிஎஸ். பின்னர் ஜெயலலிதா எதிர்கட்சித் தலைவராக பொறுப் பேற்றுக் கொண்டார். இந்த கால கட்டத்திலும், அதாவது அதிமுக எதிர்கட்சியாக இருந்த போதும் அதி தீவிர அம்மா விசுவாசியாகவே விளங்கி வந்தார் ஓபிஎஸ். பல முறை பல மேடைகளில் ஜெயலலிதா காலில் விழுந்து எழுந்தார் ஓபிஎஸ். இதில் அவருக்கு என்றுமே தயக்கம் கிடையாது. இலங்கைத் தமிழர் பிரச்சனைக்காக 2009ல் ஜெயலலிதா சென்னையில் உண்ணாவிரதம் இருந்தார். அப்போது மேடையில் சாஷ்டங்கமாக விழுந்தார் ஓபிஎஸ். ஜெயலலிதா எழுந்திருங்கள் என்று சொன்ன பிறகும் சில நொடிகள் ஓபிஎஸ் மேடையில் ஜெயலலிதா காலில் விழுந்து கிடப்பார்.

2011ல் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே ஓபிஎஸ் குடும்ப உறுப்பினர்கள் மீது புகார்கள் மெல்ல மெல்ல வர ஆரம்பித்தன. 2001 - 2006 ல் இருந்த ஓபிஎஸ் வேறு, 2011 - 2016ல் இருக்கும் ஓபிஎஸ் வேறுதான். 2012ல் ஓபிஎஸ்ஸின் தம்பி ஓ ராஜா தலித் பூசாரி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் மாட்டிக் கொண்டார். இந்த வழக்கு கொலை வழக்காகவும் மட்டுமல்லாமல், தலித்துக்களுக்கு எதிரான வன்முறையை தடுப்பதற்காக கொணரப்பட்ட சட்டங்களின் கீழும் போடப்பட்டது. ஆளும் கட்சியின் ஒரு மூத்த அமைச்சரின் தம்பி ஒரு தலித் பூசாரி கொல்லப் பட்ட வழக்கில் மாட்டுவது எத்தகைய உணர்வை சம்மந்தப்பட்ட கட்சித் தலைமையிடன் ஏற்படுத்தும் என்பதை புரிந்து கொள்ளலாம். அப்போதே ஓபிஎஸ் ஸூக்கு சறுக்கல் ஆரம்பமானது என்று தான் சொல்லுகிறார்கள்.

மேலும் கடந்த ஆட்சிக் காலத்தைப் போல அல்லாமல் இந்த முறை ஓபிஎஸ்ஸின் இரண்டு மகன்களின் செல்வாக்கும் கணிசமான அளவு ஆட்சியதிகாரத்தில் உயர ஆரம்பித்தது.

அதிமுகவின் இந்த ஆட்சிக் காலத்தில் இரண்டாவது முறையாக ஓ பன்னீர்செல்வத்துக்கு ஜாக்பாட் அடித்தது. 2014ம் ஆண்டு செப்டம்பர் 27ம் நாள் பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டீ ஜான் குன்ஹா, ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகிய நால்வரையும் சொத்து குவிப்பு ஊழல் வழக்கில் குற்றவாளிகள் என்று தண்டித்து அவர்களுக்கு நான்காண்டுகள் சிறைத் தண்டனை விதித்தார். செப்டம்பர் 29ம் தேதி மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார் ஓபிஎஸ். 2015 மே 23ம் தேதி மீண்டும் ஜெயலலிதா முதலமைச்சராக பதவியேற்கும் வரையில் அரியணையில் இருந்தார். ஆகவே 2001 - 2002ல் ஐந்தரை மாதங்கள், 2014 - 2015ல் கிட்டத் தட்ட ஏழரை மாதங்கள் என்று தனது அரசியல் வாழ்வில் 12 மாதங்களுக்கு மேல் முதலமைச்சராக இருந்திருக்கிறார் ஓபிஎஸ்.

யாரையும் அவ்வளவு சுலபத்தில் நம்பாத ஜெயலலிதாவே இரண்டு முறை ஒருவரை முதலமைச்சராக ஆக்கி அழகு பார்த்திருக்கிறார் என்றால் அவர் எந்தளவுக்கு ஜெ.வின் நம்பிக்கையை பெற்றிருக்க வேண்டும்? இந்தளவு ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு பாத்திரமான ஒருவர் எவ்வாறு இன்று கிட்டத்தட்ட வீட்டுச் சிறையில் என்று சொல்லக் கூடிய அளவுக்கான நிலைமைக்கு வந்திருக்கிறார் என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது.

இன்று ஊடகங்களில் வரும் செய்திகள் அனைத்தும் ஊர்ஜீதமாகாதவைதான். சம்பவங்களின் கோர்வையின் அடிப்படையிலும், பொது வெளியில் உள்ள விஷயங்களின் அடிப்படையிலும் தான் நாம் உண்மையை ஓரளவுக்கு அவதானிக்க முடியும். 2014 செப்டம்பர் - 2015 மே மாத காலகட்டத்தில் முதலமைச்சராக இருக்கையில் பதவி சுகமும், அது தரும் போதையும் ஓபிஎஸ்ஸை புதிய கனவுகளுக்கும், வேறு மாதிரியான அரசியல் அபிலாஷைகளுக்கும் இட்டுச் சென்றதாக கூறுகிறார்கள். எம்எல்ஏ சீட் வாங்கித் தருவதாக பலரிடமும் பணத்தை வாங்கி விட்டதாகவும், இது வெளியில் தெரிந்த பின்னர் ஜெயலலிதாவின் உத்தரிவின் பேரில் சென்னை அருகில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் ரெய்டு நடந்து, சிலர் போலீசிடம் சிக்கியதாகவும் இதில் சம்மந்தப்பட்டவர்கள் வேறு மோசடி வழக்குகளில் போலீசாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்றும் இதே போல ஓபிஎஸ்ஸுக்கு நெருக்கமான எம்எல்ஏ க்கள், மாவட்ட செயலாளர்கள், கட்சியின் பல்வேறு மட்டங்களில் இருக்கும் நிர்வாகிகளும் போலீசின் கண்காணிப்பு மற்றும் விசாரணை வளையத்திற்குள் இருப்பதாகவும் தொடர்ச்சியாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

Why O Panneer Selvam sidelined in AIADMK?

நெருப்பு இல்லாமல் புகையாது என்பார்கள்தான். ஆனால் இந்த செய்திகள் எதுவும் அதிகாரபூர்வமாக ஊர்ஜீதாமாகாதவை. தொடர்ச்சியாக ஓபிஎஸ்ஸூக்கு நெருக்கமானவர்கள் என்று சொல்லப்படக் கூடியவர்கள் கட்சிக்குள் களையெடுக்கப்படுகிறார்கள், அல்லது ஓரங்கட்டப்படுகிறார்கள். ஓபிஎஸ்ஸூம், ஜெயலலிதாவின் முக்கியமான சந்திப்புகளில் அவரது அருகில் எங்குமே இல்லை.

ஓபிஎஸ்ஸின் இந்த நிலைமைக்கு ஜெ.வின் அருகாமையில் இருக்கும் அசைக்க முடியாத அந்த அதிகார மையத்தை அவர் பகைத்துக் கொண்டது தான் காரணம் என்கின்றனர் அதிமுக வின் உள் விவகாரங்களை நன்கறிந்தவர்கள். இன்னும் சொல்லப் போனால் இந்த அதிகார மையத்தின் நம்பிக்கைக்கு உரியவராக சில மாதங்கள் முன்பு வரையில் ஓபிஎஸ் இருந்தார். ‘'அது 2014 செப்டம்பர் 29ல் இரண்டாவது முறையாக அவர் பதவியேற்பதற்கு முன்பு. அதன் பிறகு நிலைமை மாறி விட்டது. குறிப்பிட்ட அதிகார மையம் இப்போது அவரை நம்பத் தயாராக இல்லை'' என்கிறார் அதிமுக விவகாரங்களை நன்கறிந்த பத்திரிகையாளர் ஒருவர்.

ஓபிஎஸ் இந்த அதிகார மையத்துக்கு அதீத விசுவாசியாக இருந்த காலம் உண்டுதான் என்கிறார் அந்த பத்திரிகையாளர். ‘'1998ல் டிடிவி தினகரன் மக்களவை தேர்தலில் பெரியகுளம் தொகுதியிலிருந்து போட்டியிட்ட போது அவரது தலைமை தேர்தல் அலுவலகமாகவே ஓபிஎஸ் வீடு செயற்பட்டது. 2001 - 2002ல் ஐந்தரை மாதங்கள் முதலமைச்சராக இருந்த போது, ஓபிஎஸ்ஸின் காரில் வெளியில் இருந்து பார்த்தால் தெரிவது ஜெயலலிதாவின் படம். உள்ளே ஓபிஎஸ் வைத்திருந்தது டிடிவி தினகரனின் படமும்தான்'' என்று மேலும் கூறுகிறார் அந்த பத்திரிகையாளர்.

2011 டிசம்பர் 19ல் சசிகலா, தினகரன் உள்ளிட்ட பலரையும் அதிமுக விலிருந்து வெளியேற்றினார் ஜெயலலிதா. அதே டிசம்பர் 31ம் தேதி சென்னையில் நடைபெற்ற அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக் குழுவில் பேசிய ஜெயலலிதா ‘'கட்சியிலிருந்து தூக்கியடிக்கப் பட்ட சிலர் மீண்டும் நாங்கள் கட்சிக்குள் வந்து விடுவோம் என்று உங்களை மிரட்டிக் கொண்டிருக்கலாம். நம்ப வேண்டாம். கட்சியிலிருந்து தூக்கியடிக்கப்பட்டவர்கள் தூக்கியடிக்கப்பட்டவர்கள் தான். அவர்கள் மீண்டும் கட்சிக்குள் வரவே முடியாது'' என்று பேசினார். இதை நம்பி அந்தக் கூட்டத்தில் பேசிய அப்போதைய உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி. முனுசாமி, ‘'அம்மா தான் எல்லாம். பிடித்து வைத்தால் பிள்ளையார். எடுத்துப் போட்டால் சாணி'' என்றே தனது ஜெ. விசுவாசத்தை காட்டினார்.

ஆனால் என்ன நடந்தது ...? 2012ம் ஆண்டு ஏப்ரல் 1 ம் தேதி மீண்டும் சசிகலாவை அழைத்துக் கொண்டார் ஜெயலலிதா. 2011ல் சசிகலா வும் அவரது உறவினர்களும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டபோது மூன்று பேர் அவரது விசுவாசிகளாக முத்திரைக் குத்தப்பட்டு அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டனர். எஸ்.பி. வேலுமணி, கோகுல இந்திரா மற்றும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி. சசிகலா ஜெ.வுடன் சேர்ந்த வுடன் சில மாதங்கள் கழித்து இவர்களுக்கு மீண்டும் அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது. அப்போது கே.பி.முனுசாமியிடமிருந்த முக்கியமான துறைகளான உள்ளாட்சி, சிறைத் துறை நிர்வாகம், சட்டம் போன்றவை வேலுமணியிடம் கொடுக்கப் பட்டன. முனுசாமி பின்னர் அமைச்சரவையிலிருந்தே நீக்கப்பட்டார். இதிலிருந்தே அதிமுகவில் அதிகார மையத்தின் கட்டமைப்பை புரிந்து கொள்ளலாம்.

ஓபிஎஸ்ஸுக்கு இன்று வந்திருக்க கூடிய பிரச்சனைக்கு மூல காரணமே அவர் பரிபூரணமாக ஜெ. விசுவாசியாக மாறியதுதான் என்கிறார்கள் போயஸ் தோட்ட அரசியிலின் உள் விவகாரங்களை நன்கறிந்தவர்கள். ‘'இதுதான் சிக்கலே. ஓபிஎஸ் முழுக்க, முழுக்கு அம்மா விசுவாசி. இதில் சில ஆண்டுகளாகவே அவர் மீது கோபத்தில் இருக்கும் அந்த அதிகார மையத்தின் உக்கிர பார்வையில் இப்போது மாட்டிக் கொண்டு திண்டாடிக் கொண்டிருக்கிறார். அவர் மீதான குற்றச்சாட்டுகளில் பூர்வாங்க ஆதாரம் கண்டிப்பாக இருக்கிறது. ஆனால் அவரது தற்போதைய பிரச்சனைகளுக்கு காரணம் அவர் அந்த அதிகார மையத்தை பகைத்தது தான்'' என்கிறார் ஓரங்கட்டப்பட்டிருக்கும் அதிமுக வின் முன்னாள் அமைச்சர் ஒருவர்.

கட்சியின் பல மட்டங்களிலும் தன்னுடைய ஆதரவாளர்களை நிரப்பி விட்டதாக ஓபிஎஸ் மீது குற்றச் சாட்டு எழுந்துள்ளது. இது தவிர ஏராளமாக வசூல் வேட்டை நடந்ததாகவும் கூறப் படுகிறது. வெறும் நிதி மோசடி என்றால் அதிமுக தலைமை பெரியளவில் கண்டு கொள்ளாது. ஆனால் அதனுடன் சேர்த்து அரசியல் ஆசையும் வந்தால், சம்மந்தப்பட்டவர்கள் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போவதற்கான வாய்ப்புகள் தான் அதிகம். ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தங்களது சட்டைப் பையில் ஜெ. படத்துடன் சேர்த்து ஒரு ஓரத்தில் ஓபிஎஸ் படத்தையும் வைத்துக் கொண்டிருப்பதாக வதந்திகள் உலா வருகின்றன.

இரண்டு முறை முதலமைச்சராக கிட்டத்தட்ட 12 மாதங்களுக்கு மேல் இருந்த ஒருவர் இன்று முற்றிலுமாக ஓரங்கட்டப் கட்டப்பட்டிருக்கிறார். அதிமுகவில் பொருளாளர் பதவியும் விரைவில் அவரிடமிருந்து பறிக்கப்பட்டு விடுமென்றும் பேசப் படுகிறது. இந்த முறை ஓபிஎஸ் ஸுக்கு நிச்சயம் எம்எல்ஏ சீட் கிடைக்காது என்று தான் நம்பப்படுகிறது.

அடிப்படையில் பெரிய அளவில் ஜனநாயக பண்புகள் இல்லாத, ஒரு தனி நபரை மட்டுமே நம்பி அரசியல் நடத்தும் கட்சிகளில் இவையெல்லாம் சகஜம் தான். ‘'யார் மந்திரி, யார் எந்திரி என்பது அம்மா மட்டுமே முடிவு செய்யும் விஷயம். அம்மா சொன்னால் நாங்கள் மந்திரி, இல்லையென்றால் நாங்கள் எந்திரி'' என்று 1994 ல் அப்போதைய நிதியமைச்சர் நாவலர் நெடுஞ்செழியன் ஒரு கூட்டத்தில் பேசினார். திராவிட இயக்கத்தின் ஐம்பெரும் தலைவர்களில் ஒருவரான நாவலருக்கே அதுதான் கதியென்றால், மற்றவர்களைப் பற்றி சொல்ல ஏதாவது இருக்கிறதா என்ன .....?

2014ல் ஜெ சிறைத் தண்டனை பெற்ற போது அவர் வழக்கில் வென்று மீண்டும் முதல்வராவதற்காக பிரார்த்தனையாக ஷேவ் செய்யாமல் தாடி வைத்திருந்தார் ஓபிஎஸ். ஜெ மீண்டும் முதல்வரானவுடன் தான் அவர் தாடியை ஷேவ் செய்தார். இந்த முறை தன்னுடைய சிக்கல் தீர அவர் எந்தக் கோயிலில் நேர்த்திக் கடன் செலுத்த தாடி வளர்க்கப் போகிறார் என்பது தெரியவில்லை.

English summary
Why former CM and present PWD Minister O Panneer Selvam has been sidelined in AIADMK? Here is a detailed analysis by columnist R Mani.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X