காபந்து சர்காரும், நாசமாகும் அரசு நிர்வாகமும்... தமிழக ஆளுநர் செய்வது சரிதானா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

- ஆர்.மணி

தமிழக முதலமைச்சராக சசிகலா எப்போது பதவியேற்பார் என்று இதுவரையில் உறுதியான தகவல்கள் ஏதுமில்லை. சசிகலா முதலமைச்சராக கண்டிப்பாக பதவி ஏற்றுக் கொள்ளுவாரா என்பதற்கும் இந்த நிமிடம் வரையில் எந்த உத்திரவாதமும் ஆளுநரிடம் இருந்து வரவில்லை.

பிப்ரவரி 5 ம் தேதி சசிகலாவை அஇஅதிமுக வின் சட்டமன்றக் குழுவின் புதிய தலைவராக அக்கட்சியின் 134 எம்எல்ஏ க்களும் தேர்ந்தெடுத்தனர். அன்று மாலையிலேயே தன்னுடைய ராஜினாமாவையும் ஓ பன்னீர்செல்வம் தமிழக பொறுப்பு ஆளுநர் சி வித்தியாசாகருக்கு அனுப்பி விட்டார். அடுத்த நாள் அந்த ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டதாகவும், மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் வரையில் பதவியில் தொடருமாறும் ஆளுநர் ஓபிஎஸ் ஸை கேட்டுக் கொண்டிருக்கிறார்.

Why the Governor avoids to come Chennai in this extraordinary political situation?

இன்று சசிகலா பதவியேற்றுக் கொள்ளுவார் என்று எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. எப்போது சசிகலா பதவியேற்றுக் கொள்ளுவார் என்பதற்கான எந்த தகவலும் இதுவரையில் ஆளுநரிடமிருந்தோ அல்லது சசிகலா தரப்பிடமிருந்தோ வரவில்லை.

இன்று தமிழகத்தில் நடந்து கொண்டிருப்பது ஒரு காபந்து சர்க்கார். ஆம். ஒரு பொறுப்பு அரசாங்கம். தன்னைத் தானே காபந்து முதலமைச்சராக மாற்றிக் கொண்ட பெருமையை ஓபிஎஸ் பெற்று விட்டார். நன்றாகவே போய்க் கொண்டிருந்த தமிழக அரசு நிர்வாகத்தை இன்று ஓபிஎஸ் ஸே முடக்கிப் போட்டு விட்டார். மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் வரையில் ஓபிஎஸ் முதலமைச்சராக தொடர வேண்டும் என்கிறார் ஆளுநர். எப்போது அந்த மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் என்பது பற்றி ஆளுநர் தரப்பிலிருந்தோ அல்லது மத்திய அரசிடமிருந்தோ எந்த விதமான பதிலும், விளக்கமும் இதுவரையில் இல்லை. தமிழ் நாட்டுக்கு இன்று ஆளுநராக இருப்பவர் பொறுப்பு ஆளுநர்தான். இவ்வளவு பெரிய மாநிலத்துக்கு ஒரு முழு நேர ஆளுநரை நியமிக்கக் கூட மோடி அரசால் முடியவில்லை என்றால் மத்திய அரசின் லட்சணம் என்னவென்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

இவ்வளவு பெரிய அரசியல் மாற்றம் வந்திருக்கிறது தமிழ் நாட்டில். எங்கே போனார் ஆளுநர்? நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மூன்று மணி நேரத்தில் தமிழ் நாட்டுக்குள் அவரால் வந்து விட முடியும். பிப்ரவரி 5 ம் தேதி ஊட்டியில்தான் இருந்திருக்கிறார் ஆளுநர். ஆனால் பதறியடித்துக் கொண்டு டில்லிக்கு ஒடியிருக்கிறார். இரண்டு நாட்கள் ஓடி விட்டன. ஆளுநர் சென்னைப் பக்கம் தலைகாட்டவில்லை. மாறாக சசிகலாவை முதலமைச்சராக பதவியேற்க அழைப்பது பற்றி சட்ட நிபுணர்களிடம் ஆளுநர் ஆலோசனை செய்வதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆளுநரின் இந்த நடவடிக்கை பற்றி விவரம் அறிந்தவர்கள் மத்தியில் கடும் விமர்சனம் எழுந்திருக்கிறது.

"ஒரு மாநிலத்தை ஆளும் கட்சி முறையாக மற்றோர் தலைவரை தேர்ந்தெடுத்தால் அவரை ஆட்சியமைக்க அழைப்பதுதான் ஆளுநரின் வேலை. அந்த குறிப்பிட்ட நபர் முதலமைச்சர் பதவிக்கு தேவையான அடிப்படை தகுதிகளைப் பெற்றிருக்கிறாரா என்பதை ஆளுநர் அறிய வேண்டும். அதற்கான அளவுகோல் இந்திய அரசியல் அமைப்பு சாசனம் வரையறுத்திருக்கும் அளவுகோல்கள் மட்டும்தான். இந்த விஷயத்தில் சசிகலாவை முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொள்ளும்படி அழைப்பதைத் தவிர ஆளுநருக்கு வேறு வழியில்லை. இதுதான் சட்டத்தின் நிலைப்பாடு. ஆனால் ஆளுநர் இதில் காலம் தாழ்த்துவது சரியானதாக எனக்குப் படவில்லை,'' என்று ஒன் இந்தியா விடம் கூறினார் மேற்கு வங்கத்தில் கூடுதல் தலைமை செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ஜி.பாலசந்திரன்.

தமிழக அரசு நிர்வாகம் இன்று கிட்டத்தட்ட முடங்கும் நிலைக்கு வந்து விட்டதாகத்தான் தலைமை செயலக வட்டாரங்கள் கூறுகின்றன. கடந்தாண்டு பட்ஜெட்டில் சொல்லப்பட்டவற்றில், அதாவது 2016 - 17 ம் ஆண்டு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட வேண்டிய பல முக்கியமான துறைகளுக்கு இரண்டாவது மற்றும் மூன்றாவது தவணை நிதி என்பது பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில்தான் ஒதுக்கப் படும். அது தற்போது சிக்கலாகிக் கொண்டிருப்பதாக சொல்லப்படுகின்றது.

"இது உண்மை. இந்த காலகட்டத்தில்தான் முக்கியமான துறைகளுக்கான அடுத்தடுத்த தவணை நிதி ஒதுக்கப் படும். இதற்கு அரசியல் தலைமையின் வழிகாட்டுதலும், ஆலோசனையும் முக்கியம். இங்கு நடப்பதோ தற்போது ஒரு காபந்து சர்கார் என்பதால் அந்த நிதி ஒதுக்கீடுகள் என்னவாகப் போகின்றன என்பது முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம்தான். அப்படியே நிதி ஒதுக்கப் பட்டாலும் அது போதியளவுக்கானதா என்பது கவனிக்கப் பட வேண்டியது. காரணம் நிதியின் அளவைக் கூட்டுவதும், குறைப்பதும் ஒரு மாநிலத்தை ஆளும் கட்சியின் அரசியல் நிலைப்பாடுகளுடன் சம்மந்தப்பட்டது. இங்கோ அரசியல் தலைமையே ஆட்டங் கண்டுகொண்டிருக்கும் போது நிதி ஒதுக்கீட்டிலும் அது பாதிப்பை ஏற்படுத்தும். இந்த நிச்சயமற்ற தன்மை தொடருவது தமிழகத்தின் வளர்ச்சியில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தலாம்," என்று மேலும் கூறுகிறார் பாலசந்திரன். புதிய பட்ஜெட் இன்னும் ஒரு மாதகாலத்தில் வரவேண்டும். அடிப்படையில் பட்ஜெட் என்பது வெறும் வரவு செலவு கணக்கு மட்டுமல்ல அது மாநிலத்தை ஆளும் கட்சியின் அரசியல் அறிவிக்கை, அதாவது, Political Statement என்று புரிந்து கொண்டால்தான் தற்போது தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கும் அரசியலின் முழுப் பரிமாணமும் நமக்கு புரிய வேண்டிய அளவுக்குப் புரியும்.

வழக்கமாக காபந்து சர்கார் என்பது ஒரு ஆளும் கட்சி மெஜாரிட்டி இழந்து, பிரதான எதிர்கட்சியால் உடனடியாக ஆட்சியமைக்க முடியாமல் போகும் சூழ்நிலையில்தான் மாநிலத்தை ஆளும். ஆனால் இங்கு நடப்பதோ வித்தியாசமானது. நன்றாக போய்க் கொண்டிருந்த ஒரு ஆட்சி தன்னைத் தானே காபந்து சர்காராக மாற்றிக் கொண்டிருக்கிறது. ஆனால் புதிய முதலமைச்சரும் உடனடியாக பதவியேற்க முடியவில்லை.

இந்த கேலிக் கூத்து ஒரு பக்கம் என்றால், மற்றோர் பக்கம், அரசியல் சாசனத்தை ஆளுநர் காலில் கீழ் போட்டு மிதித்துக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே கடந்தாண்டு உத்திரகண்ட் மற்றும் அருணாசலப் பிரதேச விவகாரங்களில் ஆளுநர்கள் நடந்து கொண்ட முறைக்காக உச்சநீதி மன்றம் கடுமையாகவே மோடி அரசை கண்டித்திருக்கிறது. ஆனாலும் மோடி அரசு பாடம் கற்றதாகத் தெரியவில்லை. இந்த இக்கட்டான நேரத்தில் தமிழ் நாட்டில் இருக்க வேண்டிய ஆளுநர் எதற்காக மாநிலத்துக்கு வெளியில் இருக்கிறார் என்பது அவருக்கும், மோடிக்கும் மட்டுமல்ல, ஒட்டு மொத்த தமிழகத்துக்கும் தெரிந்த ரகசியம்தான்.

ஒரு பக்கம் அமோக மக்கள் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்தும் தன்னைத் தானே சிறுமைப் படுத்திக் கொண்டு, காபந்து சர்காராக வலிய போய் தன்னை சுருக்கிக் கொண்டிருக்கும் ஒரு மாநில கட்சி ... மற்றொரு புறம், உச்ச நீதிமன்றம் பல முறை ஆளுநர்களின் அதிகாரங்கள் என்னவென்பதை தெளிவாக வரையறுத்தும், அதனைக் காற்றில் பறக்க விட்டு விட்டு வரம்பு மீறிக் கொண்டிருக்கும் ஆளுநர், மற்றோர் புறம் எத்தனை முறை உச்ச நீதிமன்றம் கண்டனங்கள் தெரிவித்தபோதும் அதிலிருந்து பாடம் கற்காமல், ஆளுநரைப் பின்னாலிருந்து இயக்கிக் கொண்டிருக்கும் மோடி அரசு.

பேய் அரசு செய்தால், பிணந் திண்ணும் சாத்திரங்கள் என்பது இதுதானோ!

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Why the Governor is not in Tamil Nadu state capital when the state is in extraordinary cpolitical situation? Here is Mani's analysis.
Please Wait while comments are loading...