சுபஸ்ரீ மரணம்.. தொடரும் ஈஷா மைய மர்மம்! முதலமைச்சரே சொல்லிட்டாரே! அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
தஞ்சாவூர்: ஈஷா யோகா மைய பயிற்சிக்கு சென்ற பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததை போன்று அண்ணாமலை போன்றவர்கள்பேசி வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்து இருக்கிறார்.
தஞ்சாவூரியில் கடந்த 1896 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட கட்டிடத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இயங்கி வந்தது. இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் புதிதாக கட்டப்பட்டு வேறு இடத்திற்கு சென்ற பிறகு, தற்போது அருங்காட்சியமாக மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.
ஸ்மார்ட் சிட்டி திட்டம் மற்றும் மாவட்ட சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் பத்து கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட கட்டிடத்தை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று திறந்து வைத்தார்.

அருங்காட்சியகத்தில் பறவைகள் சரணாலயம்
இந்த அருங்காட்சியகத்தில் மிகப்பெரிய பஞ்சவர்ண கிளிகள், சிங்கப்பூர் உள்ளிட்ட 20 நாடுகளைச் சேர்ந்த பறவைகளைக் கொண்ட சரணாலயம் அமைக்கப்பட்டு உள்ளது. சுற்றுலாப் பயணிகள் சரணாலயத்திற்குள் சென்று மிக அருகாமையில் பார்க்கக்கூடிய அளவில் கூண்டுகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.

பழங்கால பொருட்கள்
இதனை திறந்து வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ் அங்கிருந்த பஞ்சவர்ணகிளிகளுக்கு உணவு கொடுத்து மகிழ்ந்தனர். மேலும் பழங்கால ஏர் கலப்பை, நெல் அளக்கும் படிகள் உள்ளிட்ட பழங்கால மக்கள் பயன்படுத்திய அரிய வகை பொருட்கள், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை உள்ளிட்ட புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள் இடம்பெற்று உள்ளனர்.

காவிரியின் அழகு
அத்துடன் தலைக் காவிரியில் இருந்து புறப்பட்டு மேட்டூர் அணை, கல்லணை என தஞ்சை டெல்டா மாவட்டங்களை வளப்படுத்தும் காவிரி நீர் அழகாக பாய்ந்து வரும் தத்ரூபமான காட்சிகள் என குழந்தைகள், சிறுவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் பார்க்க கூடிய வகையில் பல்வேறு சிறப்புகளை இந்த அருங்காட்சியகம் உள்ளடக்கி உள்ளது.

அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், "டெல்டா மாவட்ட மக்களுக்கு பொங்கல் பரிசாக இந்த அருங்காட்சியகம் இன்று திறக்கப்படுகிறது. அனைவரும் பார்க்ககூடிய வகையில் அருங்காட்சியகத்தை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உருவாக்கி உள்ளார். வெளிநாடுகளை போல் நமது ஊர்களை பொதுமக்கள் தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும்." என்றார்.

ஈஷா யோகா மைய சர்ச்சை
ஈஷா மையத்தில் மர்மமான முறையில் பெண் ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், "நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் அதற்கான உரிய பதிலை அளித்து உள்ளார்கள். அண்ணாமலை போன்றவர்கள், தமிழ்நாடு அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததைபோல் பேசி வருகிறார்கள்.

பாகுபாடு இன்றி நடவடிக்கை
சட்டம் ஒழுங்கு பிரச்சனை வரும் போது எந்தக் கட்சி என்ற பாகுபாடு இல்லாமல் உடனடியாக தவறும் செய்யும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். சட்ட ஒழுங்கை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் இரும்பு கரம் கொண்டு ஒடுக்குவோம்." என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications