அரியலூர் மாணவி தற்கொலை.. சிஸ்டர்ஸ் முதல் மாணவிகள் வரை.. தேசிய குழந்தைகள் கமிஷன் தீவிர விசாரணை!
அரியலூர்: அரியலூர் மாணவி தற்கொலை தொடர்பாக தேசிய குழந்தைகள் கமிஷன் விசாரணை தொடங்கி நடந்து வருகிறது. பள்ளியை சேர்ந்த மாணவிகள், பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் ஆகியோரிடம் தேசிய குழந்தைகள் கமிஷன் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
Recommended Video
தஞ்சாவூரில் பள்ளி மாணவியின் தற்கொலை விவகாரம் தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கு உள்ள அரசு உதவி பெறும் ஒன்றின் ஹாஸ்டலில் தங்கி படித்து வந்த பிளஸ் 2 மாணவி பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஹாஸ்டலை சுத்தம் செய்ய சொல்லி வார்டன் சகாய மேரி தொல்லை கொடுத்ததால் அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பு தெரிவிக்கிறது. மேஜிஸ்டிரேட் முன் மாணவி கொடுத்த வாக்கு மூலத்திலும் இதே விஷயம்தான் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

மத மாற்றம்
ஆனால் அதே சமயம் பள்ளி ஆசிரியர்கள் சிலர் அந்த மாணவியை மத மாற்றம் செய்ய முயன்றதால் அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதாக ஒரு பக்கம் கூறப்படுகிறது. மத மாற்ற அழுத்தம் காரணமாக அரியலூர் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக பாஜக குற்றச்சாட்டு வைத்துள்ளது. இது தொடர்பாக மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு விசாரணை நடந்து முடிந்துள்ளது. சிபிசிஐடி விசாரணை கோரிய மாணவியின் பெற்றோர் மனுவில் இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அரியலூர் மாணவி தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி மதுரை ஹைகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இரண்டு வாதங்கள்
இந்த மரணம் தொடர்பாக இரண்டு விதமான வாதங்கள் வைக்கப்பட்டு வருகிறது. ஒன்று வார்டன் தொல்லை. இன்னொன்று மத ரீதியான அழுத்தம். ஆனால் அரியலூர் மாணவி தற்கொலை விவகாரத்தில் மைக்கேல்பட்டி கிராம மக்கள் மத ரீதியான பின்னணி எதுவும் இல்லை என்று அரியலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். எங்களை யாரும் மதம் மாற சொல்லவில்லை. பள்ளி நிர்வாகம் மதம் மாறச் சொன்னதாக பொய் சொல்லுமாறு சிலர் ஊருக்குள் வந்து மிரட்டுகின்றனர்.

மனு அளித்தனர்
கிராம மக்களின் ஒற்றுமையை சீர்குலைத்திட முயற்சி நடக்கிறது. அந்த சிலர் யார் என்று சொல்ல முடியாது என்று அந்த பகுதி கிராம மக்கள் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில் தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் தேசிய குழந்தைகள் ஆணையம் விசாரணை தொடங்கி உள்ளது. என்சிபிசிஆர் தலைவர் பிரியங்கா கனூப் விசாரணை தொடங்கி உள்ளார்.

விசாரணை
மைக்கேல்பட்டி கிராமத்திற்கு வந்த குழந்தைகள் ஆணையம் அங்கு கிராம மக்கள் இடையே விசாரணை நடத்தினர். கிராம மக்கள் விசாரணை அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்து உள்ளனர். தஞ்சாவூர் ரயில்வே நிலையத்தின் கெஸ்ட் ஹவுசில் தங்கி இருக்கும் அதிகாரிகளை சந்தித்து மைக்கேல்பட்டி கிராம மக்கள் வாக்குமூலம் அளித்து வருகிறார்கள். கிராம் மக்கள் சார்பாக குழுவாக அறிக்கை ஒன்றும் அளிக்கப்பட உள்ளது. இதையடுத்து பள்ளி நிர்வாகத்திடம் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு கமிஷன் விசாரணை நடத்தியது.

எங்கே நடக்கிறது?
பள்ளியில் , மாணவியரின் வருகை பதிவேடு, இதற்கு முன் படித்தவர்கள் மதம் மாறி உள்ளனரா, எத்தனை இந்துக்கள் படித்தனர் என்பது போன்ற விசாரணைகளை அதிகாரிகள் செய்தனர். அதோடு பள்ளியில் இருக்கும் கிறிஸ்துவ சிஸ்டர், ஆசிரியர்கள் ஆகியோரிடம் விசாரணை செய்யப்பட்டது. அதேபோல் மாணவியின் தோழிகளும் இன்று வாக்குமூலம் அளித்து உள்ளனர். மாணவியர் சார்பாக அறிக்கை ஒன்றும் இதில் விசாரணை அதிகாரிகளிடம் அளிக்கப்பட்டது.

போலீசார் விசாரணை
மாணவிக்கு பிரேத பரிசோதனை செய்தவர், மாணவியின் கடைசி வீடியோவை எடுத்தவர் ஆகியோரிடமும் இந்த விசாரணை நடத்தப்பட்டது. மாவட்ட எஸ்பி, பள்ளிகல்வித்துறை அதிகாரிகள் ஆகியோரும் இன்று அதிகாரிகள் முன்னிலையில் வாக்குமூலம் அளித்து உள்ளனர். இந்த விசாரணை இந்த வழக்கில் முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications