போச்சே.. தென்னக புள்ளியால் அப்செட்டில் தேனி தலைகள்.. ஓபிஎஸ் டீம் வீசும் வலை - அடடா.. காட்சி மாறுதே!
தேனி : ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனியில் இருந்து எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாளர்களாக மாறிய நிர்வாகிகள் தற்போது ஆர்.பி.உதயகுமார் மீது கடும் அப்செட்டில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
எடப்பாடி பழனிசாமி தரப்பு பொதுக்குழுவைக் கூட்டியபோது, தேனி மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலர் ஈபிஎஸ் அணிக்குத் தாவினர். ஓபிஎஸ் கோட்டையிலேயே ஈபிஎஸ் ஓட்டை போட்ட இந்த நிகழ்வு அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, தேனியில் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தை பிரமாண்டமாக நடத்தி தனது செல்வாக்கை நிரூபித்தார் ஈபிஎஸ்.
ஆனால், ஆர்.பி.உதயகுமாருக்கு துணையாக நின்று உதவிய தேனி தலைகளை ஆர்.பி.உதயகுமார் கண்டுகொள்ளாமல் இருந்து வருவதால், அவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கொடி நாட்டிய ஈபிஎஸ்
எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் இடையே மோதல் ஏற்பட்டபோது, பெரும்பாலானோர் ஈபிஎஸ் பக்கம் சென்றனர். அதிலும் குறிப்பாக, ஓ.பிஎஸ்ஸின் சொந்த மாவட்டமான தேனியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலர் ஈபிஎஸ் பக்கம் சென்றதுதான் பெரிய ஷாக்காக இருந்தது. ஓபிஎஸ்ஸின் சொந்த ஊரிலேயே அவரது செல்வாக்கைச் சரித்தது எடப்பாடி பழனிசாமிக்கு பூஸ்ட்டாக அமைந்தது.

டார்கெட் பன்னீர்
தேனி மாவட்டத்தில் இருந்து பல பொதுக்குழு உறுப்பினர்களையும், முக்கிய நிர்வாகிகளையும் ஈபிஎஸ் பக்கம் கொண்டு வருவதற்கான அசைன்மெண்ட்டை போட்டுக் கொடுத்தவர் ஆர்.பி.உதயகுமார். ஓபிஎஸ்ஸை டார்கெட் செய்யும் வேலையில் இறங்கிய உதயகுமார், தேனி மாவட்டத்தில் ஓபிஎஸ் மீது அதிருப்தியில் இருந்தவர்களை ஜக்கையன் மூலம் கூண்டோடு ஈபிஎஸ் பக்கம் நகர்த்தி வந்தார்.

பவர் காட்டிய உதயகுமார்
தென் மாவட்டங்களில் ஓபிஎஸ்ஸை பலவீனப்படுத்தும் வகையில், ஆர்பி உதயகுமாருக்கு கொம்பு சீவி, அவரை ‘எதிர்க்கட்சித் துணைத் தலைவர்' பதவிக்கும் அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி. ஓபிஎஸ் வகித்த பதவியையே கொடுத்ததால், முழுவேகத்தில் இறங்கிய உதயகுமார், ஓ.பன்னீர்செல்வத்தை தாக்குவது ஒன்றே குறி என்ற நோக்கில் நாள்தோறும் அம்புகளை வீசி வருகிறார்.

ஓபிஎஸ் கோட்டையில்
திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பிலான கண்டன ஆர்ப்பாட்டம் தேனியில் ஆர்பி உதயகுமார் தலைமையில் நடைபெறும் என அறிவித்திருந்தார் ஈபிஎஸ். தேனியில் தனது பவரைக் காட்டுவதற்கான சவால் என்பதால் வரிந்துகட்டி இறங்கினார் ஆர்பி உதயகுமார். தேனி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.பிக்கள் ஜக்கையன், பார்த்திபன், முக்கிய நிர்வாகிகளான கிருஷ்ணகுமார், முருக்கோடைராமர், சோலைராஜ் ஆகியோரே தேனியில் கூட்டம் திரட்டும் பொறுப்பைப் பார்த்துக்கொண்டனர்.

வாக்குறுதி
தேனி ஆர்ப்பாட்டத்திற்கு யார் அதிகமாக ஆட்களைத் திரட்டுகிறார்களோ அவர்களுக்கு மாவட்ட செயலாளர் பதவி என ஒரு தகவலைக் கசிய விட்டார் ஆர்பி.உதயகுமார். அவர்களும் முழுவீச்சில் பணியாற்றி ஆர்ப்பாட்டத்திற்கு பெரும் கூட்டத்தைத் திரட்டினர். ஓபிஎஸ் சொந்த மண்ணிலேயே எடப்பாடி தரப்புக்கு கூடிய இந்தக் கூட்டத்தால் மகிழ்ந்துபோன ஈபிஎஸ் உதயகுமாரை அழைத்துப் பாராட்டினார்.

அதிருப்தி
ஆனால், அதன்பிறகும், தங்கள் அணிக்கு வந்தவர்களுக்கு எந்தப் பதவியும் பெற்றுத்தர ஆர்பி.உதயகுமார் முயற்சிக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஈபிஎஸ்ஸிடம் சொல்லியிருக்கிறேன் என்று மட்டும் கூறி வந்தாராம். இதனால், அவர்கள் அதிருப்தியில் இருந்து வந்த நிலையில் தான் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வந்தது.

நம்பி வந்து மோசம்
இந்த தீர்ப்பின் மூலம் எடப்பாடி பழனிசாமி தரப்பு புதிதாக நியமித்த அனைவரின் பதவிகளுமே காலி ஆகியுள்ளது. இனி யார் பக்கம் கட்சி செல்லும் என்பதே பெரிய கேள்விக்குறி. ஆர்.பி.உதயகுமார் பேச்சை நம்பி, ஆதரவாளர்களைத் திரட்டி அணி மாற்றிவிட்டோம். நமக்கே பதவி எதுவும் இல்லாதபோது, நம்மை நம்பி வந்தவர்களுக்கு என்ன செய்வது என விக்கித்து நிற்கின்றனராம் தேனி தலைகள்.

நூல் விடும் ஓபிஎஸ் டீம்
இதையறிந்த ஓபிஎஸ் தரப்பு, தற்போது அவர்களை நோக்கி நூல் விட்டுப் பார்க்கிறதாம். குறிப்பாக, பொதுக்குழு உறுப்பினர்களை தங்கள் பக்கம் ஈர்க்கும் வகையில் ஓபிஎஸ் தரப்பினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனராம். ஆர்.பி.உதயகுமார் மீது அதிருப்தியில் இருப்பவர்கள், விரைவில் ஓபிஎஸ் பக்கம் சாயலாம் என்கிறார்கள் தேனி ர.ரக்கள்.












Click it and Unblock the Notifications