தேனி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கிழக்கே போகும் ரயில்..போடி சென்னை இடையே ஜிகு ஜிகு வண்டி.. தெற்கு ரயில்வேயின் சூப்பர் அறிவிப்பு

Google Oneindia Tamil News

தேனி: மதுரை மற்றும் தேனி மாவட்ட மக்களின் நீண்ட நாட்கள் கோரிக்கையாக இருந்த போடிநாயக்கனூர் முதல் சென்னை வரையிலான ரயில் சேவை பிப்ரவரி 19 முதல் தொடங்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. போடிநாயக்கனூரில் இருந்து சென்னைக்கு ரயில் சேவை தொடங்க உள்ளதற்கான அறிவிப்பை தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது தேனி மாவட்ட மக்களிடையே மகிழ்ச்சியை அதிகரித்துள்ளது.

Bodi - Chennai train services begins from Southern Railway announcement Full details

கம்பம், போடிமெட்டு, இடுக்கி பகுதிகளில் விளையக்கூடிய ஏலக்காய், மிளகு, பஞ்சு, மற்றும் மூலிகை பொருட்களை சந்தைப்படுத்துவதற்காக ஆங்கிலேயர் காலத்தில் 1928ம் ஆண்டு போடி - மதுரை இடையே குறுகிய பாதையில் ரயில் போக்குவரத்து துவக்கப்பட்டது. இந்த ரயில் மதுரையில் இருந்து தேனி செல்கையில் மேற்கேயும், தேனியில் இருந்து மதுரை வருகையில் கிழக்கேயும் பயணிக்கும்.

இந்த ரயிலை வைத்து தான் கிழக்கே போகும் ரயில் என்ற பெயரில் திரைப்படம் எடுத்தார் இயக்குனர் பாரதிராஜா. காலப்போக்கில் பயணிகள் ரயிலாக மாற்றப்பட்ட நிலையில் 1954ம் ஆண்டு குறுகிய பாதை - மீட்டர் கேஜ் ரயில் பாதையாக மாற்றப்பட்டது. பின்னர், மீட்டர் கேஜ் பாதையில் இருந்து அகல ரயில் பாதையாக மாற்றம் செய்வதற்காக கடந்த 2010ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதி ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அகல ரயில் பாதை திட்டப் பணிகள் தொடங்கி 12 ஆண்டுகளாக பணிகள் நடைபெற்று வந்தது. இருப்புப்பாதை அமைக்கும் பணிகள் தேனி வரை முடிவடைந்த நிலையில்,கடந்த ஆண்டு மே மாதம் 26 ஆம் தேதி முதல் தேனியில் இருந்து மதுரை வரையிலான பயணிகள் ரயில் சேவை தொடங்கப்பட்டது.

மீதமுள்ள தேனி போடி இடையிலான பணிகள் துரிதமாக நடைபெற்றது. அதன்படி, தேனி - போடி இடையிலான அகல ரயில் பாதை திட்டப் பணிகள் தொடர் வேகம் எடுக்க தொடங்கியது. தேனியில் இருந்து 15 கி.மீட்டர் தூரம் போடி வரை அகல ரயில் பாதை அமைக்கும் பணி, போடி ரயில் நிலையத்தில் நடைமேடை விரிவாக்கம் செய்யும் பணி, சிக்னல் பொருத்தும் பணி என பணிகள் நடைபெற்று முடிவடைந்தது.

ரயில் பாதை பணி நிறைவடைந்ததையொட்டி, டிசம்பர் மாதம் 29ஆம் தேதி போடியில் இருந்து தேனி வரை தென்னக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ஆய்வு செய்தார். அப்போது ரயில் என்ஜின் மற்றும் 3 பெட்டிகளுடன் 118 கி.மீட்டர் வேகத்தில் சோதனை ஓட்டம் நடந்தது.

இந்நிலையில், ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் போடி-மதுரை அகல ரயில்பாதையில் 80 கி.மீட்டர் வேகத்தில் ரயிலை இயக்கிக் கொள்ளலாம். ரயில் பாதையில் சில இடங்களில் கிளாம்புகள் சரி செய்ய வேண்டும். தங்கப்பாலம் என்ற இடத்தில் பொருத்தப்பட்டுள்ள பைப் லைன்களில் மாற்றம் செய்ய வேண்டும்.

ரயில் நிலையங்களில் பயணிகள் மற்றும் சரக்குகளை கையாள்வதற்கு போதிய ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இதனையடுத்து போடி-மதுரை இடையே ரயில்களை இயக்குவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று அந்தப் பணிகளும் முழுமையாக முடிவடைந்துள்ளது.

இந்த நிலையில் மதுரை முதல் போடி வரை ரயில் இயக்கவும், போடி - மதுரை ரயில் சேவையை விரிவக்கம் செய்து சென்னை வரை ரயில் இயக்க வேண்டும் என தேனி மற்றும் மதுரை மாவட்ட மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அந்த வகையில் தற்போது தேனி மற்றும் மதுரை மாவட்ட மக்களின் நீண்ட நாட்கள் கோரிக்கையாக இருந்த போடிநாயக்கனூர் முதல் சென்னை வரை ரயில் சேவை திட்ட பணிகள் தொடங்கப்படும் எனரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி மதுரை முதல் தேனி வரை ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில் மதுரை முதல் போடிநாயக்கனூர் வரை ரயில் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி 19ஆம் தேதி முதல் தினமும் காலை 8. 05 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு தேனிக்கு ரயில் 9.35 க்கு வந்தடையும். தேனியில் இருந்து 9:42 மணிக்கு கிளம்பும் ரயில் அங்கிருந்து போடிநாயக்கனூர் சென்றடைகிறது.

அதேபோல தினசரி மாலை 5.50 மணிக்கு போடியில் இருந்து கிளம்பும் ரயில் 6.15 மணிக்கு தேனி வந்தடையும். பின்னர் தேனியில் இருந்து புறப்பட்டு 06.34க்கு ஆண்டிப்பட்டி, 06.54 மணிக்கு உசிலம்பட்டி, 07.29 மணிக்கு வடபழஞ்சி வழியாக 07.50 மணிக்கு மதுரை ரயில் நிலையம் சென்றடையும் என ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதனிடையே வரும் பிப்ரவரி 19, 2023 முதல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சேலம், கரூர் வழியாக போடிநாயக்கனூருக்கு வாரம் மூன்று முறை அதாவது திங்கள், புதன் , வெள்ளி ஆகிய நாட்களிலும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட உள்ளது. அதேபோல மரு மார்க்கமாக போடிநாயக்கனூரில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வாரம் மூன்று முறை அதாவது ஞாயிறு , செவ்வாய் , வியாழன் ஆகிய நாட்களில் ஏற்கெனவே சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முதல் மதுரை வரை வாரம் மும்முறை இயக்கப்படும் ஒரு ரயிலானது போடி வரை நீட்டிக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Bodi - Chennai train services begins from Southern Railway announcement Full details

போடிநாயக்கனூர் (BDNK) - மதுரை (MDU) - சென்னை சென்ட்ரல் (MAS) எக்ஸ்பிரஸ் (20602) வாரம் மூன்று முறை இயக்கப்படுகிறது. அதாவது ஞாயிறு, செவ்வாய், வியாழன் மட்டும் நீக்கப்பட உள்ளது. இந்த ரயில் 20:30 போடிநாயக்கனூரில் கிளம்பி 20:50 தேனி, 21:10 ஆண்டிபட்டி, 21:30 உசிலம்பட்டி, 22:50 மதுரை, 23:55 திண்டுக்கல், 00:55 கரூர்,02:20 சேலம், 05:15 காட்பாடி,07:05 பெரம்பூர், 07:55 சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை சென்றடைகிறது

மறுமார்க்கமாக சென்னை சென்ட்ரல் - மதுரை - போடிநாயக்கனூர் எக்ஸ்பிரஸ் (20601) வாரம் மூன்று முறை அதாவது திங்கள், புதன், வெள்ளி மட்டும் இயக்கப்பட உள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 10.30 மணிக்கு கிளம்பும் ரயில் மறுநாள் காலை 7.10 மணிக்கு மதுரை வந்தடைகிறது. மதுரையிலிருந்து கிளம்பி 8.38க்கு தேனி வந்தடையும் எனவும் அங்கிருந்து கிளம்பி 9.35 மணிக்கு போடிநாயக்கனூர் வந்தடையும் என ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு போடிநாயக்கனூர் முதல் சென்னை வரை எக்ஸ்பிரஸ் இயக்கப்பட உள்ளதால் தேனி மற்றும் மதுரை மாவட்ட மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

English summary
The railway administration has announced that the train service project will be started from Bodhinayakanur to Chennai, which has been a long-standing demand of the people of Madurai and Theni districts.The railway administration has announced the start of train service from Bodhinayakanur to Chennai. Full details can be found now.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X