"டிரவுசர் கொள்ளையர்கள்".. எவ்வளவு "துணிவு" பாருங்களேன்.. தேனியை கதறவிடும் துணிகர திருடர்கள்!
தேனி: தேனியில் இரவு நேரத்தில் அடிக்கடி கொள்ளை சம்பவங்கள் நடப்பது தொடர்கதையாகியுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவோர் டிரவுசரை அணிந்துகொண்டு கொள்ளையடிப்பது சிசிடிவி கேமிராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வீடியோ தற்போது வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்னை தொடர்பாக அவ்வப்போது எதிர்க்கட்சிகள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தேனியில், கடந்த சில நாட்களாக பூட்டியிருக்கும் வீடுகளை குறிவைத்து இரவு வேளைகளில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக காவல் நிலையத்தில் ஏகப்பட்ட புகார்கள் குவிந்துள்ளன. காவல்துறையினரும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சூழலில் தற்போது வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
தேனியில் உள்ள வீடு ஒன்றில் கொள்ளையடிக்க திருடர் முயற்சித்துள்ளனர். இந்த காட்சிகள்தான் தற்போது வீடியோவாக வலம் வருகிறது. டிரவுசர் அணிந்த திருடர்கள் இருவர் வீட்டின் கேட்டை உடைக்க முயன்றுள்ளனர். இது வீட்டின் சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. நேற்றிரவு தேனியின் வேலாயுதபுரத்தில் உள்ள காமுத்தாய் வீட்டில் ரூ.25 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அதேபோல ராமசந்திரா புரத்தில் உள்ள மூன்று வீடுகளின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த திருடர்கள் வீட்டில் எதுவும் இல்லாததால் திரும்பி சென்றுள்ளனர்.
இதுபோன்ற தொடர் திருட்டு சம்பவங்கள் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல கடந்த 2019ல் டிரவுசர் திருடர்கள் குறித்து செய்திகள் அதிகம் வெளியாகியிருந்தன. வட மாவட்டங்களான காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இந்த திருடர்கள் செய்த சேட்டைகள் கொஞ்சம் நஞ்சமல்ல. இவர்களின் பெயரைக் கேட்டாலே இப்பகுதி மக்கள் அஞ்சி நடுங்குவார்கள்.
ஆனால் ஒருநாள் ஒரு சாதாரண வழக்கில் இவர்கள் சிக்கிவிட்டனர். காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டபோது, சில அதிர்ச்சி தகவல்களை தெரிவித்தனர். அதாவது இவர்கள் வழக்கமாக காய்கறி விற்பது, கத்திக்கு சானை பிடிப்பது உள்ளிட்ட தொழில்களை செய்து திருட உள்ள இடங்களை நோட்டம் விடுவார்கள். பின்னர் இரவில் டவுசர்களை மட்டும் அணிந்துகொண்டு உடல் முழுவதும் எண்ணெய் பூசிக்கொண்டு திருட்டு தொழிலை செய்வது வழக்கம்.
மற்ற நாட்களில் கிராமங்களில் உள்ள குடிசை வீடுகளில் பன்றி மேய்த்துக்கொண்டு மிகச்சாதாரணமாக இருப்பார்கள். ஆனால் பெங்களூரில் இவர்களுக்கு என சொகுசு வீடுகள் உள்ளன. எனவே கொள்ளையர்கள் இந்த குரூப்பை சேர்ந்தவர்களா என்பதில் சந்தேகம் நீடிப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications