அண்ணாமலை பார்ட் 2 தாங்க ஆளுநர் ரவி.. யாரை கேட்டாலும் சொல்வாங்க.. துரை வைகோ காட்டம்!
தென்காசி : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் பார்ட் 2 ஆகவே செயல்படுகிறார் என மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ விமர்சித்துள்ளார்.
மேலும், மதிமுக பொதுச் செயலாளர் உடல்நிலை குறித்துப் பேசிய அவர், வைகோ உள்ளத்திலும் உடலளவிலும் நல்ல ஆரோக்கியமாக இருக்கிறார். அவருக்கு எந்த குறைபாடும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
சங்கரன்கோவில் சங்கர நாராயணசாமி திருக்கோவிலில் மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ சாமி தரிசனம் செய்தார். அப்போது பல்வேறு தரப்பினரும் அவரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அந்தக் கோரிக்கைகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவை நேரில் சந்தித்து கொடுத்தார் துரை வைகோ. இதையடுத்து, சங்கரன்கோவிலுக்கு வந்து கோரிக்கை அளித்தவர்களிடம் தகவலைப் பகிர்ந்து கொண்டார் துரை வைகோ.

அமைச்சரை சந்தித்த துரை வைகோ
செய்தியாளர்களைச் சந்தித்த துரை வைகோ, "பக்தர்கள் கொடுத்த கோரிக்கைகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் கொடுத்தேன். அதனைப் பெற்றுக் கொண்ட அமைச்சர் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்தார். அதை மனு கொடுத்தவர்களிடம் தெரிவிப்பதற்காக வந்திருக்கிறேன். சங்கரநாராயண சுவாமி கோவிலில் 1000வது ஆண்டு விழா நடத்தப்படும் என உறுதி அளித்திருக்கிறார் அமைச்சர்.

சங்கரன்கோவிலில்
விரைவாக குடமுழுக்கு பணிகளை துவங்கிட துரித நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். அடிப்படை வசதிகள் கழிப்பிட வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் எனக் கூறியுள்ளார். கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அமைச்சர் உறுதி அளித்த தகவலை பட்டர்கள், பக்தர்கள், ஊழியர்கள், மண்டகப்படிதாரர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளேன்." எனத் தெரிவித்தார்.

அண்ணாமலை பார்ட் 2
மேலும் பேசிய துரை வைகோ, "தமிழக சட்டமன்ற சபாநாயகர் எல்லா மதத்திற்கும் இணக்கமாகச் செல்லக்கூடிய நபர். ஆளுநரைப் பொறுத்தவரை யாரை கேட்டாலும் சொல்வார்கள். ஆர்.என்.ரவி தமிழக ஆளுநராகச் செயல்படவில்லை, பாஜகவின் ஊதுகுழலாகவே செயல்படுகிறார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பார்ட் 2 வாகவே தமிழக ஆளுநர் செயல்பட்டு வருகிறார்." என விமர்சித்தார்.

வாட்ச் கம்பெனிக்கு பால காண்ட்ராக்ட்
தொடர்ந்து பேசிய அவர், "குஜராத் பால விபத்தில் உயிரிழந்த 135 பேரில் 56 குழந்தைகள் இறந்துள்ளனர். பாலம் காண்ட்ராக்ட்டை பொறுத்தவரையில் தனியாருக்கு வழங்கியுள்ளனர். பராமரிப்பு முடிந்து மூன்று நாட்களுக்கு பின் இந்த விபத்து நடந்துள்ளது. அந்த கம்பெனி அஜந்தா வாட்ச் கம்பெனி. கடிகாரம், ஃபேன் தயாரிக்கக்கூடிய, பாலங்களை பராமரிக்கும் அனுபவம் இல்லாத கம்பெனியிடம் இந்த வேலையை கொடுத்துள்ளார்கள். இது மிகத் தவறானது. பாஜக ஆளும் குஜராத் அரசாங்கத்தின் அஜாக்கிரதையால் நடந்த விபத்து" எனத் தெரிவித்தார்.