அன்று செருப்பை தலையில் வைத்தவர்கள்.. இன்று மேயராக்கப்பட்டுள்ளனர்.. லியோனி சர்ச்சை பேச்சு
திருவள்ளூர்: செருப்பை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு இருந்த சமுதாயத்தை சேர்ந்தவரை மேயராக்கி 'வணக்கத்திற்குரிய மேயர்' என்று அழைக்க செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திராவிட புரட்சியை செய்துவிட்டதாக திமுக தலைமைக்கழக கொள்கை பரப்புச் செயலாளர் திண்டுக்கல் ஐ.லியோனி தெரிவித்துள்ளார்.
பொன்னேரியில் திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் கோவிந்தராஜன் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.
பேரறிவாளன் விடுதலை ரொம்ப தப்பு.. இதனால் திமுக-காங். கூட்டணியில் விரிசலா? திருநாவுக்கரசர் விளக்கம்

லியோனி பேச்சு
இதில் பட்டிமன்ற பேச்சாளரும் தமிழ்நாடு பாடநூல் கழக கல்வியியல் பணிகள் தலைவரும், திமுக தலைமைக்கழக கொள்கை பரப்புச் செயலாளருமான திண்டுக்கல் லியோனி கலந்துகொண்டார். இந்த கூட்டத்தில் பேசிய அவர், பெண்கள் என்றாலே அரட்டை அடித்துக்கொண்டு இருப்பவர்கள் என்ற நிலையை மாற்றி அவர்களுக்கும் ஓட்டு உரிமையை வாங்கித் தந்தது நீதிக் கட்சி என்றார்."

பெண்களுக்கு சொத்துரிமை
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிதான் பெண்களுக்கு சொத்துரிமை பெற்றுத் தந்தவர். அரசியலில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீட்டை வழங்கியவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தங்கள் பாடல்களின் மூலம் பெண் விடுதலைக்காக குரல் கொடுத்த பாரதியார், பாரதிதாசன் வழியில் மு.க.ஸ்டாலின் ஆட்சி செய்து வருகிறார்.

திராவிட புரட்சி
ஒரு காலத்தில் செருப்பை தலையில் தூக்கிக் கொண்டு இருந்த சமுதாயத்தை சேர்ந்தவரை இன்று வணக்கத்திற்கு உரிய மாண்புமிகு மேயர் அவர்களே என்று அழைக்க வைத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திராவிட புரட்சியை ஏற்படுத்தி இருக்கிறார். செங்கோட்டை அருகே டெல்லியில் அறிவாலயத்தை நிறுவியவர் மு.க.ஸ்டாலின்.

ஸ்டாலின் கைகாட்டும் நபரே பிரதமர்
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்டாலின் கை காட்டும் நபரே பிரதமராவார் என்பதற்கு இதுவே ஒரு எடுத்துக்காட்டு. இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம், பெண்களுக்கு சம உரிமை என்று பல்வேறு சாதனைகளை படைத்து மக்கள் நலத் திட்டங்களை திராவிட மாடல் ஆட்சி வழங்கிக்கொண்டு இருக்கிறது.