இந்திக்கு எதிரான போராட்டம் தொடரும்.. பிற மொழிகளை அழிக்க பாஜக முயற்சி.. மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!
இந்தி மொழியை வைத்து பிற மொழிகளை பாஜக அழிக்க பார்ப்பதாக முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
திருவள்ளூர்: ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழியை வைத்து பிற மொழிகளை பாஜக அழிக்க பார்ப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இந்தி மொழியை திணிப்பதை தனது வழக்கமாக பாஜக கொண்டுள்ளதாகவும், இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்தார்.
இந்தித் திணிப்புக்கு எதிராகத் தமிழ்நாட்டில் நடந்த 1965-ஆம் ஆண்டு மாபெரும் போராட்டம் வெடித்தது. பல உயிர்களை பலி கொண்ட அந்தப் போராட்டம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி திமுக அரியணை ஏற இந்தப் போராட்டம் திருப்புமுனையாக அமைந்தது.
இந்தி திணிப்பை எதிர்த்து, தமிழ் மொழியைக் காக்க உயிர் நீத்த தியாகிகளின் நினைவாக இன்று மொழிப்போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தி திணிப்பு போராட்டங்களில் பங்கேற்று உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு ஆண்டுதோறும் ஜனவரி 25ம் தேதி திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் வீர வணக்கம் செலுத்துவது வழக்கம்.

முக ஸ்டாலின் பேச்சு
அந்தவகையில் இன்று திருவள்ளூரில் திமுக சார்பாக மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டுள்ளார். இந்தக் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ஒவ்வொரு தமிழரும் நினைவு பெறக் கூடிய நாள்தான் இந்த வீரவணக்க நாள். தமிழுக்காக உயிர் நீத்தவர்கள் தான் மொழிப்போர் தியாகிகள். வீழ்ச்சியுற்று கிடந்த தமிழ்நாடு பகுத்தறிவு கருத்தால் உணர்ச்சி பெற்று வீறு கொண்டு எழுந்த வீர வரலாற்றை நினைவு கூரும் நாள்.

வீரவணக்க நாள்
ஆங்கில ஆட்சியின் பிடியில் இருந்து நாம் விடுதலை பெறுவதற்கு முன்பாகவே இந்திய ஆதிக்கத்தை நிறுவ முயன்றவர்களை எதிர்த்து தமிழ் காக்க தங்கள் உயிரையும் துச்சமாக நினைத்து உயிரை விலையென கொடுத்த வீரமறவர்களுக்கு வீர வணக்கம் செலுத்துகிற நாள் இந்த நாள். இருமொழிக் கொள்கைகளுக்கு காரணமான மொழிப்போர் தியாகிகளை 50 ஆண்டுகள் கடந்தும் நினைவுகூர்கிறோம். தமிழ்நாடு இதுவரை பல்வேறு மொழிப்போர் களங்களை சந்தித்திருக்கிறது.

மொழிப்போர்
1938 முதல் 1940 வரை முதல் களம். 1948 முதல் 1950 இரண்டாம் களம், 1953 முதல் 1956 வரை மூன்றாம் களம், 1959 முதல் 1961 வரை நான்காம் களம், 1986 ஐந்தாம் களம் இந்த தியாக வரலாற்றை மீண்டும் மீண்டும் சொல்வது நமது தமிழர் இனம் தாழ்ந்துவிட கூடாது என்பதற்காக தான். ஒரு நல்ல காரியத்திற்காகவும் நாட்டிற்காகவும் வாழ்ந்து தமிழுக்காக உயிரீந்தவர்கள் தான் இந்த மொழிப்போர் தியாகிகள். தங்களின் தேக்கு மர தேகத்தை தீயால் எரித்து கொண்டவர்கள் தான் மொழிப்போர் தியாகிகள்.

பாஜகவின் முயற்சி
மொழிப்போர் தியாகிகள் படங்களாக இருந்து நம்மை வழிநடத்தி கொண்டிருக்கிறார்கள். உலகம் முழுவதும் தமிழ்நாட்டு இளைஞர்கள் வலம் வர இருமொழி கொள்கையே காரணம். ஆனால் ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழியை வைத்து பிற மொழிகளை பாஜக அழிக்க பார்க்கிறது. இந்தி மொழியை திணிப்பதை தனது வழக்கமாக பாஜக கொண்டுள்ளது. திமுக தோன்றியது முதலே மொழி காப்பு இயக்கமாக இருந்து வருகிறது. தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் விரோதமான சக்திகள் யாராக இருந்தாலும், தேர்தல் களத்தில் மட்டுமல்ல, அரசியல் களத்திலும் தோற்கடிக்கப்பட வேண்டும்.

தமிழ்நாடு வாழ்க
தமிழில் வணக்கம் சொல்வதன் மூலமாகவும், திருக்குறளையும் பாரதியாரையும் மேற்கோள் காட்டுவதன் மூலமாகவும் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற நினைக்க கூடாது. இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் தொடரும். தமிழை காக்கும் முயற்சிகளும் தொடரும். இந்தியை திணித்து ஆங்கிலத்தை மொத்தமாக அகற்ற பார்க்கிறார்கள். தமிழ் மொழி இந்திய அரசின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக ஏற்கப்பட வேண்டும். சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழை கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்தார். இறுதியாக தமிழ்நாடு வாழ்க என்று கூறி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது உரையை நிறைவு செய்தார்.












Click it and Unblock the Notifications