லட்டுக்குள் கிடந்த குட்கா கவர், சிகரட் துண்டு! அதிரவைத்த வீடியோ! திருப்பதி லட்டுக்கு என்னதான் ஆச்சு?
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரசாதமான லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாட்டுக் கொழுப்பு கலந்திருந்ததாக எழுந்த சர்ச்சை ஓய்வதற்குள் அடுத்த சர்ச்சை வெடித்துள்ளது. திருப்பதி லட்டுவில் குட்கா பாக்கெட் இருந்ததாக பெண் பக்தர் ஒருவர் வீடியோ வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பதி என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருவது ஏழுமலையானும், லட்டும் தான். இந்த லட்டு தான் கடந்த சில நாட்களாக உலகெங்கிலும் உள்ள வெங்கடாசலபதி பக்தர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. லட்டு தொடர்பாக எழுந்த சர்ச்சை நாட்டையே உலுக்கி உள்ளது.

லட்டு நெய்யில் விலங்கு கொழுப்பு: ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில், முந்தைய ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில், விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக தற்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்தக் குற்றச்சாட்டு, குஜராத்தில் உள்ள தேசிய பால்வள மேம்பாடு வாரியத்தின் கீழ் இயங்கும் ஆய்வகம் நடத்திய ஆய்வில் உறுதி செய்யப்பட்டது.
அந்த ஆய்வு அறிக்கையில், திருப்பதி லட்டு தயாரிக்க பயன்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலந்திருந்தது உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. திருப்பதி லட்டு செய்ய பயன்படுத்திய நெய்யில் மாட்டுக் கொழுப்பு, பன்றிக் கொழுப்பு, மீன் எண்ணெய் இருந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. லட்டு தயாரிக்க நெய் அனுப்பிய திண்டுக்கல் நிறுவனத்தை திருப்பதி தேவஸ்தான போர்டு பிளாக் லிஸ்ட்டில் வைத்துள்ளது.
மிகப்பெரிய சர்ச்சை: இது குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை ஆந்திர மாநில அரசு அமைத்துள்ளது. தற்போது திருப்பதி வெங்கடாசலபதி கோவில் லட்டு பிரசாதம் தயாரிக்க தேவையான நெய்யை கர்நாடக அரசு நிறுவனமான நந்தினி நிறுவனத்திடம் இருந்து திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் கொள்முதல் செய்து வருகிறது.
விலங்குகளின் கொழுப்பைக் கொண்டு லட்டு தயாரிக்கப்பட்டதாக ஆய்வில் தெரியவந்த நிலையில் திருப்பதி கோவிலில் லட்டு தயாரிக்கும் இடங்கள், லட்டு விற்கும் பகுதி உள்ளிட்ட கோவிலின் சில பகுதிகளில் சாந்தி ஹோமம் நடைபெற்றது. கோயில் மீண்டும் தூய்மையாகிவிட்டதாகக் கூறிய அர்ச்சகர்கள், பக்தர்களை தயக்கமின்றி கோயிலுக்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளனர்.
It's really heartbreaking to see the affairs of Tirumala Tirupati Sri Venkateswara Swamy Temple 💔
— Karnataka Weather (@Bnglrweatherman) September 23, 2024
Amber (Tobacco/Gutka) cover is found in Tirumala Laddu Prasada of a devotee
Recently a few friends of mine who had travelled to the temple for darshan have found cigarette buds… pic.twitter.com/Lobqh8S3U9
மீண்டும் இன்னொரு சர்ச்சை: இந்நிலையில் திருப்பதி லட்டு தற்போது மற்றொரு சர்ச்சையில் சிக்கியுள்ளது. தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் கொல்லகூடேம் பகுதியைச் சேர்ந்த பத்மாவதி என்பவர் அண்மையில் திருப்பதி கோவிலுக்குச் சென்று அங்கு வாங்கிய லட்டுவில் குட்கா பாக்கெட் இருந்ததாக வீடியோ வெளியிட்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
லட்டுக்குள் குட்கா கவர்: பத்மாவதி, தனது உறவினர்களுடன் அண்மையில் திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்துவிட்டு லட்டு பிரசாதம் வாங்கிவிட்டு ஊருக்குத் திரும்பி உள்ளார். திருப்பதி கோவில் பிரசாதத்தை தனது உறவினர்களுக்கு விநியோகிக்க, அதனை பிட்டபோது, லட்டு ஒன்றில் குட்கா பாக்கெட் மற்றும் சிகரெட் துண்டு இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதையடுத்து, இதனை வீடியோவாக பதிவு செய்த அவர், அதனை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ திருப்பதி ஏழுமலையான் பக்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த புகார் குறித்து விசாரிக்க திருப்பதி தேவஸ்தான குழுவினர், கொல்லகூடேம் கிராமத்திற்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications