இதை பாருங்க! சந்தானம் பாடலை எடப்பாடிக்கு காட்டிய ஜனசேனா கட்சியினர்.. திருப்பதியில் வைத்த கோரிக்கை
திருப்பதி: அதிமுக பொதுச்செயலாலர் எடப்பாடி பழனிசாமி நேற்று திருப்பதிக்கு வந்திருந்த நிலையில் அவரை, ஆந்திராவின் ஜனசேனா கட்சி நிர்வாகிகள் சந்தித்தனர். அப்போது அவரிடம் சந்தானத்தின் பாடல் ஒன்றை மடிக்கணினியில் போட்டு காண்பித்து, இந்த பாடலை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். 'கிஸ்ஸா 47' பாடலில் கோவிந்தா கோவிந்தா என்ற வரிகள் இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்துவதாக கூறி இந்த கோரிக்கையை வைத்தனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது பிறந்த நாளை கடந்த 12 ஆம் தேதி கொண்டாடினார். போர் சூழல் நிலவுவதால் தனது பிறந்த நாளை பிரமாண்டமாக கொண்டாட வேண்டாம் என கட்சியினருக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தினார். இதன்படி, தமிழகம் முழுவதும் அதிமுகவினர் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கியும் ரத்த தானங்களை அதிமுகவினர் செய்தனர்.

திருப்பதியில் எடப்பாடி
பிறந்த நாள் முடிந்த கையோடு எடப்பாடி பழனிசாமி நேற்று திருப்பதி திருமலைக்கு பயணம் மேற்கொண்டார். தனது மனைவி மகன், பேரன் என குடும்பத்தினருடன் திருப்பதி சென்ற எடப்பாடி பழனிசாமி இன்று ஏழுமலையான தரிசிக்க உள்ளார். இதற்கிடையே, திருப்பதி சென்ற எடப்பாடி பழனிசாமியை சந்தித்த ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் கட்சியான ஜனசேனாவின் நிர்வாகிகள், கோரிக்கை ஒன்றை வைத்தனர்.
கவனமாக வீடியோவை பார்த்த எடப்பாடி
அதாவது, சந்தானம் நடிப்பில் வரும் வெள்ளிக்கிழமை ரிலீசாக உள்ள படமான டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் உள்ள பாடலில் இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக உள்ளதாகவும் அப்படத்தை தடை செய்யவோ அல்லது படத்தில் இருந்து பாடலை நீக்கவோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜனசேனா கட்சியினர் கோரிக்கை வைத்தனர். 'கிஸ்ஸா 47' பாடலில் கோவிந்தா கோவிந்தா என்ற வரிகள் இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்துவதாக கூறி இந்த கோரிக்கையை வைத்தனர்.

அப்போது, எடப்பாடி பழனிசாமியிடம் லேப்டாப்பில் அந்த பாடலை ஒளிபரப்பு செய்தும் காட்டினர். இதைக் எடப்பாடி பழனிசாமியும் கவனமுடன் கேட்டுக்கொண்டார். திரைப்பட தயாரிப்பாளர் மீது திருமலை காவல் நிலையத்தில் ஜனசேனா கட்சியினர் புகார் செய்துள்ளனர்.
பாடலில் என்ன சர்ச்சை?
ஆர்யா தயாரிப்பில் சந்தானம் நடித்து இருக்கும் படம் டிடி நெக்ஸ்ட் லெவல். இந்த படம் நாளை மறுநாள் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தில் கவுதம் மேனன், யாஷிகா ஆனந்த் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் கோவிந்தா கோவிந்தா என்ற பின்னணி வரிகளுடன் கூடிய கிஸ்ஸா 47' பாடல் அண்மையில் வெளியானது. இந்த பாடல் வரிகள் இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்துவதாக சர்ச்சை எழுந்தது.

இணையத்தில் வைரலான இந்த பாடலில் இடம் பெற்று இருக்கும் கோவிந்தா கோவிந்தா என்னும் வார்த்தைகள் பெருமாள் பக்தி பாடல்களில் இடம் பெறக்கூடியது எனவும், இதை தவறாக பயன்படுத்தி, இந்து மக்களின் உணர்வுகளையும் புண்படுத்தியிருப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்த பாடலை தடை செய்ய வேண்டும் என்று பாஜக சார்பாகவும் காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
கிண்டல் செய்ய மாட்டேன்
ஆனால் இந்த பாடல் தொடர்பான விமர்சனங்களுக்கு பதிலளித்த நடிகர் சந்தானம், கோவிந்தா பாடல் கடவுளை கிண்டல் செய்வது இல்லை எனவும், நீதிமன்றம் சொல்வதையும் தணிக்கை குழு சொல்வதையும் தான் சினிமாவில் செய்ய முடியும். வருகிறவர்கள். போறவர்கள் சொல்வதை எல்லாம் கேட்டு எதையும் செய்ய முடியாது. நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன். கடவுளை கிண்டல் செய்ய மாட்டேன்" என்று விளக்கம் அளித்து இருக்கிறார்.













Click it and Unblock the Notifications