'துரோகி.. துரோகி' சுற்றி வளைத்த அதிமுக.. காரில் இருந்து வெளியில் கூட வராமல் புறப்பட்ட 5 அமைச்சர்கள்!
திருப்பூர்: தாராபுரம் தொகுதியில் தவெக வேட்பாளர் சத்தியபாமா, அமைச்சர்கள் செங்கோட்டையன், அருண்ராஜ், பர்வேஸ், பிரபு ஆகியோரின் வாகனங்களை முற்றுகையிட்டு அதிமுகவினர் துரோகி.. துரோகி என்று தொடர்ச்சியாக கோஷமிட்டனர். இதனால் காரில் இருந்து யாருமே நீண்ட நேரமாக வெளியில் வரவில்லை. ஒரு கட்டத்தில் தவெக மற்றும் அதிமுக இடையில் மோதல் ஏற்பட்டதால், பிரச்சாரம் செய்யாமல் அமைச்சர்கள் புறப்பட்டு சென்றனர்.
தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6ஆம் தேதி நடக்கவுள்ளது. சட்டசபைத் தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட்டு இந்த இரு தொகுதிகளிலும் மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா இருவரும் வென்றனர். இவர்கள் இருவரும் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அப்படியே தவெகவில் ஐக்கியமாகினர்.

தற்போது இடைத்தேர்தலில் இவர்கள் இருவரும் தவெக வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளனர். இதனால் தவெக வேட்பாளர்களுக்கு அந்தந்த தொகுதிகளில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக தாராபுரம் வேட்பாளர் சத்தியபாமா வாக்கு கேட்டு செல்லும் இடங்களில் எல்லாம் பொதுமக்களும், அதிமுகவினரும் கடுமையாக எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.
ஒரு கட்டத்தில் உடல்நிலை மோசமாக இருப்பதாக கூறி சத்தியபாமா வீட்டிலேயே உட்கார்ந்துவிட்டார். இதனால் தாராபுரம் தொகுதி பொறுப்பாளர்களாக கூடுதல் அமைச்சர்களையும், நிர்வாகிகளையும் தவெக களமிறக்கி இருக்கிறது. இந்த நிலையில் இன்று தாராபுரம் தொகுதியில் பொட்டிக்கம்பாளையத்தில் வாக்கு சேகரிக்க வந்தனர்.
வேட்பாளர் சத்தியபாமா, அமைச்சர்கள் செங்கோட்டையன், அருண்ராஜ், பர்வேஸ், பிரபு ஆகியோர் காரில் வந்த போது, அதிமுகவினர் திடீரென வாகனங்களை முற்றுகையிட்டனர். அப்போது அதிமுகவினர் துரோகி.. துரோகி என்று தொடர்ச்சியாக கோஷம் எழுப்பினர். இதனால் தவெக மற்றும் அதிமுக இடையில் கடுமையான மோதல் ஏற்பட்டது.
இவர்களை கட்டுக்குள் கொண்டு வரவே போலீசார் திணறினர். அப்போது வரை அமைச்சர்கள் யாருமே காரில் இருந்து வெளியில் வரவில்லை. நீண்ட நேரமாக வேட்பாளரும், அமைச்சர்களும் காத்திருந்த போதும் கூட, அதிமுகவினரை அப்புறப்படுத்த முடியவில்லை. இதனால் பிரச்சாரத்தை ரத்து செய்துவிட்டு 5 அமைச்சர்களும் அங்கிருந்து புறப்பட்டனர்.


Click it and Unblock the Notifications
