திருச்சி அருகே விபத்து.. லாரி மீது கார் மோதல்.. பத்திரிக்கையாளர் உள்பட 2 பேர் உயிரிழப்பு!
திருச்சி: திருச்சி அருகே சாலையோரம் பழுதாகி நின்றுக்கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் பத்திரிக்கையாளர் உள்பட இருவர் உயிரிழந்தனர். மேலும் காயம் அடைந்த இரண்டு பத்திரிகையாளர் உள்ளிட்ட 3 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தஞ்சாவூரில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் வாடிப்பட்டிக்கு ரஸ்க் ஏற்றி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை ஆவாரம்பட்டி அருகே சென்றுக்கொண்டிருந்தபோது லாரியின் டயர் திடீரென பஞ்சாராகி சாலையோரம் நிறுத்தப்பட்டது.

லாரி மீது மோதி விபத்து
அந்த வேளையில் தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியினை சேர்ந்த மூன்று பத்திரிகையாளர்கள் திருச்சியில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சங்க விருது வழங்கும் விழாவிற்கு சென்றுவிட்டு தனது இரு நண்பர்களுடன்காரில் திரும்பிக்கொண்டிருந்தனர். ஆவாரம்பட்டி பிரிவு அருகே வந்தபோது ஏற்கனவே பழுதாகி நின்றுக்கொண்டிருந்த லாரியின் மீது கார் எதிர்பாராதவிதமாக மோதியது.

இரண்டு பத்திரிகையாளர்கள் உயிரிழப்பு
இதில் காரில் பயணித்த பத்திரிகையாளர் முகமது அஸ்லாம், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் அன்னக்கொடிமாயன் ஆகியோர் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களுடன் காரில் இருந்த பத்திரிகையாளர்கள் வேல்முருகன், சிவக்குமார் மற்றும் கார் ஒட்டுனர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் படுகாயமடைந்தனர்.

3 பேர் காயம்
இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முகமது அஸ்லாம், அன்னக்கொடிமாயன் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

லாரி டிரைவரிடம் விசாரணை
இந்த விபத்து குறித்து வையம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பழுதாகி நின்ற லாரியின் டிரைவர் அழகப்பா என்பவரை நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கோண்டு வருகின்றனர். இந்த விபத்தால் திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications