"கோயில் கோபுரம்!" ஒவ்வொரு வாயிலிலும் பாரம்பரியத்தின் டச்.. பிரம்மாண்டமாக நிற்கும் திருச்சி ஏர்போர்ட்
திருச்சி: அனைவரையும் வியக்க வைக்கும் வகையில் மிகப் பிரம்மாண்டமாக ரெடியாகி இருக்கிறது திருச்சி ஏர்போர்ட். இது குறித்த படங்கள் இணையத்தில் அனைவரையும் வியக்க வைக்கிறது.
இந்தியாவில் அதிக ஏர்போர்ட்களை கொண்ட மாநிலங்களில் ஒன்று தமிழ்நாடு. இங்கே விமானத்தில் செல்வோரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதே இந்தளவுக்கு ஏர்போர்ட்கள் வரக் காரணமாக இருக்கிறது.

அதன்படி தமிழ்நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது திருச்சி ஏர்போர்ட். திருச்சி மத்திய பகுதியில் இருந்து வெறும் 5 கிமீ தொலைவில் திருச்சி- புதுக்கோட்டைத் தேசிய நெடுஞ்சாலையில் இது அமைந்துள்ளது
திருச்சி ஏர்போர்ட்: 702 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள திருச்சி ஏர்போர்ட் 1372 மீட்டர் நீளமுள்ள குறுகிய ஓடுபாதையைக் கொண்டுள்ளது. இந்தியாவின் மிகச்சிறிய விமான நிலையங்களில் இதுவும் ஒன்று. கடந்த 2012ஆம் ஆண்டு திருச்சி ஏர்போர்ட் சர்வதேச விமான நிலையமாகத் தரம் உயர்த்தப்பட்டது. மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையம் இந்த ஏர்போர்ட்டை பராமரித்து வருகிறது.
இங்கிருந்து உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகள், தாய்லாந்து, நாடுகளுக்கு இங்கிருந்து செல்வோரின் எண்ணிக்கை அதிகம்.
புதிய ஒருங்கிணைந்த முனையம்: இதனால் திருச்சி விமான நிலையத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பயணிகள் எண்ணிக்கை அதிகரித்தாலும் திருச்சி ஏர்போர்ட்டில் பெரிதாக அதிநவீன வசதிகள் எதுவும் இல்லாமலேயே இருந்தது. இதனால் திருச்சி ஏர்போர்ட்டை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வந்தது. இந்த கோரிக்கையை ஏற்று மத்திய அரசு திருச்சி விமான நிலையத்தில் புதிய முனையத்தை அமைக்க முடிவு செய்தது.

இதற்கான கட்டுமானம் கடந்த 2019 பிப். 10ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதைப் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதற்காக 951 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது. 2021 செப். மாதத்திற்குள் இந்த கட்டுமான பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. இருப்பினும் கொரோனா பரவலால் கட்டுமானத்தைத் திட்டமிட்டபடி மேற்கொள்ள முடியவில்லை. இதனால் திட்டத்தை முடிக்க காலதாமதம் ஏற்பட்டது.
கட்டுமான பணிகள் ஓவர்: மேலும் கால விரயம் ஏற்படாமல் இருக்கக் கூடுதலான பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு, இரவு, பகலாக புதிய முனையக் கட்டுமானப் பணிகள் நடைபெற்றது. இப்போது கட்டுமான பணிகள் முடிந்துள்ள நிலையில், கடைசிக் கட்ட தூய்மை பணிகள் நடந்து வருகிறது. அதுவும் கூட இன்னும் ஓரிரு நாட்களில் முடிந்துவிடும் எனத் தெரிகிறது.
இந்த புதிய ஒருங்கிணைந்த முனையம் 60,723 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. 2 அடுக்குகளைக் கொண்ட திருச்சி ஏர்போர்ட்டால் இனி ஒரே நேரத்தில் 4,000 சர்வதேச பயணிகள் மற்றும் 1500 உள்நாட்டுப் பயணிகளைக் கையாள முடியும். புதிய ஒருங்கிணைந்த முனையம் திறக்கப்பட்ட தேவையான பணிகள் நடந்து வருகிறது. இதற்கிடையே இது புதிய ஏர்போர்ட்டின் போட்டோக்கள் இப்போது வெளியாகியுள்ளது.

வேற லெவல் டிசைன்: திருச்சி ஏர்போர்ட்டின் உட்புற படங்கள் பார்க்கவே வியக்க வைக்கும் அளவுக்கு இருக்கிறது. பளபளக்கும் வெள்ளை நிறத்தில், வெளிநாட்டு விமான நிலையங்களுக்கு நிகராக அட்டகாசமாக இந்த ஏர்போர்ட் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோல வெளிப்புறத்திலும் கோயில் கோபுரம் போன்ற வடிவமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. இது பார்க்க அந்தளவுக்குத் தத்ரூபமாக இருக்கிறது.
மேலும், மிகப் பிரம்மாண்டமாக அமைந்துள்ள இந்த ஏர்போர்ட்டில் அனைத்து நுழைவாயில்களும் கோயில் நுழைவாயில்களைப் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த படங்கள் இணையத்தில் டிரெண்டாகும் நிலையில், விமான நிலையம் எப்போது திறக்கப்படும் எனப் பலரும் கேள்வி எழுப்ப ஆரம்பித்துவிட்டனர்.












Click it and Unblock the Notifications