பிராங்க் யூடியூபரால் நேர்ந்த கதி.. கையை அறுத்து கொண்டு தூக்கில் தொங்கிய இளம்பெண்.. திருச்சியில் ஷாக்
திருச்சி: ப்ராங்க் வீடியோக்களை வெளியிடும் யூடியூபரால் திருச்சியில் இளம்பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
திருச்சி திருவெறும்பூர் அருகே நவல்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது மகள் தனரக்ஷனா (22). இவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் முதுகலை விஸ்காம் படித்து வந்தார்.
இவர் கடந்த சில மாதங்களாக ப்ராங்க்ஸ்டர் சூர்யாவை காதலித்து வந்ததாக தெரிகிறது. ஆனால் இந்த சூர்யாவுக்கோ தனரக்ஷனா மட்டுமல்லாமல் மேலும் பல பெண்களுடன் தொடர்பிருந்தது தெரியவந்தது.

சென்னையில் சூர்யாவை சந்தித்த ரக்ஷனா
இந்த நிலையில் தனரக்ஷனா கடந்த 5ஆம் தேதி சென்னையில் சூர்யாவை சந்தித்துளளார். அப்போது சூர்யாவுக்கு பல பெண்களுடனான தொடர்பு குறித்து கேட்டார். ஆனால் அவர் முறையாக பதில் அளிக்காமல் அந்த பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதையடுத்து திருச்சிக்கு திரும்பிய தனரக்ஷனா சூர்யாவை செல்போனில் தொடர்பு கொண்டார்.

அலட்சியம்
ஆனால் அவர் அழைப்பை ஏற்காமல் தொடர்ந்து அலட்சியப்படுத்தியதால் மன உளைச்சல் அடைந்துள்ளார். சூர்யாவால் மிகுந்த விரக்தியடைந்த தனரக்ஷனா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கைகளை பிளேடால் அறுத்துக் கொண்டு தூக்கிட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

மருத்துவர்கள் அறிவுரை
தூக்கு போட்டுக் கொண்ட தனரக்ஷனாவை மீட்ட அவரது பெற்றோர் உடனடியாக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரை கொண்டு சென்றனர். ஆனால் அங்குள்ள மருத்துவர்கள், அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தியதால் அந்த பெண்ணை துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

போலீஸார் வழக்குப் பதிவு
அப்போது அங்கு தனரக்ஷனாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக நவல்பட்டு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். யூடியூபர் சூர்யா விரைவில் கைது செய்யப்படுவார் என தெரிகிறது. யூடியூபில் பிராங்க் வீடியோக்கள் மூலம் பிரபலமான சூர்யா இது போல் எத்தனை பெண்களை ஏமாற்றியுள்ளார் என்பது குறித்து விசாரணை நடத்தப்படும். மாணவியின் நண்பர்களிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த மாணவியின் செல்போனும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications