Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருச்செந்தூர் முருகனுக்கு சர்ப்பக் காவடி சுமக்கும் சங்கரலிங்கபுரம் பக்தர்கள் - அரோகரா முழக்கம்

சங்கரலிங்கபுரத்தில் இருந்து முருகப்பெருமானுக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்கள் சர்ப்பக்காவடியை சுமந்து செல்கின்றனர்.

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவிலில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ள நிலையில் விருதுநகர் மாவட்டம் சங்கரலிங்கபுரத்தில் இருந்து முருகப்பெருமானுக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்கள் சர்ப்பக்காவடியை சுமந்து செல்கின்றனர். அப்போது பக்தர்கள் எழுப்பிய அரோகரா முழக்கம் கேட்டவர்களை மெய்சிலிர்க்கச் செய்தது.

Sankaralingapuram devotees take Sarpa kavadi for Tiruchendur Subramaniaswamy temple

முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்கள் காவடியை சுமந்து கொண்டு ஆடிப்பாடி மகிழ்ந்து இறுதியில் கோவிலை அடையும்போது மனதில் உள்ள பாரங்கள் குறைந்து புத்துணர்ச்சி பெறுகின்றனர்.

காவடி சுமப்பது காரணம் இல்லாமல் இல்லை. அதற்கும் புராண கதை ஒன்று உள்ளது. இடும்பன் அசுரனாக இருந்தாலும் சிறந்த பக்திமான். அகத்திய மாமுனிவர் இமயமலைச் சாரலில் இருந்த இரண்டு மலை சிகரங்களுள் ஒன்றை சிவனாகவும் இன்னொன்றை சக்தியாகவும் வழிபட்டு வந்தார். அவை சிவகிரி என்றும் சக்திகிரி என்றும் அழைக்கப்பட்டது. அந்த இரு மலைகளையும் பொதிகை மலைக்கு கொண்டுவர விரும்பினார். அத்தகைய பலம் தருவதற்கு முருகப்பெருமானை வழிபட்டார்.

Sankaralingapuram devotees take Sarpa kavadi for Tiruchendur Subramaniaswamy temple

முருகன் அருளால் அந்த இரண்டு சிகரங்களையும் தூக்கிக்கொண்டு கேதாரம் வரை வந்தவர் அங்கு சிறிது நேரம் ஓய்வெடுத்தார். அப்போது இடும்பனும் அவன் மனைவி இடும்பியும் அகத்தியரை வணங்கி அருள்புரிய வேண்டினார்கள். அகத்திய முனிவரோ இடும்பனை நோக்கி இந்த இரண்டு மலைகளையும் தென் திசை நோக்கி பொதிகை மலையில் கொண்டு வந்து வைத்தால், உமக்கு பேரும் புகழும் கிடைக்கும் என்றார்.

அகத்தியரின் கட்டளையை ஏற்று இடும்பன் மலையைத் தூக்கும் ஆற்றலைத் தரவேண்டும் என்று வேண்டினான். அவரும், முருகனுடைய மூலமந்திரத்தையும் வழிபடும் முறையையும் கற்றுத் தந்தார். முனிவரை வணங்கியபடி முருகப்பெருமானை நினைத்து மூலமந்திரத்தை ஜெபித்தான். அப்போது, அஷ்ட நாகங்கள் கயிறுகளாக அவனிடம் வந்தன. பிரம்மதண்டம், புஜதண்டமாக தோள் மீது சுமக்கின்ற தடியாக வந்தது. குறுமுனிவரின் தவத்தையும், முருகனின் ஆற்றலையும் கண்டு வியந்தான்.

Recommended Video

    திருச்செந்தூர் முருகனுக்கு சர்ப்பக் காவடி சுமக்கும் சங்கரலிங்கபுரம் பக்தர்கள் - அரோகரா முழக்கம்

    நாகக் கயிறுகளை உறிகளாக்கி, இரண்டு மலைகளை தூக்கி, உறிகளில் வைத்தான். பிரமதண்டத்தை தோள் மீது வைக்கும் தடியாக்கி, இரண்டு பக்கங்களிலும் பக்கத்துக்கு ஒன்றாக மாட்டி, முருகப்பெருமானின் மூல மந்திரத்தை நினைத்து, முழங்காலை ஊன்றியபடி பிரம்மதண்டத்தைத் தோளில் வைத்து முருக நாமத்தைக் கூறியபடி எழுந்தான்.

    சிவகிரி சக்திகிரியை காவடி போல தோளில் சுமந்து கொண்டு வந்தான். அனைத்தையும் அறிந்த முருகப்பெருமான் அந்த மலைகளை திருவாவினன்குடியில் நிலைபெற்றிருக்க திருவிளையாடல் புரிந்தார். வழியெங்கும் சுமை தெரியாமல் இருக்க முருகநாமத்தைப் பாடியபடி வந்தான். வழியில் சற்று இளைப்பாற எண்ணி காவடியை இறக்கி வைத்து ஓய்வெடுத்தான்.

    இளைப்பாறுதல் முடிந்ததும் காவடியைத் தூக்க முயன்றான். முன்பு போல் கனமாக இருந்தது. இடும்பியும் அவனோடு சேர்ந்து தூக்க முயன்றாள். ஆனால் அசைக்கக் கூட முடியவில்லை. அதைப்பார்த்து சிறுவன் ஒருவன் சிரித்தான். ஏற்கனவே தூக்க இயலாத கோபத்தில் இருந்த இடும்பன், சிறுவனை அடிக்கப் பாய்ந்தான், அவனால் முடியவில்லை. மாறாக மயக்கமடைந்து விழுந்தான்.

    இடும்பனின் மனைவிக்கு வந்தது சிறுவனல்ல பழனிமலை முருகன் என்று புரிந்து கொண்டாள். ஐயனே எனக்கு மாங்கல்யபிச்சை அருள வேண்டும் என்று கெஞ்சினாள். மனமிறங்கிய முருகப் பெருமான் அருள்புரியவே, இடும்பன் எழுந்தான். இருவரும் முருகப்பெருமானை வணங்கி மகிழ்ந்தார்கள். அப்போது முருகன், இடும்பனே, இந்த இரண்டு மலைகளும் இங்கேயே இருக்கட்டும். இந்த இருமலையின் மேல் யாம் எழுந்தருளி பக்தர்களை காப்போம். இம்மலையின் அடிவாரத்தில் நீ காவலாக இரு. சக்திகிரி, சிவகிரியை நீ சுமந்தது போல், பக்தர்களும் சுமந்து வந்து தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற பெறுவார்கள் என்று அருளினார். அன்று முதல் பக்தர்கள் முருகனுக்கு காவடி சுமந்து சென்று வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர்.

    சர்ப்பக் காவடி சிறப்பு

    முருகப்பெருமானுக்கு பக்தர்கள் வேண்டிக்கொண்டு பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்பக் காவடி, அக்னி காவடி, சந்தனக் காவடி, சர்க்கரைக் காவடி, சர்ப்பகாவடி, மச்சக்காவடி, இளநீர் காவடி, வேல் காவடி, கரும்புத் தூளி காவடி என பல காவடிகள் சுமக்கின்றனர். இதில் சர்ப்பக்காவடி சிறப்பானது. நல்ல பாம்பினைக் காவடியில் கட்டிக்கொண்டு வந்து காணிக்கை செலுத்துவது சர்ப்பக் காவடியாகும். சர்ப்பக்காவடி எடுப்பவர் கடும் விரதம் இருப்பார்கள். சர்ப்பக் காவடி எடுப்பவர்கள் 41 நாள் விரதம் இருப்பார்கள். அவர்கள் கனவில் ஒரு குறிப்பிட்ட பாம்பை காட்டில் எந்த இடத்தில் இருக்கிறது என்று கனவு வருமாம். அவர்களும் அந்தக் காட்டில் போய் ஒரு குறிப்பிட்ட அந்த இன பாம்பை போய் பிடித்து அதை ஒரு பெட்டியில் வைத்து உப்பிட்டு கொண்டு வந்து, அதைக் காவடியாக சுமந்து வந்து திருச்செந்தூர் கடற்கரையில் விடுவார்கள். அது வேறு எங்கும் யாருக்கும் தொந்தரவு செய்யாமல் நேரே கடலின் உட் பகுதிக்கு சென்று விடும்.

    இந்த சர்ப்பக் காவடி முன்னாட்களில் ஒவ்வொரு ஆண்டும் நிறையவே வரும். இப்போது எப்போதாவது அபூர்வமாகத்தான் வருகிறது. இப்படி சர்ப்பக் காவடி எடுப்பது அவரவர்களின் நம்பிக்கை. விருதுநகர் மாவட்டம் சங்கரலிங்கபுரத்தில் இருந்து முருகப்பெருமானுக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்கள் சர்ப்பக்காவடியை சுமந்து செல்கின்றனர்.

    சர்ப்பக்காவடியை எடுத்து பக்தரின் தலையில் வைத்த போது அங்கு கூடியிருந்த சங்கரலிங்கபுரம் ஊர் பொதுமக்களும் பக்தர்களும் எழுப்பிய அரோகரா முழக்கம் விண்ணை எட்டியது. இன்று முதல் பாதயாத்திரையாக சென்று சர்ப்பக் காவடியை முருகப்பெருமானுக்கு காணிக்கையாக செலுத்துவார்கள்.

    திருச்செந்தூரில் மாசித்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. வரும் 16ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. இந்த ஆண்டு மாசித்திருவிழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அரசு அனுமதி அளித்துள்ளதால் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக முருகனைக் காண காவடி சுமந்து சென்று சென்று கொண்டுள்ளனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+